அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை

அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமநாத அய்யனார்
அம்மன் பூரணைபுஷ்கலை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சூரக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது, ஏர்க்கலப்பையில் கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார் விவசாயி, அந்தக் கல்லில் காட்சி தந்தருளியவர் அய்யனார். “இங்கே கோயில் கட்டி என்னைக் கும்பிட்டா, உங்க மொத்த ஊரையும் மக்களையும் நான் காப்பாத்தறேன்என்று அய்யனார் சுவாமி அருள, அவருக்குச் சிலை வைத்து சின்னதாகக் கோயில் கட்டி வழிபட்டனர். சுமார் 80 வருடங்களுக்கு முன்பு கேரளச் சித்தர் ஒருவர், இந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வந்து, அங்கேயே சில காலம் தங்கினார். அவரைப் பிள்ளையார் கோயில் சாமியார் என்றே அழைத்தனர். பிறகு, பரமநாத அய்யனார் கோயிலுக்கு அருகில் குடிசை அமைத்துத் தங்கினார். மிளகு, கண்டந்திப்பிலி மாதிரியான பொருட்களை மண்பானையில் இட்டுக் கஷாயம் தயாரித்து, அதையே உணவாக அருந்துவார் அந்த சாமியார். அய்யனாரை தரிசிக்க வந்தவர்கள், சாமியாரையும் வணங்க அவர்களுக்கு கஷாயத்தை தீர்த்தமாகத் தருவார்.

பிறகு, அவர் ஒரு மண்டலம் கடும் விரதமிருந்து, வேள்வியெல்லாம் செய்து, அய்யனார் சுவாமிக்கு சக்தியேற்ற, அய்யனார் சுவாமியின் புகழ் வெளியூர்களுக்கும் பரவியது என கூறப்படுகிறது. பொங்கல் திருநாளில் சூரக்கோட்டை, ஒரத்த நாடு என சுற்றுவட்டார ஊர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக பொங்கலிடுவார்கள். சிலர் ஆடுகோழிகளை பலியிடுகின்றனர். அதே போல் பவுர்ணமியில் அய்யனாருக்கும் தேவியருக்கும் சந்தனக் காப்பு, அமாவாசையின் போது விபூதிக் காப்பு என அலங்கரிப்பர். அப்போது தரிசித்தால் மண்ணும் பொன்னாகும்; மங்கலம் யாவும் சேரும் என்கின்றனர் பக்தர்கள். ஐயப்பன், வாபர், முனியாண்டவர், பேச்சியம்மன், பொம்மிவெள்ளையம்மாள் சமேதராக மதுரைவீரன், கன்னிமூல கணபதி, வடிவழகி அம்மன் ஆகியோரை இங்கு தரிசிக்கலாம்.

திருவிழா:

ஆடித் திருவிழா, ஐப்பசி மாத உத்திராட நட்சத்திரத்தில் கிடாவெட்டு மற்றும் சிறப்பு பூஜை,

வேண்டுகோள்:

குழந்தைகளை தீயசக்தி அண்டாமல் இருக்க பேச்சியம்மனையும், கோரிக்கைகள் நிறைவேற மதுரை வீரனையும், நினைத்தது நிறைவேற கன்னிமூல கணபதியையும் வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் அய்யனாருக்கு நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 108 கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து கணபதியை வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *