அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்
அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435 – 245 6047, 94431 16322 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அருணஜடேசுவரர் | |
அம்மன் | – | பெரிய நாயகி | |
தல விருட்சம் | – | பனைமரம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம் | – | காமிய ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தாடகையீச்சரம், திருப்பனந்தாள் | |
ஊர் | – | திருப்பனந்தாள் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
தாடகை என்ற பெண் இத்தல இறைவனை நாள்தோறும் பூஜித்து வந்தாள். ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது. ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் அப்பெண் வருந்தினாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக்கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன்.
63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. “நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து, மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும், இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.
கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. இத்தல இறைவனை பார்வதி, ஐராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.
இத்தல விநாயகர் “ஆண்ட விநாயகர்” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம். கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கித் திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.
தேவாரப்பதிகம்:
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம்.
திருவிழா:
சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
பிரார்த்தனை:
சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு. குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள்நிறைவேறியவர்கள்இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply