அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர்

அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 246 6939, +91-99431 78294 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் படிக்காசுநாதர் (சொர்ணபுரீஸ்வரர்)
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் அழகம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அமிர்தபுஷ்கரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அரிசிற்கரைபுத்தூர்
ஊர் அழகாபுத்தூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

ஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், “நீங்கள் யார்?” எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார்.

முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள்?” எனக்கேட்டார். “ஓம்என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான் என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார்.

இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை. சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு காட்சி தந்து தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாதுஎன்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, அவர்களை அழிக்க முருகனை அனுப்ப எண்ணினார் சிவன். எனவே, இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்காரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, “கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர்என்று அழைக்கிறார்கள். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாட்சி ஓம்வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசப்பது அபூர்வம்.

நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவன் மீது பக்தி கொண்டிருந்த இவர், அரசலாற்றில் தீர்த்தம் எடுத்து தினமும் சிவபூஜை செய்வது வழக்கம். இவர் மிகவும் வறுமையில் வாடினாலும், பூஜையை மட்டும் விடாமல் செய்து வந்தார். ஒருசமயம் இப்பகுதியில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போதும் புகழ்த்துணையார் கலங்கவில்லை. பூஜையை வழக்கம்போல தொர்ந்தார்.

பல நாட்களாக சாப்பிடாததால், உடல் தளர்ந்த புகழ்த்துணையார் தள்ளாடியபடியே சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்தார். சிவன் சன்னதிக்குள் சென்ற அவர், உடல் வலுவின்றி கீழே சரிந்தார். அப்போது தீர்த்தக் குடம் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. புகழ்த்துணையாரும் இலிங்கத்தின் மீது விழுந்து மயக்கமுற்றார். சிவன் அவரது கனவில் தோன்றி, “என்ன வேண்டுமென கேள்என்றார். புகழ்த்துணையார் கனவிலும், மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டினார். சிவன் அவரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும் கூறினார். அதன்பின் மயக்கம் தெளிந்த புகழ்த்துணையார் பூஜையைத் தொடர்ந்தார். சிவனும், தினமும் ஒரு படிக்காசு கொடுத்தருளினார். பலகாலம் இத்தலத்தில் சிவபூஜை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். சிவன் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

அரசலாற்றின் தென்திசையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. பொதுவாக நவக்கிரக மண்டபத்தில் சூரியனும், சந்திரனும் கிழக்கு திசை நோக்கியே இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவ்விருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எதிரே ஒன்பது குழிகளும் இருக்கிறது. இந்த குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம். இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் நவக்கிரக சன்னதியில் சூரிய, சந்திரனுக்கு பூஜை செய்தும், நவக்கிரக குழியில் தீபமேற்றியும் வழிபடுகிறார்கள்.

புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.

படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர்என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி இலட்சுமியுடன் காட்சி தருகிறார். அருகில் சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம். பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

தேவாரப்பதிகம்:

அரிசிலின் கறை மேலனி யார்தரு புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொடும் பரவிப் பணிவார்க் கெலாம் துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. கும்பகோணம்.

திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 66வது தலம்.

திருவிழா:

மாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை. பிரார்த்தனை:

இங்கு வேண்டிக்கொள்ள, தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கு அமாவாசையன்று பால் பாயச நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

இருப்பிடம் :

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *