அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.
+91- 44 – 2464 1670 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கபாலீஸ்வரர் | |
அம்மன் | – |
கற்பகவல்லியம்மை
|
|
தல விருட்சம் | – |
புன்னை
|
|
தீர்த்தம் | – | கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 ஆண்டுகளுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கபாலீச்சரம், திருமயிலாப்பூர் | |
ஊர் | – | மயிலாப்பூர் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – |
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
பார்வதிதேவி சிவனிடம், “சிவாயநம” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு, குரு தண்டனை கொடுப்பார்.
இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, “எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற” என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.
சிவனைப்போலவே பிரம்மாவும் ஐந்து தலைகளுடன் இருந்தார். இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா, ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல், பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளிக் கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், “கபால ஈஸ்வரர்” என்றழைக்கப்பட்டு “கபாலீஸ்வரர்” ஆனார். கபாலீச்சரம் என்பது இத்தலத்தின் புராணப்பெயர் ஆகும்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து ஆயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இதனால் மகிழ்ந்த இந்திரன், தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அப்போது அவனது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. இதன் அடிப்படையில் இங்கு வள்ளி, தெய்வானை இருவரும் யானை மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். முருகப்பெருமான், மேற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு.
அசுர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகன், மிகவும் அழகாக இருப்பதால் இவரை, சிங்காரவேலர் என்று அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரை வணங்கித் திருப்புகழ் பாடியிருக்கிறார்.
நாயன்மார்களில் பூசலார் அவதாரத் தலம் இது. இவர், தன் மனதையே கோயிலாக பாவித்து, அதற்குள் இறைவன் இருப்பதாக கருதி, எண்ணத்தையே தீபமாக ஏற்றி சுவாமியை வணங்கியவர். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கி அருள்புரிந்தார். அம்பாள் சன்னதி எதிரே இவரது சன்னதி உள்ளது.
பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் 8ம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்தி பெற்றது. அப்போது சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார்.
இத்தலத்தில் புன்னை மரம் தல விருட்சமாக இருக்கிறது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் புன்னை மரம் தலவிருட்சமாக அமைந்தது. பிரகாரத்தில் உள்ள இம்மரத்தை ஒட்டி, சிவன் சன்னதி இருக்கிறது. இவரைப் “புன்னைவனநாதர்” என்றும், “ஆதிகபாலீஸ்வரர்” என்றும் அழைக்கிறார்கள். இவருக்கு பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தின்போது அம்பிகை இச்சன்னதிக்கு எழுந்தருள்கிறாள். அப்போது அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட வைபவமும், பின்பு நிச்சயதார்த்தம், திருக்கல்யாணம் மற்றும் அம்மி மிதித்தல் சடங்கு நடக்கிறது.
வேண்டுவோருக்கு வேண்டியதை தருவது கற்பக விருட்சம். இந்த விருட்சம் தேவலோகத்தில் இருப்பதாக சொல்வர். கற்பக விருட்சம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களைத் தருபவளாக இருக்கிறாள். எனவே இவள், “கற்பகாம்பாள்” எனப்படுகிறாள். இவள் மயில் வடிவில் சிவனை பூஜித்த தலமென்பதால், மயிலை எனப்பட்ட இத்தலம் பிற்காலத்தில், மயிலாப்பூர் என்று மருவியது. புத்திர, திருமண தோஷம் உள்ளவர்களும், கல்வி, கலை பயிலும் மாணவர்களும் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களை காணாமல் இறந்து போனது சரியல்ல என்ற பொருளில் இப்பாடல்கள் அமைந்தன. இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.
மயிலாப்பூரில் வசித்த சிவநேசர் என்னும் வணிகர், சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சமயத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் நீத்தாள். அவளைத் தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார். சம்பந்தர் இங்கு வந்தார். நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக்கூறினார். சிவனை வேண்டிப் பதிகம் பாடினார். பூம்பாவையும் உயிர் பெற்று எழுந்தாள். அவளை மணந்து கொள்ளும்படி சிவநேசர் வேண்டினார். “பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததால் அவள் எனக்கு மகள் முறையாகிறாள்” என்ற சம்பந்தர், திருமணத்திற்கு மறுத்து விட்டார். பூம்பாவையும், இல்லறத்தை வெறுத்து, சிவபக்தையாகவே வாழ்ந்து அவர் திருவடியை அடைந்தாள். இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சன்னதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது.
சிவபெருமான், உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூசத் திருநாளாகும். இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால், பிறப்பற்ற நிலை பெறலாம் என்பது ஐதீகம். இக்கோயிலில் தைப்பூசத்திருவிழா முற்காலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு,
“மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்“
என்று பாடியுள்ளார்.
தற்போது தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று இங்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. அப்போது கபாலீஸ்வரர், கற்பகாம்பிகை, சிங்காரவேலர் மூவரும் தெப்பக்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகின்றனர். அன்று கபாலீஸ்வரருக்கு விசேஷமாக தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்றாலே சட்டென நினைவிற்கு வருவது இங்குள்ள கபாலி தீர்த்தம் ஆகும். சிவன் சன்னதிக்கு எதிரே, கோயிலுக்கு வெளியில் அமைந்துள்ள இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. இதில் மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. மீன்கள், கண்களாலேயே குஞ்சு மீன்களுக்கு உணவு தருவதைப்போல, இத்தலத்து அம்பிகை கற்பகாம்பாளும் தன்னை வேண்டுவோருக்கு பார்வையாலேயே அருள் செய்கிறாள். எனவே இங்கு மீன்கள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. (“ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை“, “மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” – சம்பந்தர், “கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே” – திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.
இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.
அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது. கிழக்கில் உள்ள கோபுரம் இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிந்துள்ளனர். இராமபிரான், வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில், பிரமோற்சவம் நடத்துவித்தார்.
இது, வாயிலார் நாயனார் அவதாரம் செய்த தலம். வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.
தேவாரப்பதிகம்:
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 24வது தலம்.
திருவிழா: பங்குனிப் பெருவிழா - பங்குனி -10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா. பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோச நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர் தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். பிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு.
உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.
நேர்த்திக்கடன்: நோயால் பாதக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவின் 8 ம் நாளில் மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கிறார்கள். தவிர அம்பாளுக்கு புடவை சாத்துதல், சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிசேகம் ஆகியவை செய்யலாம்.
Leave a Reply