அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம்
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம், நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
+91- 4368 – 261 447 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐராவதீஸ்வரர் | |
அம்மன் | – | வண்டமர் பூங்குழலி , சுகந்தகுந்தளாம்பிகை | |
தல விருட்சம் | – | பாரிஜாதம் | |
தீர்த்தம் | – | வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கோட்டாறு | |
ஊர் | – | திருக்கொட்டாரம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை. வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளிக் காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். அவர் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு, மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடற்புராண வரலாறு. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.
சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட “சுபர்” தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங்கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது. தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடு கட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் – சுபமக ரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்றத்தில் உள்ளது. முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுகமகரிஷியும் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோடு – கரை. வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு எனப்பட்டது. வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு எனவும் பெயர் வந்திருக்கலாம். அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். மூன்று நிலை இராஜகோபுரத்துடன் நாற்புறமும் மதில் சூழ அழகுற விளங்குகிறது. உள்ளே கொடிமரமும், துவார கணபதி சிலையும் உள்ளன. கொடி மரத்தின் வடபுறம் அகத்திய இலிங்கம் கொண்ட தனிச் சன்னதி மேற்குமுகம் கொண்டு திகழ்கிறது.
அதன் பின்னே, கிழக்குத் திருமாலைப்பத்தியில் சூரியன், சந்திரன், பைரவர் போன்ற சிலாரூபங்களும்; நவகோள் நாயகர் சன்னதியும் உள்ளன. கொடிமரத்தின் நேரே மண்டப வாயிலின் மேலே சுதைவடிவ கயிலை தரிசனம் கண்குளிர வைக்கிறது. வாயிலின் இடப்புறம் பாலகணபதி வீற்றுள்ளார். வலப்புறம் மதில் மேல் பழமையான கண்டாமணியொன்று காணப்படுகிறது. முதலில் இருபது தூண்களை உடைய முன் மண்டபம் வவ்வால் நெத்தியமைப்புடைய கூரையைக் கொண்டு திகழ்கிறது. அதனுள் வலப்புறம் அம்பாள் சன்னதி அர்த்தமண்டபமும், மூலஸ்தானமும் கொண்டு விளங்குகிறது.
அம்பாள் நின்ற கோலத்தில் நம்மை ஆட்கொள்கின்றாள். வண்டார்குழலியென்று அழைக்கப்படும் இவ்வம்மையை சம்பந்தர் கோலவார் குழலாள் என்று வர்ணிக்கின்றார். எழிலுடன் திகழும் அம்பிகையை வணங்கியபின், முதல் வாயிலுள் நுழைந்து மகாமண்டபத்தை அடைகிறோம். அங்கே உற்சவர் அறை உள்ளது. நடுவாக நடராஜப்பெருமானும், சிவகாமி அம்மையும் வீற்றிருக்க, இவருக்கு எதிரே ஓர் வாயில் உள்ளது. இங்கே செப்புத் திருமேனியாக உள்ள முருகன் வில்லேந்தி அருள்புரிகின்றார். உடன் சோமாஸ்கந்தரும் தரிசனமளிக்கின்றார்.
அடுத்து, ஸ்தபன மண்டபம், அதன் இருபுறமும் கணபதி மற்றும் நாகராஜர் வீற்றுள்ளனர். வடக்கேயும், தெற்கேயும் இரு வாயில்கள் காணப்படுகின்றன. பின்னர் அர்த்த மண்டபம். அதன் வடமேற்கு மூலையில் போக சக்தி, உற்சவ விக்ரமாய் காட்சியளிக்கின்றாள். கருவறை இரண்டு அடுக்குகளைக் கொண்டு அழகிய விமானத்தோடு மனதை ஈர்க்கின்றது. கருவறையுள் சிறிய சுயம்புலிங்கமாக மூலவர் உள்ளார். ஆலய வலம் வருகையில் மடைப்பள்ளியை ஒட்டி தல விருட்சமான பாரிஜாத மரம் மணம் வீசுகிறது.
தென்மேற்கு மூலையில் கன்னிமூல கணபதி தனியே சன்னதி கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார்.
மேற்குத் திருமாலைப் பத்தியில் கிழக்குப் பார்த்தவாறு சுந்தரர்– பரவை நாச்சியார், கைலாசநாதர், நால்வர், சுப மகரிஷி, நாகராஜர், ஓர் சிவலிங்கம் என வரிசையாக தரிசனமளிக்கின்றனர். மேற்கில் கந்தன் சன்னதியும், வடமேற்கில் கஜலெட்சுமி சன்னதியும் உள்ளது. வடக்கு பிராகாரத்தில் சண்டேசர் சன்னதியும் அதனருகே கிணறும் உள்ளன.
இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் “ராசராசப் பாண்டி நாட்டு உத்தமச் சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்” என்று குறிக்கப்படுகிறது. இக்கோயிலைக் கட்டுவித்தவன் “சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க சோழ கேரள ராசன்” ஆவான் (காலம் கி.பி.1253), கல்வெட்டில் இறைவனின் பெயர், “இராசேந்திர சோழீசுவரமுடைய மகாதேவர்” என்று காணப்படுகின்றது.
தேவாரப்பதிகம்:
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய் கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைக ளன்னஞ் சேர்ந் தழகாய் குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே என்று எழுவார்கள் நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே.
–திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 53வது தலம்.
திருவிழா:
ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம்.
பிரார்த்தனை:
திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வழிகாட்டி:
திருக்கொட்டாரம், காரைக்கால் – மயிலாடுதுறை பேருந்து சாலையில் உள்ள வேலங்குடியிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அம்பகரத்தூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை ஆட்டோ மூலம் சென்றடையலாம். அனைத்து வசதிகளும் காரைக்கால் மற்றும் திருநள்ளாறில் உள்ளது.
Leave a Reply