அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர்
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்.
+91- 98402 84456 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பட்டினத்தார் | |
தலவிருட்சம் | – | வில்வம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவொற்றியூர் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சிவசருமர், சுசீலை தம்பதியருக்கு, சிவபெருமானே மகனாகப் பிறந்தார். மருதவாணர் என்றழைக்கப்பட்ட இவரை, இதே ஊரில் வசித்த திருவெண்காடர் – சிவகலை தம்பதியர் தத்தெடுத்து வளர்த்தனர். திருவெண்காடர் வணிகம் செய்து வந்தார். மருதவாணரும் வளர்ப்புத்தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் வியாபாரத்திற்கு சென்று திரும்பிய மருதவாணர், தவிட்டு உமியால் செய்த எருவை மட்டும் கொண்டு வந்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட தந்தை, எருவை வீசியெறிந்தார். அதற்குள் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்ட ஓலை இருந்தது. “மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது” என்பதை உணர்ந்தார் திருவெண்காடர். பின் இல்லறத்தை துறந்த அவர், பிறப்பற்ற நிலை வேண்டி சிவனை வணங்கினார். துறவியானார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் இத்தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. அங்கிருந்த சிலரை அழைத்த வெண்காடர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் மூடவே, இலிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்” என்று அழைக்கப்பட்டார்.
வங்காளவிரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. இராஜகோபுரம், விமானம் கிடையாது. வில்வமே இங்கு தலவிருட்சம். பட்டினத்தாரை சிவனாகவே கருதி பூஜை செய்யப்படுகிறது. பட்டினத்தார் சன்னதி நுழைவுவாயில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபடுபவர்கள் பணிவாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். எதிரில் நந்தி இருக்கிறது. பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்யப்படுவது விசேஷம். பட்டினத்தார் பிறந்த நட்சத்திரமான உத்திராடம், வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. பட்டினத்தார் சன்னதி முகப்பில் 27 நட்சத்திர தீபம் உள்ளது. இவருக்கு அபிஷேகம் செய்யப் பட்ட விபூதியை, பிரசாதமாக தருகிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.
திருவிழா:
ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபூஜை.
வேண்டுகோள்:
பட்டினத்தார், துறவியாக வந்தவர் என்பதால் இவரிடம் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஏதேனும் பொருளை செலுத்துகிறேன் என்று வேண்டுவதில்லை. கோரிக்கையை மட்டும் சொல்லி வணங்குகிறார்கள். ஏதேனும் உபகாரமாக நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லி வேண்டினால், அந்த செயல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
Leave a Reply