அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம்.

+91-4288-255 925, 93642 29181 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர்
அம்மன் பாகம்பிரியாள்
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் தேவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கொடிமாடச் செங்குன்றூர்
ஊர் திருச்செங்கோடு
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, “முனிவரே. சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்என சாபமிட்டாள். இதையறிந்த சிவன், “நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லைஎனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் அர்த்தநாரீஸ்வரர்எனப்பட்டது. “அர்த்தநாரீஎன்றால் இணைந்த வடிவம்எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு. திருச்செங்கோடு என்பதற்கு அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலைஎன்றும், “செங்குத்தான மலைஎன்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது.


இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம். இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து இரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர்.

இம்மலைக்கு நாககிரி, வாயுமலைஎன்றும் பெயர்கள் உண்டு. சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர். காமதேனு சிவனை வழிபட்டு, ஐந்து மலைகளைப் பெற்றாள். ஐந்துள் ஒன்று இந்த மலை என்றும் ஒரு புராணக் கதை வழங்குகிறது. இம்மலையை, பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது. 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுக்களை சத்தியப்படிக்கட்டு என்பர். பல வழக்குகள் இந்த படியில் தீர்க்கப்படுகிறது. சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன. சுயம்பு மூர்த்தியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. பிரதானமாகச் சிவப்புப் பாறைகள் இருந்தாலும், ஆங்காங்கே மஞ்சள் கலந்தது போலவும் தெரிகிறது. மலையே, ஆண் அம்சமும் (சிவப்பு) பெண் அம்சமும் (மஞ்சள்) நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரமுள்ள மலை. மலையடிவாரத்தில், ஊருக்குப் பிரதானமாக ஒரு கோயில் உள்ளது. அருள்மிகு பரிமளவல்லி உடனாய அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில். கயிலாச நாதருக்கு ‘நிலத் தம்பிரான்’ என்றும், மலை மீதுள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு ‘மலைத் தம்பிரான்’ என்றும் திருநாமங்கள் உண்டு. 1,200 படிகள் ஏறி மலைக் கோயிலுக்குச் செல்லலாம். தேவஸ்தானப் பேருந்துகள் மலைப்பாதையில் கோயில் வரை செல்கின்றன. தனியார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கும் மேலே போக அனுமதி உண்டு. மலைக் கோயிலில் மாலை 6 மணிக்கு நடை மூடி விடுவார்கள். வாகனங்கள் மலையேற, மாலை 5.30 வரை மட்டுமே அனுமதி.
படிகளேறிப் போகும்போது, வழியில் இளைப்பாறுவதற்கு மண்டபங்கள் உள்ளன. தைலி மண்டபம் இவற்றுள் ஒன்று. இதற்கு அருகில், நந்தி ஒன்று இருக்கிறது. இந்த நந்திமீது பக்தர்கள் பலர் வெண்ணெய் பூசுகிறார்கள். சற்றுத் தள்ளி, கிட்டத்தட்ட 60 அடி நீளமுள்ள ஐந்து தலை நாகத்தின் உருவம். படிகளேறிப் போகும் பாதை வளைந்து வளைந்து (பாம்பு போலவே) செல்கிறது. வாகனப்பாதை மலையைச் சுற்றிக் கொண்டு, எதிர்ப்பக்கமாகச் செல்கிறது. நடந்து செல்லும் பாதை, மலையுச்சியில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்தில் கொண்டு விடுகிறது. இதுவே, கோயிலின் வடக்கு கோபுரம். வாகனப் பாதையில் வந்தால், கோயிலின் மேற்கு கோபுரத்தை அடைந்து விடலாம். வடக்கு ராஜ கோபுரத்தை அடைந்து விட்டோம். உயரமாக, அழகாக, நிறைய சுதைச் சிற்பங்களோடு இருக்கிற கோபுரம். உள்புகுந்தால், கோயில்புறத்தில், 20 படிகள் கீழிறங்க வேண்டும். கீழிறங்கினால், இப்போது நாம் நிற்பது கோயிலின் பிராகாரம். வெளிப்பிராகாரம் என்று சொல்லலாம். இந்தப் பிராகாரத்திலிருந்துதான் சந்நிதிகளுக்கும் சந்நிதி முன்மண்டபங்களுக்கும் செல்ல வேண்டும். நாம் இருப்பது வடக்குத் திருச்சுற்று. முதலில், பெரிய ஆதிசேஷன் உருவம். ஐந்து தலைகளுடன் படமெடுத்து நிற்கிறது. அடுத்தது சங்கமேஸ்வரர் சந்நிதி (மேற்குப் பார்த்த மாதிரி). சங்கமேஸ்வரருக்கு வலப் பக்கம், தெற்குப் பார்த்த மாதிரி வேதநாயகி அம்மன். அடுத்து, தெற்கு நோக்கிய காலபைரவர். கொள்ளை அழகாக இருக்கிறார். நான்கு கரங்களும், மந்தகாசப் புன்னகையுமாக வாகனத்தோடு இருக்கும் நின்ற திருக்கோல பைரவர். கிழக்கு வாயிலைக் கடந்து, வலம் தொடர்ந்து, தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். இந்தச் சுற்றில் பிராகாரம் சரிவாக இறங்குகிறது. சில இடங்களில் பிராகாரம் உயரத்தில் இருக்க, நடுவில் கோயில் மண்டபமும் சந்நிதிகளும் சற்றே பள்ளத்தில் இருப்பதுபோலத் தோற்றம் தருகின்றன.
தெற்குச் சுற்றில் சப்தமாதர்கள். அடுத்து வரிசையாக அறுபத்துமூவர். தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர். மேற்குத் திருச்சுற்றில் குன்றீசர், பர்வதவர்த்தினி உடனாய ராமநாதசுவாமி, பஞ்சலிங்கங்கள். இப்படியே, மேற்கு கோபுரத்தை அடைந்து விடுகிறோம். வாகனத்தில் வந்தால், உள்ளே வரும் வாயில் இதுதான். மூன்று நிலை கோபுரம். தொடர்ந்து வலம் வருகிறோம். வடக்குச் சுற்றில் திரும்பியவுடன் நாச்சாரம்மன். அடுத்து ஜேஷ்டாதேவி. மண்டபத்தின் பக்கமாக செல்வ விநாயகர். இந்தச் சுற்றில், ஒரு தனிச் சந்நிதியில் மல்லிகார்ச்சுனர். இன்னொரு கிழக்குப் பார்த்த தனிச் சந்நிதியில், சகஸ்ர இலிங்கம். சற்றே தள்ளி, பெரிய இலுப்பை மரம். இதுவே, தல மரம். அருகில், காசி விசாலாட்சி. அடுத்திருப்பது, தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி. நடராஜர் சந்நிதியின் அருகில்தான், நாம் உள்ளே நுழைந்த வடக்கு கோபுர வாயில்.
மேற்கு கோபுரத்தின் வழியாக உள்ளே வந்து, பிராகாரத்தைக் கடந்தால், பெரிய மண்டபம் ஒன்றை அடைந்து விடுவோம். இந்த மண்டபத்தில்தான் அர்த்தநாரீஸ்வரர் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை உள்ளன. மேற்கு கோபுர வாயிலுக்கு நேராக உள்ள இவற்றுக்கு அப்புறமாக, ஒரு நாலு கால் மண்டபம். அதே நேர்க்கோட்டில், கல்சுவர் ஒன்று. அதில் சாளரம். சாளரம் வழியாகப் பார்த்தால், உள்ளே இருக்கும் மூலவர் தெரிவார்.

மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் சிறந்த சிற்பங்கள் உள்ளது. புலியோடு சண்டை போடும் வீரன்; யாழிசைக்கும் பெண்; மேலே வரிசையாக பூத கணங்கள். இந்த மண்டபத்தின் தெற்குப் பகுதியில் கிழக்குப் பார்த்ததாக ஒரு சந்நிதி. அருள்மிகு நாகேஸ்வரர்; சிவலிங்கத் திருமேனி. அவருக்கு எதிரில் நந்தி. இந்த மண்டபத்திலிருந்து, வடக்குத் திருச்சுற்றை அடைந்து, அங்கிருந்துதான் மூலவர் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். சொல்லப் போனால், இந்த முன் மண்டபத்துக்கு நேர் பின்னால்தான், செங்கோட்டுவேலர் சந்நிதியும், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியும் (சாளரம் வழியாக இவரைப் பார்க்கலாம்) உள்ளன. இருப்பினும், பிராகாரத்துக்குச் சென்று, அங்கிருந்து பக்கவாட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும். வடக்குத் திருச்சுற்றில் முதலில் பார்த்தோமே, பெரிய ஆதிசேஷன் வடிவம். அதற்கு எதிரில் நுழைகிறோம். இங்கும் ஒரு மண்டபத்தை அடை கிறோம். முன் மண்டபத்தை விட அளவில் சிறியது என்றாலும், அழகில் அதற்கு ஈடானது. இங்கும் நிறைய தூண்கள். தூணெல்லாம் பொங்கி வழியும் சிற்பங்கள். ஒரு தூணிலிருந்து வீரபத்திரர் அருளுகிறார். குறி சொல்லும் பெண், மேளம் அடிக்கும் கட்டியக்காரன், யாழினி, அர்ஜுனன் தவக்கோலம், நாட்டியப் பெண் என்று எங்கு திரும்பினாலும் அழகு. சில தூண்களை, கீழே நான்கு சிம்மங்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. வேளாள கவுண்டர் மண்டபம் என்றழைக்கப்படும் இந்த மண்டபம், கிருஷ்ண தேவராயரால் கட்டப் பெற்றதாகும். ஒரு தூணில், ராயரும் இருக்கிறார்.

தேவாரப்பதிகம்:

ஓங்கிய மூவிலை நற்சூலம் ஒருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கணிந்து கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன் தாள்தொழுவர் வினையாய பற்றறுமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், இராகுதோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *