அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (திருச்செம்பொன்பள்ளி), செம்பொன்னார்கோவில்
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (திருச்செம்பொன்பள்ளி), செம்பொன்னார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்
+91-99437 97974 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுவர்ணபுரீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | சுகந்த குந்தளாம்பிகை | |
தல விருட்சம் | – | வன்னி, வில்வம் | |
தீர்த்தம் | – | சூரிய தீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருச்செம்பொன்பள்ளி, இலக்குமிபுரி, கந்தபுரி, இந்திரபுரி | |
ஊர் | – | செம்பொனார்கோவில் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் |
பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன், தன் மகள் தாட்சாயிணியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார். தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயிணி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது, ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும், தட்சன் நிந்தித்து விடுகிறார்.
தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார்.
அத்துடன் சிவனிடம் தட்சனைத் தண்டிக்கும்படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்காரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும், சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவனும் தாட்சாயிணியை மன்னித்து, “சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய்” என்று அருள்பாலிக்கிறார். சிவனின் சொல் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார். இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். எனவே முருகப்பெருமான், சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக்கூறினார். இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் தான் சிவபெருமான் வீரபத்திரராகத் தோன்றுகிறார். இத்தல இறைவனை வழிபட்டுத்தான், இரதி, மன்மதனைத் தன் கணவனாக அடைந்தது. இரண்டு கரங்களே உடைய சுகந்த குந்தளாம்பிகை தேவிக்கு, புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்தளாகி, சுகந்தவன நாயகி, மருவார் குழலி என்ற திருநாமங்களும் உண்டு. சித்திரை மாத அமாவாசையிலும், வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும்.
லட்சுமி, திருமாலைத் தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான். எனவே தான் இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்று பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு.
கோயில் அழகுற சோலை நடுவே அமைந்துள்ளது. கோபுரம் கிழக்கு நோக்கியது. அருகில் தீர்த்தம் உள்ளது. கோச்செங்கட்சோழன் திருப்பணி. கீழே பதினாறும், மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையில் மூலவர் – இலிங்கத் திருமேனி – காட்சியளிக்கிறார். வட்ட வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலாலும், சதுர வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி பிரம்மாவாலும் பூஜிக்கப்பட்டதாகும். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர்கள் உள்ளனர். உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராஜர், சந்திரசேகரர் ஆகிய உற்சவ திருமேனிகள் உள்ளனர். இங்குள்ள பிட்சாடனர் மிகவும் பழமையானது. மகா மண்டபத்தில் வினாயகர், முருகர், சூர்ய சந்திர இலிங்கங்கள் உள்ளன. தெற்கு சுவரில் துறவி ஒருவரோடும், மந்திரி ஒருவரோடும் நின்று வழிபடும் அரசனின் சிற்பம் உள்ளது. இறைவி சன்னிதி தெற்கில் உள்ளது. மேற்கு நோக்கிய சன்னிதி. மேற்கில் தல வினாயகர் – பிரகாச வினாயகர் – உள்ளார். அம்பிகை ஆலயத்திற்கு தென் மேற்கில் சப்த கன்னிகைகள் ஆலயம் உள்ளது. வனதுர்கை, விஸ்வனாதர், சிபிக்காட்சிநாதர் எனப்படும் மான்மழுவேந்திய சிவபெருமான், உருத்ராட்ச மாலையும் சக்தி ஆயுதமும் தரித்த 4 கைகளையுடைய பாலசுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, ஜேஷ்டாதேவி ஆகியன. சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம்.
தேவாரப்பதிகம்:
மழுவாள் ஏந்தி மாதோர் பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபொன் சடையெம் மிறைவனைத் தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 42வது தலம்.
திருவிழா:
சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். இந்த நாட்களில் விசேஷ பூஜைகளும், 9 நாள் பெருந்தேர் விழாவும் “சவுரமகோற்சவம்‘ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை:
நியாயமானதாய் உள்ள கோரிக்கைகளில் எது வேண்டுமானாலும் கேட்கலாம். அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறார்.
குறிப்பாக தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தியானப்பயிற்சி ஆரம்பிப்பது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
நமக்கு எது வசதியோ அதன்படி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்ளலாம். குறிப்பாக புத்தாடை சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
வழிகாட்டி:
மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேவஸ்தான வளைவைப் பின்பற்றி சென்றால் கோயிலை அடையலாம்.
Leave a Reply