அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி, அரியலூர் மாவட்டம்.

+91 04329 292 890, 97862 05278 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைத்தியநாதசுவாமி, வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர்
அம்மன் சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம் பனை மரம்
தீர்த்தம் கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மழுவாடி, திருமழபாடி
ஊர் திருமழபாடி
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர்

மார்க்கண்டேய முனிவரின் பொருட்டு இறைவன் மழு ஏந்தி நடனமாடியதால் இத்தலம் மழுவாடி என்று பெயர் பெற்றது . இதுவே பின்பு மழபாடிஎன்றானது என்பர்.

பிரம்மனின் சத்திய லோகத்திலிருந்து புருஷாமிருகம் சிவலிங்கத்தையெடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. அதையறிந்த பிரம்மன் வந்து அச்சிவலிங்கத்தை மீண்டும் பெயர்க்க முயன்றபோது முடியாமல் போகவே,”இது வைரத்தூணோஎன்று சொல்லிப் புகழ்ந்ததால், இத்தல இறைவன் வஜ்ஜிரதம்பேஸ்வரர்ஆனார்.

திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கித் தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,”முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும்போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்என்றது. சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு ஜபேசர்என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள அயனஅரிதீர்த்தக் குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர்வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார். அதன் பின் ஜபேசருக்கும், சுயசாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து, சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.

இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. “நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார். இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது. பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடிஎன்ற பெயரும் உண்டு. இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும்.

தேவாரப்பதிகம்:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 54வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர்.

வழிகாட்டி:

திருச்சியிலிருந்து லால்குடி வழியாக அரியலூர் செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. தஞ்சையிலிருந்தும் வரலாம். கொள்ளிடம் ஆற்றுக்கரையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *