அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்(கோளிலி நாதேஸ்வரர்) திருக்கோயில், திருக்குவளை
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்(கோளிலி நாதேஸ்வரர்) திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4366 – 329 268, 245 412 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர் | |
அம்மன் | – | வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை | |
தல விருட்சம் | – | தேத்தா மரம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கோளிலி, திருக்குவளை | |
ஊர் | – | திருக்குவளை | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
சிவபெருமானின் திருமுடி கண்டதாகப் பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் இலிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் “பிரம்மபுரீஸ்வரர்” ஆனார்.
நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலம் “கோளிலி” ஆனது. இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.
“டங்கம்” என்றால் “கல் சிற்பியின் சிற்றுளி” என்று அர்த்தம். “விடங்கம்” என்றால் “சிற்பியின் உளி இல்லாமல்” என்று பொருள். “சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்” தானே உருவான இயற்கை வடிவங்களை “சுயம்பு” அல்லது “விடங்கம்” என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 இலிங்கங்கள் சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன.
ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என இந்திரன் கேட்க, தாங்கள் பூஜை செய்து வரும் “விடங்க லிங்கத்தை” பரிசாக தாருங்கள் என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த இலிங்கத்தை தர மனதில்லை.
தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றை தர நினைக்கிறான். ஆனால் முசுகுந்தன் “செங்கழுநீர் பூவின் வாசம் உடைய” உண்மையான சிவலிங்கத்தை, தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார். இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற இலிங்கங்களையும் முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விடுகிறார். ஏழு இலிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன. அவை திருவாரூரில் “வீதி விடங்கர்,” திருநள்ளாறில் “நகர விடங்கர்,” நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்,” திருக்குவளையில் “அவனி விடங்கர்,” திருவாய்மூரில் “நீலவிடங்கர்,” வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்,” திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்” என அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் “வண்டு நடனம்” ஆடி தரிசனம் தருகிறார்.
வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இலிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணித் தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் “திருக்குவளை” ஆனது. சுவாமி, அம்மன் சன்னதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில் பீமன் பகாசூரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் இத்தலத்தில் நீங்கியது.
சுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை, திருவாரூர் பரவையாளர் மாளிகைக்கு கொண்டு செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார். பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.
இத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார்.
மிக அழகிய, சற்றே பெரிய கோயில். எதிரில் குளம் உள்ளது. கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதி. அழகான ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் வலப்புரம் வசந்த மண்டபம். துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் கோபுரம். நேரே தெரிவது கோளிலிநாதர் சன்னிதி. தென்பால் தியாகேசர். எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகார வலம் வரும்போது தென்மேற்கில் தியாகவினாயகரும், விஸ்வநாதரும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீஸர் முதலிய சன்னிதிகளும் உள்ளன. அழகிய முருகன் சன்னிதி. அது தாண்டி நால்வர், மஹாலட்சுமி சன்னிதிகள். அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியது. தனிக்கோயிலாகவுள்ளது. சபாநாதர் தரிசனம் அழகானது. இது கோளிலித்தலமாகையால் நவக்கிரகங்கள் ஒருமுகமாக தென்திசையை நோக்கியுள்ளன. இறைவன் கர்பக்ரகிரத்தின் வடபுறம் அர்த்தனாரீஸ்வரர், பிரம்மா, துர்கை மற்றும் உமாமகேஸ்வரர் உள்ளனர். தென்புறம் நடராஜர், தக்ஷிணாமூர்த்தி உள்ளனர். இரண்டாம் கோபுரத் தென்மதிலில் பஞ்ச பாண்டவர் பூசித்து வழிபடும் கோலமும், பிரம்மா வழிபடுவதும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. சுவாமி அம்பாள் கோயில்களுக்கிடையில் அகத்தியர் பூசித்த இலிங்கம் உள்ளது. அது தனியாக கர்பகிருக, அர்த மண்டபத்துடன் உள்ளது. சண்டீசர் சன்னிதியும் உள்ளது.
மூலவர், வெண்மணலாலான லிங்கம். மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். எப்போதும் செப்புக்குவளை சார்த்தியே காணப்படுகிறார். இந்த தேவஸ்தானம் தியாகராஜஸ்வாமி தேவஸ்தானம் என்று வழங்கப்படுகிறது. பகாசுரனை கொன்ற பாவம் தீர பீமன் இங்கு வழிபட்டான் என்பது வரலாறு. முன் கோபுரத்தில் பீமன் வழிபட்ட லிங்கம் உள்ளது. ஆலயத்துக்கு அண்மையில் சந்திரநதி கிழக்கு நோக்கிஒடுகிறது. எதிரில் பிரம்ம தீர்த்தமும், தென்புரம் இந்திர தீர்த்தமும், மேற்புரம் அகத்திய தீர்த்தமும், சிவலோக வினாயகர் கோயிலருகில் வினாயக தீர்த்தமும் உள்ளன. இக்கோயிலுக்கு சடாவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் முதலிய சோழ பாண்டிய மன்னர்கள் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் செய்துள்ளதை, கல்வெட்டுச்சான்று எடுத்துரைக்கின்றது.
தேவாரப்பதிகம்:
பலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை குவினான் குளிரும் பொழில் கோளிலி நிலவினான் தனை நித்தல் நினைமினே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 123வது தலம்.
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.
பிரார்த்தனை:
நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வழிகாட்டி:
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் நாலு ரோடு பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து கொளப்பாடு செல்லும் சாலையில் 9கீமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டி – நாகை சாலையில் அமைந்துள்ள தலம். திருவாரூரிலிருந்தும், நாகையிலிருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி இருப்புப் பாதையில், திருநெல்லிக்காவலில் இறங்கி, கிழக்கே 10 கீ.மீ தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.
Leave a Reply