அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில், கொருமடுவு, கெம்பநாயக்கன்பாளையம்
அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில், கொருமடுவு, கெம்பநாயக்கன்பாளையம், சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பால தண்டாயுதபாணி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
கொருமடுவு |
|
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இயற்கையான சூழலில் மலைகள் சூழ்ந்த இரம்மியமான இடத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது கொருமடுவு பால தண்டாயுதபாணி ஆலயம். தன்னிகரற்ற அருளுடன் முருகன் இங்கே மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். முருகனின் திருவிளையாடல் நடந்த இடம் அல்லது முருகன் சிவ வழிபாடு செய்த தலங்களில் மட்டுமே மேற்கு பார்த்த முருகன் கோயில் அமையும். அந்த வகையில் இதுவும் சிறப்பான கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்வில் ஒரு முறையாவது தெய்வங்களின் திருமணத்தை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற நியதிப்படி இங்கு நடைபெறும் ஈசன் ஈஸ்வரியின் திருமணம் அனைவரும் காணவேண்டிய அற்புதமான காட்சியாகும். பொதுவாக ஈசனுக்கு இடப்பாகத்தில் ஈஸ்வரி அமர்வது ஐதீகம். ஆனால் இந்த ஆலயத்தில் ஈசனுக்கு வலது பாகத்தில், வடக்கு நோக்கி அமர்ந்து வலது காலை தொங்கவிட்டு, இடதுகாலை மடித்து அம்பாள் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. இத்தலத்தில் ஏகபாத மூர்த்திக்கு (சிவன், விஷ்ணு, பிரம்மா) முன்பாக அக்னி குண்டம், பச்சைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மகத்தி, சிசுகத்தி போன்ற பழி பாவங்கள் தீர பக்தர்கள் அக்னி குண்டம் தாண்டுகின்றனர். பச்சைப்பந்தலில் நுழைந்து ஏகபாத மூர்த்திகளை வணங்கிவிட்டு சிறப்பு வழியாக வெளியே வருகிறார்கள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில், இந்த வழிபாடால் பாண்டிய மன்னனுக்கு பிரம்மகத்தி தோஷம் நிவர்த்தியானது. அந்த முறைப்படி இந்த வழிபாடு இங்கும் நடக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தாரும் தத்தமது குலதெய்வங்களுக்கே முதல் பூஜை செய்து வணங்க வேண்டும் என்ற நியதிப்படி, குல தெய்வமான செல்வநாயகிக்கும் இங்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. ஆலமரத்தினடியில் தன் துணைவியை மடியில் அமர்த்தியபடி தெற்கு பார்த்து காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி. கல்வி, ஞானம், திருமணம் நடக்க குருபலம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, தொழில்வளம், நல்ல மனைவி, நல்ல மக்கள் ஆகிய செல்வங்கள் அனைத்தையும் இவரை நேரடியாக வணங்கிப் பெறலாம். ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் இந்த சக்தி தட்சிணாமூர்த்திக்கு உடனே பலன் கொடுக்கும் சக்தி உண்டு என்கின்றனர். பக்தர்கள் நேரடியாக சந்திரசேகரர், மங்களாம்பிகை, முருகன், வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு தாங்களே நேரிடையாக பூப்போட்டு வணங்குவதும் இத்தலத்தின் சிறப்பு. மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் கிழக்கு பார்த்த சன்னதியில் சேவை சாதிக்கின்றனர். பழநியைப்போலவே இத்தல முருகன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது மேலும் சிறப்பு.
திருவிழா:
பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி.
வேண்டுகோள்:
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள முருகப்பெருமானையும், கல்வி, ஞானம், திருமணம் நடக்க, குருபலம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, தொழில்வளம், நடைபெற இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply