அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.
+91- 431-276 8546, 94439-19091, 97918 06457 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள் | |
அம்மன் | – | காந்திமதியம்மை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சிவதீர்த்தம், நாக தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | முக்கீச்சுரம் | |
ஊர் | – | உறையூர் | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர் |
சோழஅரசர் ஒருவர் யானை மேல் உலா வந்தபோது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர் சூட்டினான்.
பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையைக் கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் “திருமூக்கீச்சுரம்” என்று பெயர் ஏற்பட்டது.
ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவித் தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடிப் பாவ விமோசனம் பெற்றான். இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன் நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார். இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு இவ்வாறு காட்டியதால், இவருக்கு “ஐவண்ணப்பெருமான்” என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் “உறையூர்” எனப்பட்டது. நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளகஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக “உள்ளடக்கி இங்கே உறைவதால்(வசிப்பதால்)” ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்துக்கு வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர் என்பவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடியபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது. வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் இரத்தினலிங்கமாகவும், உச்சிக்கால வழிபாட்டில் ஸ்படிக இலிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் இலிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர இலிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார். ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய் பிறை, அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார். இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.
இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
இக்கோயில் கடை வீதியில் அமைந்துள்ளது. கிழக்கு நோகிய முகப்பு வாயில். கல் மண்டபம். உட்சென்றால் பெரிய நந்தியை தரிசிக்கலாம். செப்பு கவசமிட்ட கொடி மரம். கோபுரம் நுழைந்து உட்சென்றால் வலப்பால் அம்மன் சன்னிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். பெயர் காந்திமதி. அம்பாள் கருவறையிலிருந்து வெளிவந்தால் வலம் வரும்போது பறவையின் கால், மனித உடல், யானை முகம் கொன்ட அழகான சிற்பம் உள்ளது. அதன் மறுபக்கத்தில் யானையை கோழி கொத்துகின்ற அழகான சிற்பம் உள்ளது.
கோபுரத்திலிருந்து நேரே பார்த்தால் மூலவர் சன்னிதி. மூலவர் மிகவும் சிறிய சிவலிங்கத்திருமேனி. உள்ளங்கையளவே உள்ளார்.
நடராஜ சபை உள்ளது. மூலவரின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். உள்மன்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் – யானை மீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது அந்த யானையை கோழி கொத்தித் தாக்கும் சிற்பம் – உள்ளது. புகழ்ச்சோழர் திருமேனி உள்ளது. உதங்க மகரிஷியின் எதிரில் நடராஜ சபை உள்ளது.
2 தக்ஷிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன. பெரிய உருவம் மிகுந்த சிற்பக்கலையழகு உள்ளது. சிறியது சோழர் காலத்தியது. திருமாலிற்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிரில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகள் உருவங்கள் உள்ளன. அது தவிர கருவறை வெளிப்பக்கச் சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. இங்கு இறைவனின் பல்வகையான நாட்டிய சிற்பங்கள் காணப்படுகின்றன. சுற்றியுள்ள தூண்களில் ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் மிகுந்த கலையழகு மிக்கன.
தேவாரப்பதிகம்:
நீருளாரும் மலர் மேலுறை வான்நெடு மாலுமாய்ச் சீருளாரும் கழல் தேடமெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கொளிர் தென்னவன் செம்பின் வில்லவன் சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர்செம்மையே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 5வது தலம்.
திருவிழா:
சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோத்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
வழிபட்டோர்: கருடன், காசிபர் மனைவி கத்துரு, மற்றும் அவர்கள் மகன் கார்கோடன் வழிபட்டுள்ளனர்.
பிரார்த்தனை:
கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, பொங்கல் நைவேத்தியம் செய்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வழிபடுகின்றனர்.
Leave a Reply