அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்(திருப்பறியலூர்), கீழப்பரசலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்(திருப்பறியலூர்), கீழப்பரசலூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364- 205555 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர்
உற்சவர் சம்ஹாரமூர்த்தி
அம்மன் இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா)
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் உத்திரவேதி
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பறியலூர்
ஊர் கீழப்பரசலூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்கு வரம் அளிக்கிறார் சிவன். ஆனால் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான். இதனால் கோபம் அடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தைப் பறித்து விடுகிறார். இதனாலேயே இத்தலம் திருப்பறியலூர்ஆனது.

சிவனின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன். அவன் யாகம் நடத்தும் போது தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்துகிறான். தன்னை மதிக்காமல் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன், தக்கனையும் வீரபத்திரர் மூலம் தண்டித்த தலமே திருப்பறியலூர் ஆகும். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.

எனவே நவகிரகத்திற்கென்று கோயில் இல்லை. தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும் தட்சனையும் அழித்த தலம் ஆகும். இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக அற்புதக்காட்சியாகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.

பழமையான கோயில். மேற்கு நோக்கியது. ராஜகோபுரம் இல்லை. முன்னால் இரும்புப்பந்தல் போடப்பட்டுள்ளது. கோயில் எதிரில் சாலையில் (மறுபுறத்தில்) விநாயகர் கோயில் உள்ளது. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சந்நிதி தெரிகின்றது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். உள் பிராகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, இலிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது. வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இங்கு இறைவனுக்கு தயிர்சாதம், சுத்தன்னம் நைவேத்யம் செய்கின்றனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில் இத்தலம் நான்காவது தலம் ஆகும்.

தேவாரப்பதிகம்:

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான் தெளிந்தார் மறையோர் திருப்பறிய லூரில் மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 41வது தலம்.

திருவிழா:

யாகசம்ஹார மூர்த்திக்கு தமிழ்வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஐப்பசிப்பிறப்பு, புரட்டாசி சதுர்த்தி, தை முதல் தேதி, வைகாசித்திருவோணம் நாட்களில் ஆறு முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சிவன் வீதி உலா வருகிறார்.

பிரார்த்தனை:

சிவபெருமான் வீரம் புரிந்த தலம் என்பதால் அனைத்து வித தோஷ நிவர்த்திக்கும் இங்குவந்து வழிபடுதல் சிறப்பு.

நேர்த்திக்கடன்:

தோஷ நிவர்த்திக்காக சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படுகிறது.

வழிகாட்டி:

வீரட்டேசர் கோயில் என்றால் மக்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் செம்பொன்னார் கோயிலை அடைந்து, அங்கிருந்து வலப்பக்கம் நல்லாடை என்று கைகாட்டி காட்டும் பாதையில் சிறிது தூரம் சென்று, பரசலூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புரமாகத் திரும்பி 2 கீ. மீ சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *