அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு, (திருக்கருப்பறியலூர்), நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 258 833 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்) | |
அம்மன் | – | கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை) | |
தல விருட்சம் | – | கொடி முல்லை | |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை | |
ஆகமம் | – | காரண, காமிய ஆகமம் | |
பழமை | – | 1000வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி | |
ஊர் | – | தலைஞாயிறு | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், சுந்தரர் |
இராவணனின் மகன் மேகநாதன். இந்திரனைப் போரில் வென்றதால் இவனுக்கு “இந்திரஜித்” என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான். இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கியது. விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத இலிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட இராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் “குற்றம் பொறுத்த நாதர்” எனப்படுகிறார்.
விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு. சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் “தலைஞாயிறு” என வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு இலிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் எனத் தல புராணம் கூறுகிறது.
72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களுக்கு அடுத்த பிறவி கிடையாது.
சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் “கருப்பறியலூர்” என வழங்கப்படுகிறது. அனுமன் தோஷம் நீங்கிய தலம். இராவண யுத்தத்தில் இராவணனை கொன்ற தோஷம் நீங்க இராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் “இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா”என்றார். உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் இலிங்கம் செய்து வழிபட்டார். அவரது பிரம்மகத்தி தோஷமும் நீங்கியது. ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் இலிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த இலிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. சிவனைக் குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும் என இராமர், அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, “அனுமனே. நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்” என அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு, தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு இலிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது “திருக்குரக்கா” என வழங்கப்படுகிறது.
இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை “மேலைக்காழி” என்பர்.
கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார்.
சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 27வது தலம்.
திருவிழா:
திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை:
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண் வாரிசு வேண்டுபவர்களும், பெண் வாரிசு வேண்டுபவர்களும் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர்.
Leave a Reply