அருள்மிகு குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு குமரன் திருக்கோயில், நீலா தெற்கு வீதி, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 99941 98391, 94429-29270 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

மெய்கண்டமூர்த்தி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

நாகப்பட்டினம்

மாவட்டம்

நாகப்பட்டினம்

மாநிலம் தமிழ்நாடு

இந்தக் கோயிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். இந்தக் கோயிலில், முருகனுக்கு மெய்கண்டமூர்த்திஎன்ற பெயர் விளங்கியது. பேச்சு வழக்கில் குமரன் கோயில்என்றானது. நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.

தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான். இதன் காரணமாக, மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் குபேரர் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது. விநாயகர், குபேரன், துர்க்கை, நவக்கிரகங்கள், விஸ்வநாதர், விசாலாட்சிக்கு சன்னதிகள் உள்ளன. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இங்கு முருகன் தோல் நோய் தீர்க்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூச 10 நாள் திருவிழா, ஐப்பசி அமாவாசையில் (தீபாவளி) குபேரருக்கு பூஜை.

வேண்டுகோள்:

தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *