அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம்.

+91- 94439 43665, +91- 94430 47302 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர்
அம்மன் பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சேஷபுரி, திருப்பாம்புரம்
ஊர் திருப்பாம்புரம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

விநாயகர் கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார். பின்னர் அஷ்ட மகா நாகங்களும், இராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களையும் தண்டிக்கலாகாது என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும்படியும் சிவனை வேண்டினர்.

மகாசிவராத்திரியன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வேண்டி சாபவிமோசனம் பெறலாம் என சிவன் அருளினார்.

இது தவிர இன்னொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. இதனால் வாயுபகவான் தன் வலிமையால் மலைகளை புரட்டி போட, ஆதிசேஷன் தன் வலிமையால் அதனை தடுத்தி நிறுத்தியது. இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை தடுத்து நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கியது. பின்னர் திருப்பாம்புரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மன்னிப்பு கேட்டது. சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர். இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

இந்த கோயில் திருநாகேசுவரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பபெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.

மற்ற கோயில்களில் இருப்பதைப்போல் இராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

இராஜகோபுர வாயிலைத் தாண்டி உட்சென்றால் இடப்பால் திருமலையீசர் சன்னிதி உள்ளது. இக்கோயிலின் கன்னி மூலையில் நின்று பார்த்தால் திருவீழிமிழலை விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது. தற்போது மரங்கள் மறைக்கின்றன.

சட்டனாதர் சன்னிதி விசேடமானது. தல வினாயகர் இராஜராஜ வினாயகர். பிரகாரத்தில் தல விருட்சமாகிய வன்னியைக் கானலாம். அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியது. ஒருகையில் தாமரையும் மறுகையில் உருத்திராக்க மாலையும் கொண்டு அபய முத்திரையோடு அற்புதமாகக் காட்சியளiக்கிறாள். அடுத்துள்ள மண்டபத்தில் பிரம்மா, பைரவர், சூரியன், மஹா விஷ்ணு, ஆதி சேடன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சனீஸ்வரன் ஆகியோர் மூல உருவங்கள் வரிசையாக உள்ளன. மூலவர் உள் நுழைந்ததும் நேரே இருக்கிறார். நாக கவசம் சாத்தப்பட்டு அருமையாக காட்சியளிக்கிறார். உற்சவ மூர்த்தங்களில் சுப்பிரமணியர் மூர்த்தம் மிகவும் விசேடமானது. இராகு, கேது இருவரும் ஒரே கல்லில் உள்ள சிற்பம் உள்ளது.

தேவாரப்பதிகம்:

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான் நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 59வது தலம்.

திருவிழா:

சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 – 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட இராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், இலக்னத்திற்கு 2ல் இராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, இராகுவோ இருந்தால், இராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

காரைக்கால் கும்பகோணம் ( வழி ) பேரளம் சாலையில் கற்கத்தி வந்து அங்கிருந்து செல்லும் சிறிய சாலையில் வந்தால் ஊரை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். திருவீழிமிழலைக்கு அருகில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *