அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு
அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு, சிமிழி போஸ்ட், செம்பங்குடி வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.
+91- 4366 – 269 235, +91- 94435 00235 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நர்த்தனபுரீஸ்வரர் (ஆடவல்லார்) | |
அம்மன் | – | பாலாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சங்கு தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தலையாலங்கானம் | |
ஊர் | – | திருத்தலையாலங்காடு | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர் |
தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார்; மானைத் தன் கையில் ஏந்திக்கொண்டார்; முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம் இது. கபில முனிவர் பூஜித்த தலம். சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.
கோயிலின் முன்பு தீர்த்தம் உள்ளது. இது மிகவும் விசேஷமானது. இதில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்டநோய் நீங்கபெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிக்கையாகும்.
சிறிய ஊர், கோயில் தெற்கு நோக்கியது. சுவாமி அம்பாள் கோயில்கள் மட்டுமே உள்ளன. சுவாமி சந்நிதியில் விநாயகர், விசுவநாதர், தலவிநாயகர், முருகன், பைரவர், நால்வர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் அழகான மேனி. அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதி. இக்கோயில் “எண்கண்” கோயிலுடன் இணைந்தது. அருகாமையில் எண்கண், குடவாயில் பெருவேளூர், முதலிய திருமுறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத் தலங்களும் உள்ளன.
தேவாரப்பதிகம்:
மெய்த்தவத்தை வேதத்தை வேதவித்தை விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை எய்த்தவமே உழிதந்த ஏழையேனை இடர்க்கடலில் வீழாமே ஏறவாங்கிப் பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப் புனல் கரந்திட்டு உமையொடொரு பாகம் நின்ற தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 93வது தலம்.
திருவிழா:
தை அமாவாசை, மாசி சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.
பிரார்த்தனை:
வெண்குஷ்டம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும், என்பதும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தித்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply