அருள்மிகு தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில், பழவந்தாங்கல்

அருள்மிகு தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில், பழவந்தாங்கல், சென்னை.


தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில் சென்னை பழவந்தாங்கலில் குமரன் தெருவில் இருக்கிறது. தணிகை வேம்படி விநாயகர் என்று பெயர் வரக் காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ந்தேதி முருகன் தலங்களில் வெகு விமரிசையாக நடக்கும் படி உற்சவத்திற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகள், ஊர் பெரியவர்கள் மரியாதை நிமித்தமாக ஆங்கிலேய அதிகாரிகளை சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டியது மரபாக இருந்தது.

ஆங்கிலேயரிடம் வேலை செய்தாலும் புத்தாண்டு தினத்தில் கை கட்டி நிற்க விரும்பாத அரசு ஊழியர்கள், ஊர் பெரியவர்கள் இந்த தர்ம சங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக உருவாக்கியதுதான் படி உற்சவம்.

கோயிலுக்குச் சென்று விட்டோம்“’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். இப்படி உருவான படி உற்சவத்திற்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க இன்றளவும் அது தொடர்கிறது.

இப்படித் தொடர்ந்து தன் நண்பர்களோடு திருத்தணியில் நடக்கும் படி உற்சவத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டவர் சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்த சி.கே. ராமலிங்கம். இவருக்கு இப்போது வயது 87. ஒரு முறை அவ்வாறு படி உற்சவத்திற்குப் போன ராமலிங்கம் குழுவினர் திருத்தணி கோயில் குளக்கரையில் ஒரு விநாயகர் சிலையைக் கண்டார்கள்.

அச்சிலை நானும் உங்களோடு வருகிறேன்என்று சொல்வது போல இருக்க, ராமலிங்கம் அதை அப்படியே தூக்கி தலையில் வைத்துக் கொண்டு திருத்தணியிலிருந்து பழவந்தாங்கலுக்கு நடந்தே கொண்டு வந்தார். சரி, கொண்டு வந்த பிள்ளையாரை எங்கு வைப்பது? வேம்புலி அம்மன் கோயிலுக்கு பின்னால் சற்று தொலைவில் ஒரு கிணறு. அதை ஒட்டி இருந்த மிகப் பெரிய வேப்பமரத்தருகே வசித்த ஓர் அன்பரின் அனுமதியோடு அந்த வேப்பமரத்தடியில் விநாயகர் அமர்த்தப்பட்டார். தணிகையிலிருந்து வந்தவர் என்பதாலும் வேப்பமரத்தடியில் உள்ளதாலும் இவருக்குத் தணிகை வேம்படி சக்தி விநாயகர்என்று பெயர் சூட்டினார்கள்.

அந்தத் தருணத்தில் இங்கு வருகை தந்த காஞ்சி மகா பெரியவர், இந்த விநாயகருக்கு ஆரத்தி காட்டி, இத்தலம் நல்ல முறையில் பிரபலமாகும் என்று ஆசிர்வதித்தார்.

மகானின் கருணையால் ஆலயம் மெல்ல வளர்ந்தது. அன்பர் குடும்பமும் கோயிலுக்காக இடத்தைக் கொடுத்து விட்டு வேறிடம் சென்றது. இன்று ஆலயம் மிக அழகாக, திருமண மண்டபத்தோடு விளங்குகிறது.

கோயில் மிகச் சிறியதுதான். உள்ளே சென்றவுடன் கருவறையில் கோயில் கொண்டுள்ள சக்தி விநாயகரை தரிசிக்கிறோம். இங்கு வந்தமர்ந்த நாள் முதல் தன்னை நாடி வந்தவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்தருளும் நாயகனாகத் திகழ்கிறார் இவர்.

இவருக்கு கொஞ்சம் அறுகம்புல் வைத்து வழிபட நல்ல கல்வி, வேலை கிடைப்பது உறுதி என்கிறார்கள் பலனடைந்தவர்கள். கல்யாணமாக வேண்டிய ஆண்களும் பெண்களும் தொடர்ந்து 48 நாள் இவருக்கு தீபமேற்றி வழிபட, விரைவில் திருமணம் நடந்தேறுகிறதாம்.

இவரை வணங்கி பிராகார வலம் வர சீதாலட்சுமண சமேதராய் ராமனும் அவருக்கு எதிரே அனுமனும் வீற்றிருக்கிறார்கள்.

திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகியோரும் நாகரும் நவகிரகங்களும் அமர்ந்துள்ளார்கள். அண்ணனுக்கு அருகிலேயே வள்ளிதெய்வானையோடு சுப்பிரமணியரும் இருக்கிறார்.

வேம்பும் வில்வமும் தல விருட்சமாக உள்ளது.


கார்த்திகை தினத்தில் இவருக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் நோய் நீங்கும் என்கிறார்கள்.

இத்தலத்தில் சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி தினங்களில் பக்தர்கள் பெருந்திரளாகக் குழுமியிருப்பார்கள். தம் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இங்கு வந்து அன்னதானம் செய்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

சென்னை கடற்கரை தாம்பரம் ரயில் மார்க்கத்தில் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிட நடைதூரத்தில் இருக்கிறது இத்தலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *