அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 260 151 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாயாவனேஸ்வரர் |
அம்மன் | – | குயிலினும் இனி மொழியம்மை (கோஷாம்பாள்) |
தல விருட்சம் | – | கோரை |
தீர்த்தம் | – | ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருச்சாய்க்காடு, மேலையூர் |
ஊர் | – | சாயாவனம் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | அப்பர், ஞானசம்பந்தர் |
மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று.
தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர். “சாய்” என்றால் கோரை என்று பொருள் . பசுமையான கோரைகள் மிகுந்திருந்த தலமாதலால் இத்தலம் “சாய்க்காடு” எனப்பட்டது .
இந்திரன் தாயார் தினமும் இந்திர லோகத்திலிருந்து இங்கு வந்து ஈசனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . பூஜை வேளையில் தாயைக்காணாது இந்திரன் ஒருநாள் தொடர்ந்து வந்து பார்க்கையில், அவர் இத்தலத்திற்கு வருவது கண்டான் . தாய்க்காக இத்தலத்தையே அவன் பெயர்த்தெடுக்க முயன்று தனது தேரில் பூட்டியபோது, ஈஸன் தன் கால்விரலால் சற்றே பூமியில் அழுத்த இந்திரன் தேர் எழும்பாதது கண்டான். தன் தவறை உணர்ந்து இத்தலத்து ஈசனிடம் பிழை பொறுத்தறுளுமாரு வேண்டினான் . ஈசனும் அவனை பொறுத்து அருள் வழங்கினார் என்பது தல வரலாறு.
இயற்பகை நாயனார் பிறந்தது இத்தலத்தில்தான்.
இயற்பகையார் மிகச்சிறந்த சிவபக்தர். சிவனடியார் யார் வந்து, எதைக் கேட்டாலும் கொடுத்து, அவரை மகிழ்ச்சி அடையச்செய்வதிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைவார். அவரைச் சோதிக்க வேண்டி, ஈசன் ஒருநாள், சிவனடியார் உருக்கொண்டு வந்தார். அடியாரைக்கண்ட மகிழ்ச்சியில் இயற்பகையார் எதுவாயினும் கேட்குமாறு கூற, இறைவனும் அவர் மனைவியைக் கேட்டார். இயற்பகையாரும் தன்னிடம் இருப்பதை ஈசன் கேட்டானே என்று ஆனந்தப்பட்டு, மிகுந்த பதிவிரதையான தம் மனைவியை அவர் கூட அனுப்பிவைத்தார். தகவல் அறிந்த சுற்றத்தினர், ஈசனை மறித்து சண்டைக்கு அழைக்க, இயற்பகையார் வாளுருவி, தம்மைப் போர் செய்து கொன்ற பிறகே அடியாரை தொடமுடியும் என்று கூறினார். அவரே ஈசனுக்குத் துணையாக ஊர் எல்லை வரை வந்தார். மகிழ்வுற்ற ஈசன் ரிஷபாரூடராய் காட்சியளித்தார் என்பது வரலாறு. இஃது விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
உபமன்யு முனிவர், இந்திரன், அய்ராவதம், இயற்பகை நாயனார் ஆகியோர் வழிபட்ட தலம்.
இக்கோயிலுக்கு அருகில்தான் பூம்புகார் நகரின் காவல் தெய்வமான சம்பாபதி அம்மன் கோயிலுள்ளது. ஓடுகள் வேயப்பட்டு, முன்னால் இரு பூதங்கள் இருக்க குளத்தின் தென்கரையில் உள்ளது.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். யானையேறாக் கோயில். மயிலாடுதுறை – பூம்புகார்ச் சாலையில் பூம்புகார் கிராமத்திற்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகான கிராமம். மயிலாடுதுறையிலிருந்து 21 கீ மீ. சீர்காழி – பூம்புகார் பேருந்தும் இவ்வழியாகத்தான் செல்கிறது. திருவெண்காட்டிலிருந்து 5 கீ மீ தொலைவு.
கோயில் கிழக்கு நோக்கியது. எதிரில் குளம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தால் கொடிமரமில்லை. கொடிமரத்து வினாயகர் மட்டும் உள்ளார். நந்தியும் மாடக்கோயில் உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகை நாயனார், அவர்தம் துணைவி ஆகியோருடைய சன்னிதிகள் உள்ளன. நால்வர் சன்னிதியில் மூவரே உள்ளனர். சிவாலயத்துள்ள வழக்கமான சன்னிதிகளை தொழுது படிகளேறி வந்தால் மூலவர் நேரே காட்சியளிக்கிறார். பின் வாவல் நெத்தி மண்டபம் மற்றும் அம்பிகையின் சன்னிதிகள் வருகின்றன. இங்கு வில்லேந்திய வேலவர் சன்னிதி விசேடமானது. பஞ்சலோகத்திலான திருமேனி. அர்ச்சகரின் விருப்பத்திற்கிணங்க புகைப்படம் எடுக்கப்படவில்லை. நான்கு கரங்களுடன் கம்பீரமாக உயர்ந்த மயிலுடன் காண்போர் கண்களுக்கு விருந்தாக விளங்குகின்றது. இவை நெடுங்காலம் முன்பு கடலில் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. சுவாமி சன்னிதி வாயிலில் இரு தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன. வாயிலின் மேற்புரம் இறைவன் இயற்பகை நாயனாருக்கு காட்சியளித்தது சித்திரமாக தீட்டப்பட்டுள்ளது. மூலவர் சதுர ஆவுடையாரில் குட்டையான பாணத்துடன் கூடிய திருமேனி. அவரைச்சுற்றி ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. வலது பக்கம் நடராஜ சபை உள்ளது.
தேவாரப்பதிகம்
தோடுலா மலர்கள் தூவித்தொழதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்சென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன்மாளச் சாய்க்காடு மேவினாரே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம்.
திருவிழா:
சித்திரை பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது.
ஆடி அம்மாவாஸையில் அன்னமளிப்பு.
சித்திரை, வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப்பந்தல்.
மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு 5 நாள் விழா. அதில் நான்காம் நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம்.
தினமும் 4 கால் பூஜைகள் நடைபெருகின்றன.
அருகாமையிலுள்ள தலங்கள்:
திருநின்றியூர், கீழையூர் ( திருக்கடைமுடி ), பூம்புகார் ( பல்லவனீசம் ), புஞ்சை, குறுமாணக்குடி ஆகியன.
பிரார்த்தனை:
எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள்நிறைவேறியவர்கள்இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.
அருட்பா:
பாய்க்காடு கின்ற வொரு பச்சைமுகில் பரவுஞ்ச்சாய்க்காடு மேவுன் தடங்கடலே
Leave a Reply