அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வெண்ணெய் மலை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வெண்ணெய் மலை, கரூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பாலசுப்பிரமணியர் |
|
தீர்த்தம் | – |
தேனுதீர்த்தம் |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
வெண்ணெய் மலை |
|
மாவட்டம் | – | கரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு, தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. அவருக்குப் பாடம் புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது. பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார். இதற்கு தீர்வாக வஞ்சிவனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோகப் பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள், பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது. அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலைப் பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது. இவ்விடத்தில் நின்றாலே துன்பங்கள் தொலைந்து பந்தபாசத்தை ஒழிப்பதற்குரிய ஞானம் பிறக்கிறது. இம்மலையில் முருகப்பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளினார்.
யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறியச் செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்துக் கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் இயந்திரம் அமைத்தார். மூர்த்தி, தீர்த்தம் மற்றும் தலம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்திருத்தலத்திற்கு வந்து பாலசுப்பிரமணியனை பணிந்தால், வளமான வாழ்க்கை அமைகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வெண்ணெய்மலை முருகன் கோயில் ஆகியவற்றில் மட்டுமே கருவூரார் சித்தருக்கு சன்னதிகள் உள்ளன.
திருவிழா:
கார்த்திகை மாதம் – கார்த்திகை நட்சத்திரம் மற்றும் திங்கட்கிழமைகள், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய தினங்கள் சிறப்பு தினங்களாக வழிபடப்படுகிறது.
வேண்டுகோள்:
மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லாக் குறை தீர்வதுடன், தோஷங்களும் தீர்கிறது.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply