அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர்

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் விஷ்ணம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-4362-320 067, +91- 93450 09344 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும். திருக்காட்டுப் பள்ளியில் உள்ள குருக்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு அதன்பின் கோயிலுக்கு செல்லலாம்.

மூலவர் செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
உற்சவர் கரும்பேஸ்வரர்
அம்மன் சிவயோகநாயகி, சவுந்தரநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கானூர்பட்டி, மணல்மேடு
ஊர் திருக்கானூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கித் தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாகத் தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னிபிழம்பாகக் காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர்ஆனார். அம்மன் சிவயோகநாயகிஆனார். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. சமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்த வீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவைப் பலவந்தமாகக் கவர்ந்து சென்றார். திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனைக் கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு சத்திரிய தோஷம்ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார்.

ஒரு முறை கரிகால் சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள். சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்துயானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது. அப்போது திருக்கானூரில் விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக்கொண்டு உறையூர் சென்றது. சோழமன்னன் ஆனான் கரிகாலன்.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம்.

பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.

தேவாரப்பதிகம்:

நீரும் பாரம் நெருப்பும் அருக்கனும் காரும் மாருதம் கானூர் முளைத்தவன் சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை ஓர்வும் என்றிலர் ஓடித் திரிவரே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 56வது தலம்.

திருவிழா:

ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவனுக்கு சூரிய பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மூலம், தைப்பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை:

திருமணத்தடை உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன் மனைவியருக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் இத்தல வில்வ இலைகளால் செம்மேனிநாதருக்கு அர்ச்சனை செய்தால் நோய் விரைவில் குணமாகும். திருமணத்தில் தடை உள்ளவர்கள், சாளக்கிராமத்தினால் ஆன அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய் தீபமிட்டால் விரைவில் திருமணம் உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து எருக்கமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்துடன் இனிப்பு பொருட்கள் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *