அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருநீலக்குடி
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருநீலக்குடி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435 246 0660, 94428 61634 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நீலகண்டேசுவரர் | |
அம்மன் | – | ஒப்பிலாமுலையாள் | |
தல விருட்சம் | – | 5 இலைவில்வம், பலாமரம் | |
தீர்த்தம் | – | தேவிதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தென்னலக்குடி | |
ஊர் | – | திருநீலக்குடி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர் |
யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம். மொத்தம் ஆறு ஆதாரங்கள் உள்ளன. அவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞை முதலியன. இந்த ஆறு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம். குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலன் தரும் விசேச சக்தி படைத்த சிவதலம் இது.
மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அப்போது நாரதர் மார்க்கண்டேயரிடம் திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார். மார்க்கண்டேயரும் இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டது. அதற்கு நன்றிகடனாக மார்க்கண்டேயர் இறைவனைப் பல்லக்கில் வைத்து இளந்துளை, ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இத்தலத்து சித்திரைத்திருவிழா நடத்தப்படுகிறது.
திருநீலக்குடி நீலகண்டேசுவர் என்றாலே, எண்ணெய் அபிஷேகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு, இந்த அபிசேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியும் வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெயால் அபிசேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை சுவாமியின் மீது ஊற்றி அபிசேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிசேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சிவலிங்கத்திற்குள்ளேயே (உறிஞ்சி) இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும், குடம் குடமாக கொட்டி அபிசேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிசேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும். அபிசேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிசேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்குப் பதிலாக சொர சொரப்பாகவே இருக்கிறது. இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால், அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிசேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.
இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம் என்றாலும் கூட கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். அம்மரத்தில் காய்க்கும் பலாபழத்தை முழுப்பழமாக எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது. அதை மீறி எடுத்துச் செல்பவர்கள் இறைவனால் தண்டனை அடையப்பெறுவார்களாம். பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டாம்.
தட்சனின் யாகத்திற்கு சென்ற தாட்சாயினி அவமரியாதை பெற்று திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து, இறைவனோடு ஒன்றுபட்டார்.
பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன், காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம். வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம். அப்பர் பெருமானால் ஆத்மார்த்தமான தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். “கல்லினோடு அவன் கையர்” என்று தன்னைக் கல்லோடு கட்டிப் போடும்போது அப்பர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.
தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம். இத்தல விநாயகர் நர்த்தனகணபதி எனப்படுகிறார்.
இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர். ஒப்பில்லா முலை அம்மன்(அனுபமஸ்தினி) திருமணக்கோலத்தில் உள்ளார். மற்றொருவர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றுபவள் (பக்தாபிஷ்டபிரதாயினி) தபசு கோலத்தில் உள்ளார்.
தேவாரப்பதிகம்:
கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக்குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழல் சோதியே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 32வது தலம்.
திருவிழா:
சித்திரை மாதம் – பிரம்மோற்சவம் – 18 நாட்கள் திருவிழா – வாகனங்களில் மார்க்கண்டேயாரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் வீதியுலா செல்வார். அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சுவாமி செல்வார். 18 வது நாளில் எலந்துறை(பவுண்டரீகபுரம்)என்ற ஊரில் சுவாமி அருள்பாலிப்பார். இது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்கள், வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பிரார்த்தனை:
பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். இந்த பிரார்த்தனைக்காக பக்தர்கள் இத்தலத்துக்கு பெருமளவு வருகின்றனர். இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், இராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
இத்தலத்தில் சுவாமிக்கு எண்ணெய் அபிசேகம் செய்வது மிகவும் விசேசம். அத்துடன் சிவனுக்குரிய அபிசேகப் பொருட்களால் அபிசேகம் செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.
Leave a Reply