அருள்மிகு சனீஸ்வரர் கோயில், கல்பட்டு
அருள்மிகு சனீஸ்வரர் கோயில், கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம்.
+91- 4146 – 264 366, 97868 65634 , 94451 14881
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சனீஸ்வரர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கல்பட்டு | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சனீஸ்வரருக்கு ஒரு கால் ஊனம் என்பது அறிந்த விஷயம். தனக்கு கிடைக்காத சாகாவரம் தனக்கு பிறக்கப்போகும் மகன் இந்திரஜித்திற்காவது கிடைக்க வேண்டும் என இராவணன் விரும்புகிறான். இதற்காக கடும் தவம் செய்கிறான். தேவர்கள் கவலை கொள்கின்றனர். கிரகங்களெல்லாம் இராவணனுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில், சனியின் பார்வை குழந்தையின் மீது பட வழியே இல்லாமல் போகிறது. நாரதர் சனீஸ்வரனிடம், “எப்பாடு பட்டேனும் குழந்தையை ஒருமுறை பார்த்து விடு” என்கிறார். அதன்படி, குழந்தை பிறக்கவும் சனீஸ்வரன் பார்த்து விடுகிறார். பாடுபட்டு செய்த தவம் வீணாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் சனியின் காலில் அடித்து காலை ஒடித்தான் இராவணன். இதன்பிறகு சனி நொண்டிக்கொண்டே நடக்க வேண்டியதாயிற்று. அவரது கால் கட்டையானது என்றும் சொல்வர். இதன்படி சனீஸ்வரரின் ஒரு கால் காக வாகனத்தில் இருப்பது போல சிலை வடிக்கப்பட்டுள்ளது.
பிரும்மானந்த சுவாமியால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சனீஸ்வரன் சன்னதி முன்பு அமர்ந்து அமைதியாக பிரார்த்தனை செய்து வர வேண்டும். நுழைவிடத்தில் உள்ள பிரணவ கணபதி சிலை இங்குள்ள ஒரு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். தேசிங்குராஜா வணங்கிய கணபதியாக இது கருதப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் வலம்புரி விநாயகர் ஆவார்.
சனீஸ்வரர் வழிபாடு பெருகி வருகிறது. அவர் பயமுறுத்தும் கடவுள் அல்ல. நியாயஸ்தர்; தவறு செய்வோரை மட்டுமே தண்டிப்பார். அவருக்கு சூடம் ஏற்ற வேண்டாம், எள்ளையும், எண்ணெயையும் ஊற்றி காக்கா மீதிருக்கும் அவரையே “காக்கா” பிடிக்க முயல வேண்டாம். அர்ச்சனை செய்வதன் மூலம் உங்கள் குறையைச் சொல்ல வேண்டாம். உண்டியல் போட்டு அவரைச் சரிக்கட்ட முயல வேண்டாம். உங்கள் குறையை நீங்களே அவரிடம் சொல்லுங்கள். அவர் குறை தீர்ப்பார் என்ற அடிப்படையில் ஒரு அமைதியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இத்தலம். வெறும் சனீஸ்வரர் மட்டுமல்ல; உச்சிஷ்ட கணபதி, 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர் (புவனேஸ்வரர்), புவனேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர், 8 அடி உயர தண்டாயுதபாணி, 18 அடி உயர அஷ்டாதசபுஜ துர்க்கை ஆகியோருக்கும் தனித்தனி விமானங்களுடன் சன்னதிகள் பிரம்மாண்டாமாக உள்ளது. சிலைகள் அனைத்தும் பிரம்மாண்டமாக கலை நுட்பத்துடன் விளங்குகிறது.
21 அடி உயரத்தில் நின்ற நிலையில் திருவிழிகள் கருணைப் பார்வை பார்க்க, கருப்பும், நீலமும் கலந்த உடையணிந்து காட்சி தரும் சனீஸ்வரர், இடக்காலை தரையில் வைத்து, வலக்காலை பிரம்மாண்டமான காக வாகனத்தின் மீது ஊன்றி காட்சி தருகிறார்.
திருவிழா:
சனிப்பெயர்ச்சி
வேண்டுகோள்:
சனிதோஷ நிவர்த்தி பெற இங்கு சென்று, பிரார்த்தனை செய்து வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
சனிக்கிழமை தோறும் எள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபடலாம்.
Leave a Reply