அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில், அம்பல்

அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில், அம்பல், வழி பூந்தோட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

+91 4366 238 973 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீசுவரர்
அம்மன் சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை, வண்டமர் பூங்குழலி, வம்பவனப் பூங்குழலி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், அன்னமாம் பொய்கை, சூலதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அம்பர்பெருந்திருக்கோயில், பிரமபுரி, புன்னாகவனம்
ஊர் அம்பர், அம்பல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

திருமால், பிரமன் ஆகிய இருவருமே தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன். இந்த அனல் பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறிய இறைவனது உரையின்படி, திருமால் பன்றி உருவம் கொண்டு அடியைக் காண புறப்பட்டுத் தேடி, தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்துசென்று முடியைக் காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார். பெருமன் பிரமனை அன்னமாகும்படி சபித்தார். பிரமன் பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரமனும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி, அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கிப் பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது.

துர்வாச முனிவருக்கு மதலோலா என்ற தேவகன்னிகையால் தோன்றிய அம்பரன், ஆம்பரன் ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர். பெருமான் கட்டளைப்படி அம்பிகை காளியை நோக்கினாள். காளி கன்னி உருவோடு வந்தாள். இருவரும் அம்மையை, சாதாரண பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும். கொலைப்பழி தீரக் காளி, திருமாகாளத்தில் இறைவனைப் பூஜித்து அருள்பெற்றார்.

சம்காரசீலன் ஒரு அரக்கன். தேவர்கள் இந்த அரக்கனுக்கு பயந்து, பிரம்மன் கட்டளைப்படி இத்தலத்தில் குடியேறினர். இறைவன் தேவர்களைக் காக்க கால பைரவரை ஏவி அவனைக்கொன்று அமரர்கட்கு அருள்புரிந்தார்.

விமலன் என்ற அந்தணன் தீர்த்தயாத்திரை செய்துகொண்டே வந்து, இத்தலத்தில் தங்கி பல்லாண்டுகள் வழிபட்டான். காசிக்கங்கையை இறைவன் இங்கு வரச்செய்து வேண்டும் வரங்கள் அருளினான்.

மன்மதபாணம் பலிக்காமல் போகக்கடவது என்று கூறிய விசுவாமித்திரரின் சாபம் நீங்க மன்மதன் இத்தலத்தை அடைந்து வழிபட்டு சாபநீக்கம் பெற்றான். நந்தகூபன் என்னும் அரசன் புலித்தோல் உடுத்த, முனிவரைப் புலியெனக்கருதி அம்புவிடுத்த குற்றத்தினால் பிரமகத்தி தொடரப்பட்டு இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு பிரமகத்தி நீங்கப்பெற்றான். இத்தலத் திருக்கோயிலைத் திருப்பணி செய்தும் விழாக்கள் நடத்தியும் மகிழ்ந்தான்.

திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ் இருந்து ஜம்புகேஸ்வரரை முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட பெரும்பேற்றால் கோச்செங்கட்சோழ மன்னராகப் பிறந்து யானை ஏறாத எழுபது மாடக்கோயில்களைக் கட்டியவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அம்மன்னர் செய்த கோயிலே இது. ஜம்புகேஸ்வரர் ஆலயமும் இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம்.

பெருந்திருக்கோவில் என்பது யானையேறாதவாறு படிக்கட்டுகள் அமைந்துக் குன்றுபோல் செய்யப்பட்ட மாடக்கோவில் என்பதாகும்.

இராஜகோபுரம் 3 நிலைகளைக்கொண்டது. உள்ளே சென்றால் விசாலமான இடம். சுதையாலான பெரிய நந்தி உள்ளது. இடப்பக்கம் உள்ள கிணறு அன்னமாம் பொய்கை என்று வழங்கப்படுகிறது. பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம் உள்ளது. படிக்காசு வினாயகர் சன்னிதியில் அடுத்தடுத்து மூன்று சிறிய வினாயக மூர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் வினாயகர், சுப்பிரமணியர், மஹாலக்ஷ்மி, ஜம்புகேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. அம்பாள் சன்னிதி தனியே உள்ளது. தெற்கு நோக்கியது. சன்னிதிக்கு வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சன்னிதியும் பள்ளியறையும் உள்ளன. வலம் முடித்து மேலேறிச் சென்றால் சோமாஸ்கந்தர் சன்னிதியும் மறுபுறம் வினாயகர், கோச்செங்கட்சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோரது மூலத்திருமேனிகளும் உள்ளன. துவாரபாலகர்களையும், வினாயகரையும் வணங்கிச்சென்று சிறிய வாயில் வழியாக உள்ளிருக்கும் மூலவரை தரிசிக்கலாம். மூலவரின் பின்னால் சோமாஸ்கந்தர் காட்சியளiக்கிறார். வலப்பால் நடராஜ சபை. இக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக வினாயகர், தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர் . இக்கோவிலில் 4 கல்வெட்டுக்கள் உள்ளன. இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியவை.

தேவாரப் பதிகம்:

எரிதர அனல்கையில் ஏந்தி யெல்லியில் நரிதிரி கானிடை நட்ட மாடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.

திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 54வது தலம்.

திருவிழா:

மாசி மகம், மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசிஅன்னாபிஷேகம்.

பிரார்த்தனை:

வேண்டும் வரம் கிடைக்க இத்தல அம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *