அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம்

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம், ராமநாதபுரம் மாவட்டம்.

நீராடல் : எல்லாநாட்களிலும் எல்லாகாலங்களிலும் காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீராடலாம்

மூலவர் நவகிரகங்கள்
தீர்த்தம் கடல் தீர்த்தம் (அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம்)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவிப்பூர் (தேவிபுரம்)
ஊர் தேவிபட்டிணம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன், தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டிணத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்காரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டிணமாக வழங்கிவருகிறது.

படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் இராவணன். ஆனால் இராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே இராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது. இராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த இராமன் சீதையை மீட்பதற்காக தென்திசைநோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி இராமபிரானும் உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது. பின்பு 15 கி.மீ., தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்தார். இராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணல் எடுத்து, நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. இராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம்.

பார்வதி பரமேஸ்வரனும் இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளியுள்ளார். சேது தலத்தை தரிசித்தாலே முன் கர்மபாபங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் ஏற்படும்.

திருவிழா:

பத்து நாள் ஆடி அமாவாசை திருவிழா, தை அமாவாசை.

கோரிக்கைகள்:

முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம்.

நேர்த்திக்கடன்:

நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம், தானம் செய்தல், தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.

எச்சரிக்கை:

மாந்தி தோசம் கழிக்கவேண்டும் என்று சோதிடர்கள் மக்களை ஏமாற்றி இங்கு அழைத்துவந்து ஹோமம் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதற்கு சிவாச்சாரியார்கள்தான் முக்கிய காரணம். அதற்கு கட்டணம் 15000 முதல் 25000 வரை. காரணம் கேட்டால் கோதானம்என்று கூறுகின்றனர். எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *