அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44-2722 2084 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஏகாம்பரநாதர் | |
அம்மன் | – | காமாட்சி (ஏழவார்குழலி) | |
தல விருட்சம் | – | மாமரம் | |
தீர்த்தம் | – | சிவகங்கை | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | காஞ்சிபுரம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் |
கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாகத் தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணித் தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார். இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில், மணலால் இலிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையைப் பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த இலிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் இலிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு “தழுவக்குழைந்த நாதர்” என்ற பெயரும் இருக்கிறது. காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து, சிவப்பணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது, சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார்.
திருமணத்தின்போது அவரைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது. சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு. தை மாத இரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சிவன், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, திருக்கச்சூரில் ஊன்றுகோல் தந்தார்; காஞ்சியில் இடக்கண் கொடுத்தார்; திருவாரூரில் வலக்கண் தந்தார். இது சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம். சிவ ஆலயப் பிராகாரத்துக்குள், கோயில் முன்மண்டபத்தில், வைணவர்கள் திவ்ய தேசத் தலமான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.
ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது “திருமணகோலம்” என்கிறார்கள். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி “ஏகாம்பரேஸ்வரர்” (ஏகம் – ஒரு; ஆம்ரம் – மரம்) எனப்படுகிறார். இதனை “வேத மாமரம்” என்றும் அழைப்பர். இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லதாவர்கள் இம்மாமரத்தின் கனியைப் புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு, ஈசான பாகத்தில் தியானம் செய்து, சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி, சாந்தி அடைந்ததால் நிலாத்துண்டப் பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது.
இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் உருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் உருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த இலிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இராமர் பிரம்மகத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் “கந்த புராணத்தை” இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
தேவாரப்பதிகம்:
பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
திருவிழா:
பங்குனி உத்திரம் பெருவிழா – 13 நாட்கள் நடைபெறும் – வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம்.
பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோசம், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பிரார்த்தனை:
இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவனிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
கீழே கண்டவை ஒரு வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது. பெயர் தெரியவில்லை. நன்றி.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் மூர்த்தங்கள் வரிசை :
1) ஐந்தாவது பிரகாரம்
கோயில் மதில் சுவர்களை ஒட்டி அமைந்துள்ள மாட வீதி சன்னதித் தெருவில் 16 கால் மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபங்கள் உள்ளன. இம்மண்டபங்களில் புடைப்புச் சிற்பங்கள் கலையழகு மிகுந்தவையாகவும், சில புராண நிகழ்வுகள் கொண்டவையாகவும் பல தெய்வத் திருமேனிகளாகவும் உள்ளன. 16 கால் மண்டபத்தில் ஒரு கம்பத்தில் மேற்கு பார்த்து ஆஞ்சநேயர் சிற்பம் வழிபாட்டில் உள்ளது.
இராஜ கோபுர நுழைவாயிலுக்கு இரு மருங்கிலும் விநாயாகப் பெருமானும், நின்ற வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த ஆறுமுகப் பெருமானும் உள்ளனர். 9 நிலை கொண்ட 192 அடி உயர அழகிய வேலைப்பாடுகளமைந்த இராஜகோபுரம்.
2) நான்காம் பிராகாரம்
இராஜ கோபுரத்தைக் கடந்தால்
1. சரபேசர் மண்டபம்
2. நடராசர் நந்தவனம்
3. கம்பைதீர்த்தம்
4.ஆயிரங்கால் மண்டபம்
5.பல்லவர்கள் கோபுரம்
6.விகடச்சக்ர விநாயகர்
3) மூன்றாம் பிரகாரம்
1. தம்பட்ட விநாயகர்
2.விஷ்ணுவேச்வரர்
3.லிங்கபேசம்
4.மேற்கு கோபுரம்
5.வடக்கில் வேம்பும் அரசும் இருக்க அதனடியில் நாகங்கள் நிறுவப்பட்டுள்ளது.
6.சிவ கங்கை தீர்த்தம்
7.வாலீசம்
8.கச்சிமயானம்
9.கதையாலான பெரிய நந்தி
10.கொடிமரமும், நந்தியும்
11.ரிஷபேசம்
12.கரிகால் சோழன்
4) இரண்டாம் பிரகாரம்
கொடி மரத்திற்கு எதிரில் துவார பாலகர்களை தாண்டி வாயில் வழியே அடையலாம்.
1.பிரதோஷ நாயகர் எழுந்தருளும் மண்டபம்
2.பிரளயகால சக்தி சன்னதி
3.மடைப்பள்ளி
4.நால்வர்
5.சேரமாஸ்கந்தர் (உற்சவரி)
6.பஞ்சமுக விநாயகர் (தென்மேற்கு மூலையில்)
7.மாவடி சோமஸ்கந்தர்
8.1008 லிங்கம்
9.பள்ளியறை
10.ஏலவார்குழலி சன்னதி(உற்சவரி)
11. குமாரக்கடவுள் (உலா மூர்த்தம்)
12.நடராஜர் சபை
13.பைரவர் சன்னதி
14.ஆறுமுகசுவாமி (உலா மூர்த்தம்)
15.நவக்கிரகங்கள்
16.யாகசாலை
தெற்கு, மேற்கு, வடக்குப் பிரகார மேடைகளில் வரிசையாக வெவ்வேறு அளவு தனியாக 136 சிவலிங்கங்கள்.
5) முதற் பிரகாரம்
முதற்பிரகார பிரதான வாயிலைக் கடந்தால்.
1.திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், ஐயடிகள் காடவர்கோன்
2.ஸ்படிகலிங்கம்
3.பிரளயலிங்கம்
4.சமயகுரவர்கள் நால்வர்
5.அகத்தீசுவரர்
6.பொள்ளாப்பிள்ளையார்
7. 63 நாயன்மார்கள்.
8.வெள்ளக்கம்பர்
9.சந்தானகுரவர்கள் நால்வர்
10.காசி விசுவநாதர்
11.சந்தான கணபதி
12.சௌபாக்கிய கணபதி
13.சக்தி கணபதி
14.பாணலிங்கம் 108(கிழக்கு மேற்காக ஒரு வரிசையில் 4 வீதம் 27 வரிசை)
15.மயில்மேல் ஆறுமுகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன்
16.108 இலிங்கங்களை தன் பாணத்தில் கொண்டுள்ள சிவலிங்கம்
17.நாகலிங்கம்
18.மார்க்கண்டேசுவரர்
19.கள்ளக்கம்பர்
20. 62 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள்
21.திருமஞ்சனக் கிணறு
22.சண்டேசுவரர் சன்னதி
23.நல்லகம்பர்
24.சூரியமூர்த்தி
25.நிலாத்துண்டப்பெருமாள் (மங்களாசாசனம் பெற்றது).
6)கருவறை
கருவறையில் பின்சுவற்றிற்கு அருகில் சோமாஸ்கந்தராக ஏகாம்பரநாதர், காமாட்சி, ஸ்கந்தர், அதற்குமுன் திருவேகம்பு இலிங்கம்.(அன்னை வழிபட்ட மணல் லிங்கம்).
விகட சக்கர விநாயகர் – தல விநாயக
இருப்பிடம்
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில்
பல்லவர் கோபுரத்தை ஒட்டி ஆயிரங்கால்
மண்டபத்துள் உள்ளார்.
புராண வரலாறு
ஒருமுறை திருமால் தன் சக்ராயுதத்தைத் ததீசிமுனிவர் மீது ஏவியதால், அவ்வாயுதம் கூர் மழுங்கியது. பின்னர், திருமால் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து, குறைந்த ஒரு பூவிற்காகத் தன் கண்ணையே பூவாக பாவித்து, அர்ச்சனையை முடித்து, சக்ராயுதமும், கண்ணும் பெற்றார். சலந்தரனை அழிக்க உண்டாக்கிய சக்ராயுதத்தை, தக்கன் யாகத்தின் போது வீரபத்திரர் மீது ஏவ, அச்சக்ராயுதத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையிலிருந்த ஒரு கபாலம் விழுங்கிவிட்டது. சக்ராயுதத்தை இழந்த திருமால் கவலையுடன் இருந்தார். அதைக் காணச் சகியாத விஷ்வக்சேனர், தக்கயாகத்தின்போது திருமால் தன்னை வீரபத்திரரின் சூலத்திலிருந்து காத்த நிகழ்வை நினைத்து உளம் நெகிழ்ந்தவராய், சக்ராயுதத்தை மீளப் பெற, வீரபத்திரரைப் பார்க்கச் சென்றார். ஆனால், அங்கு குழுமியிருந்தோர், விஷ்வக்சேனரை, வீரபத்திரரைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை. அந்நிலையில் முனிவரொருவரின் அறிவரையின் பேரில் காஞ்சிமாநகர் வந்து ஒரு சிவலிங்கம் நிறுவி வழிபட வீரபத்திரர் காட்சி தந்து, சக்ராயுதம் கபால மாலையில் உள்ள கபாலத்திடம் இருக்குமானால் கபாலத்திடமே பெற்றுக்கொள்ளுமாறு கூறியருளினார். இந்நிலையில் செய்வதறியாது திகைத்த விஷ்வக்சேனர் தள்ளாடி, கையையும், காலையும் கோணலாக்கி நடக்க, கபாலங்கள் உள்பட எல்லோரும் சிரிப்பதை கவனித்த விஷ்வக்சேனர், இவ்வாட்டத்தைத் தொடர, சக்ராயுதத்தை வாயில் கொண்டிருந்த கபாலமும் சிரித்துவிட்டது. உடனே, சக்ராயுதம் கீழே விழுந்தது.
அச்சக்ராயுதத்தை விஷ்வக்சேனர் எடுக்கும் முன், விநாயகப் பெருமான் எடுத்துக் கொண்டார். விஷ்வக்சேனர் வேண்ட, விநாயகப் பெருமான், தனக்காக ஒருமுறை விகடக் கூத்தாடும்படி கூறினார். விஷ்வக்சேனரும் விகடக்கூத்தாட விநாயகரும் மகிழ்ந்து சக்ராயுதத்தைத் தந்தருளினார்.
சக்ராயுதம் பெற்ற விஷ்வக்சேனர் மகிழ்ந்து, திருமாலிடம் அச்சக்ராயுதத்தைச் சேர்பித்தார். திருமாலும் இச்செயலைப் பாராட்டி விஷ்வக்சேனரை தலைமைச் சேனாதிபதியாக நியமித்தார். விஷ்வக்சேனரின் விகடக்கூத்திற்காக, சக்ராயுதத்தை எடுத்து பின் தந்த விநாயகர், “விகட சக்கர விநாயகர்” என்று போற்றப்படுகிறார்.
விஷ்ணுவேச்சுரம்
அமைவிடம்
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் ஆயிரக்கால் மண்டப கோபுர வாயிலுக்கு வட திசையில் தம்பட்டை விநாயகர் சந்நிதிக்கு அருகில் உள்ளது.
இறைவன் தில்லையில் ஆடும் ஆனந்தத் திருக்கூத்தைத் தன் யோக நிலையில் கண்டு மகிழ்ந்த திருமால், அதனை கண்டு மகிழ விரும்பி, திருக்கச்சியம்பதியை அடைந்து விஷ்ணுவேஸ்வரர் எனும் பெயரால் இலிங்கம் நிறுவி வழிபட்டு, அருள் பெற்றார். அதன் பயனாகத் திருமால், இலட்சுமி முதலானோருடன் தில்லையை அடைந்து, அங்கு பெருமானின் ஆனந்தக்கூத்தை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.
திருக்கச்சிமயானம் (வைப்புத்தலம்)
அமைவிடம்
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில்
கொடிக்குப் பக்கத்தில் மேற்கு பார்த்த சந்நிதி
சிறப்பு
தேவார வைப்புத்தலம்
புராண வரலாறு
பண்டாகரன் என்ற அசுரனொருவன் தன் தவவலிமையால் பிரம்மன் தேவர் முதலான அனைவருருவிலும் கலந்து நிற்கும் வரம் பெற்றான். அவ்வரத்தால் பிரம்மா, திருமால் முதலான தேவர்களின் உயிரில் கலந்து நின்று அவர்களின் வீர்யத்தைக் கலந்து அனைவரையும் செயலிழக்கச் செய்தான். உயிர்கள் அனைத்தும் சோர்ந்து போயுள்ளதைக் காணப் பொறாத இறைவன் தாமே பெரும் வேள்வித் தீயாகத் தோன்றி, திருமால், பிரமன், முதலான அனைத்து உயிர்களையும் வேள்வித் தீயில் இட, ஈரேழு உலகத்து உயிர்களும் வேள்வித் தீயில் ஒடுங்கின. இறுதியாக தனித்து இருந்த பண்டாசுரனையும் தீயிலிட்டார். வேள்வித் தீயாய் எழுந்த பெருமானே பிறகு அவ்விடத்து இலிங்கவுருவாயினர். வேள்விக்கான யாககுண்டமே இந்நாளைய சிவகங்கைத் தீர்த்தமாகும்.
சித்தர்கள் வழிபட்ட வாயு இலிங்கம்
இருப்பிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கச்சிமயானத்திற்கு பின்பக்கம் (கிழக்கில் பெரிய கதையாலான நந்திக்கு தென் கிழக்கில்)
சிறப்பு: சித்தர்கள் வழிபட்ட வாயுலிங்கம் இருந்த இடத்தில், வாலி வழிபட்டு அருள் பெற்ற தலம்.
புரான வரலாறு:
ஆதியில் காஞ்சியில் சிவ பூஜை செய்ய விரும்பிய சித்தர்கள், அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் கச்சிமயானத்திற்குக் கிழக்கில், வாயுவை ஸ்தம்பிக்க வைத்து சிவலிங்கமாக நிறுவி வழிபட்டு அருள் பெற்றார். பின்னாட்களில் ஏதோ காரணங்களால் வாயுலிங்கம் கலைந்து போக, அங்கு சுயம்புவாய் தோன்றிய இலிங்கத்தை வாலி வழிபட்டார். இறைவர் அருளால் தன்னிடம் எதிரில் நின்று போரிடுவோரின் பாதிபலத்தைப் பெறும் தன்மையும், தோல்வியில்லா வெற்றி பெறும் நிலையையும் பெற்றார். வரம் பெற்றும் ஆவல் அடங்காத வாலி. அந்த இலிங்கத்தைத் தன் அரண்மனையிலேயே வைத்து வழிபட ஏதுவாக, தன் வாலினால் கட்டி பெயர்தெடுக்கப் பார்த்தார். முயற்சி வீணாயிற்று, இறைவர் அசரீரியாய், “யாம் இங்கேயே இருப்போம்” என்று கூற, வாலி வழிபட்டு சென்றார். இன்றும் பாண லிங்கத்தின் அடிப்பகுதி வாலில் கட்டி இழுத்ததால் ஏற்பட்ட தழும்பு (அடையாளம் போல் அடிப்பகுதி சிறுத்து) தெரிவதைக் காணலாம்.
இடபேசுவரம்
இருப்பிடம்:
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் சிவகங்கை தீர்த்தத்திற்கு மேற்கே கோயிலின் கொடிமரத்தை அடுத்த துழைவு வாயிலின் வலப்பக்க அலுவலக கட்டிடத்தின் பின்னால் உள்ளது.
சிறப்பு: 32 பட்டைகள் கொண்ட அழகிய இலிங்கம், இடைக்காட்டு சித்தர் இங்குதான் சமாதியாகியுள்ளதாக செவிவழிச் செய்தியும் உள்ளது. காலிங்கநாத சித்தர் வழிபட்ட சன்னதி என்றொரு செய்தியும் உள்ளது.
புராண வரலாறு:
ஒரு சமயம் கருடன் தன்னிடம் செருக்குடன் நடப்பதையுணர்ந்த திருமால், கருட வாகனத்தில் சிவலோகம் சென்று, சிவனை சந்திக்கச் செல்லும் சமயம், நந்தி தேவனிடம், கருடனை குறிப்பால் காட்டிவிட்டுச் சென்றார். நந்தியும் உறங்குவது போல் உறங்கி தன் மூச்சுகாற்றை வேகமாகவிட்டு, கருடனை அலைக்கழித்தது. தன்நிலை இழந்து, அலைக்கழிக்கப்பட்ட கருடனோ அலறியது. இதையுணர்ந்த சிவபெருமானார் நந்தியை அழைத்து எம் ஆணையின்றி இவ்வாறு செய்த குற்றம் நீங்க, காஞ்சியில் தம்மை வழிபடுமாறு அறிவுறுத்தினார். நந்திதேவரும், தம் பெயரால் இலிங்கம் நிறுவி வழிபட்டு அருள் பெற்றார்.
பிரளயங் காத்த அம்மன்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பவித்திர மண்டபத்திற்குமுன் உள்ளது.(2 ஆம்பிராகாரம்)
உற்சவர்: புதியதாக திருப்பணிக்குழு உறுப்பினர்களால் உபயமாக செய்விக்கப்பட்டு நடராஜர் சன்னதி உட்புறம் ஆதி இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புராண வரலாறு:
உமை அம்மை விளையாட்டாக இறைவரின் கண்களைப் பொத்த, அதனால் உலகமக்கள் அடைந்த இன்னல்களுக்குக் கழுவாயாக காஞ்சியில் கம்பை ஆற்றின் கரையில் மண்லிங்கம் நிறுவி வழிபட, இறைவர் கம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுக்க ஆணையிட்டார். இதைக்கண்டு அஞ்சிய உமாதேவியார் பிரளயகாலத்திலும் காக்கும் பிரளய பந்தினியை அழைத்து, இவ்வாற்று வெள்ளத்தைத் தடுக்க ஆணையிட்டார். பிரளயசக்தியும் வெள்ளத்தைத் தடுத்து, அன்னை பூஜைக்கு உதவி செய்தார். பிரளய கால சக்தி, பிரளய கால பந்தினி என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை, காளியானாலும் உமையாகவே. மாவடி சோமாஸ்கந்தரின் காமட்சிக்கு இணையாகப் போற்றப்படுகிறார்.
கடக, மகர, விருச்சிக, மீன ராசிகளில் இருக்கும் இராகுவினால் ஏற்படும் தொல்லைகளை நீக்கி அருள்புரிவாள் அன்னை பிரளயசக்தி,
1008 சிவலிங்கம்
இருப்பிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மாவடி சோமாஸ்கந்தருக்கு வடமேற்கில் உள்ளது.
சிறப்பு: ஒரே சிவலிங்கத்தில் 1008 சிவலிங்கங்கள் புடைப்புச் சிறபமாக உள்ளதால், இச்சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் 1008 சிவலிங்ககளுக்கு செய்த பலன் கிட்டும்.
புராண வரலாறு:
இராமர் வழிபட்ட சிவலிங்கம் என்று செவிவழிச் செய்தியாக உள்ளது. இராவணனை அழித்த பிறகு இராமர், இராமேசுவரம் முதலான இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளார். அவ்வாறு வழிபட்ட ஒரு சிவலிங்கம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவின் முனையில் இராமநாதேசம் என்ற சிவஸ்தலம் உள்ளது.
மாவடி சோமாஸ்கந்தர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கருவறைக்குப் பின்னால், தல விருட்சமான மாமரமும் அதனடியில் சோமாஸ்கந்தர் (ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மை, குமாரக்கடவுள்) எழுந்தருளியுள்ளார்.
சிறப்பு: வேதங்களே மாமரமாக விருப்புடன் எழுந்தருளியுள்ள இம்மாமரம் 3500 ஆண்டுகட்கு மேல் பழமையானதாகத் தாவரஇயல் வல்லுநர்களால் கூறப்படுகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக நான்கு கிளைகள் கனிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையுடையது.
புராண வரலாறு: ஒரு சமயம் கயிலையில், உமையன்னை, சிவபெருமானாரின் பின்பக்கமாக வந்து விளையாட்டாக அவர் கண்களைப் பொத்தினார். அந்த விநாடியே சராசரங்கள் அனைத்தும் இருளில் மூழ்கியது. திகைத்துப் போன தேவியார் சட்டென்று தன் கைகளை விலக்க, அண்டங்கள் அத்தனையும் பழைய நிலைமைக்குத் திரும்பின. கண நேரத்தில் உயிரினங்கள் பட்ட துன்பங்களுக்குத் தானே காரணமாயிருந்தையுணர்ந்த பார்வதி தேவியார், இறைவர் தாள் பணிந்து, பிழை பொறுத்தருள வேண்டி, பிராயச்சித்தம் யாதென்றும் வினவினார். இறைவர் அறிவுரைப்படி, காஞ்சியில் ஐப்பசிப் பூரம் நன்னாளில் ஏலவார்குழலியாய் எழுந்தருளிக் கம்பையாற்றின் கரையில் மணலால் இலிங்கம் நிறுவி வழிபாடு வந்தார். அச்சமயம் இறைவர் கம்பையாற்றில் வெள்ளப்பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ள நீரில், மண்ணாலான சிவலிங்கம் பாதிக்காதபடி உமையன்னை சிவலிங்கத்தை மார்புடன் அணைத்துக் காத்தார். முன்பு கண்ணை பொத்தியது அண்டங்களையை அரற்றியது. ஆனால் இப்போதோ அத்தனை உயிரினங்களும் ஆனந்தக் கூத்தாடின. கணநேரம் மெய்ம்மறந்த இறைவரும், முலைத்தழும்பும், வளைத்தழும்பும் ஏற்றச் சிவலிங்கத்தின் கண்தோன்றி அன்னையை நோக்கி, “அஞ்சேல் யாம் உம் பூஜையை ஏற்றோம். நீ வழிபட்ட இந்த லிங்கம் அழிவின்றி யுகங்கள் தோறும் சிறந்து விளங்கும்” என்று திருவாய் மலர்ந்தருளினார். சிவபெருமானாரும் அன்னை ஏவலார் குழவியாரும்,(காமாட்சி அம்மையுமாக) மாமரத்தின்கீழ் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இவர்களிடையே செவ்வேட்பரமன் குழந்தையாய் விளங்க ஏகாம்பரநாதர் சோமாஸ்கந்தராய் காட்சி தருகின்றார்.
அருள்மிகு ஏலவார் குழவி(உற்சவர்)
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மாவடிக்கு வடமேற்கில், குமரக்கடவுள் சந்நிதிக்குப் பக்கத்தில் உள்ளாது.
சிறப்பு: உலாமூர்த்தி ஏலவார் குழலியாக போற்றப்பெறுகின்றார். காஞ்சி முழுமைக்கும் தேவி காமாட்சியே ஆவாள்.
புராண வரலாறு:
ஐப்பசி பூரத்தில் காஞ்சி வந்த உமையாள். வாணிய வைசியர் குலத்தில் வளர்ந்து, கம்பையாற்றங் கரையில் சிவபூஜையாற்றி, இறையருளுக்குப் பாத்திரமானார். (இன்றும் அவர் தோன்றி, வளார்ந்த வம்சத்தை சேந்தவர்களில் ஒரு மூத்தப்பெருமகனார்) ஒவ்வோரு ஆண்டும் ஏலவார்குழலியின் திருமணத்தின்போது பெண்வீட்டுச் சீர்கள் செய்வதும், பெண்வீட்டார் என்ற முறையில் மரியாதை பெறுவதும் நடைமுறையில் உள்ளது.
அருள்மிகு அம்பலவாணர் நடராசர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் இரண்டாம் பிராகாரத்தில் வடக்குப் பக்கத்தில் சந்நிதி கொண்டுள்ளார்.
சிறப்பு: இங்கு நடராஜர், ரக்ஷா தாண்டவம் எனும் காப்பு நடனம் ஆடுகிறார்.
சிவதாண்டவம் பலவகை
1. மாலையில் செய்வது சந்தியாநர்த்தனம் எனும் நடனத் திருக்கோலம்.
2. ஐந்தொழில் நிகழும்படிச் செய்வது சந்தத நர்த்தனம் எனும் நடனத் திருக்கோலம்.
3.ஆனந்தத் தாண்டவம் – சிதம்பரத்திலும்
4. ஊர்த்துவ தாண்டவம் – திருவாலங்காட்டிலும்
5. காப்பு நடனம் – திருவேகம்பத்திலும் நிகழ்வுதாகும்.
பைரவர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் இரண்டாம் பிராகரத்தில் நடராசர் சபையின் நுழைவு வாயிலுக்குப் பக்கத்தில் உள்ளாது.
சிறப்பு: நல்ல கம்பீரத்தோற்றத்துடன் அழகிய கலையம்சம் கொண்டவராய் தரிசிப்போர் மயங்கும் வண்ணம் அழகுடன் காட்சி தருகிறார்.
அகத்தீசர்
அமைவிடம் : அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரமேடையில் உள்ளார்.
சிறப்பு: அகத்தியர் வழிபட்டு அருள் பெற்ற சிறப்பினது.
புரான வரலாறு:
விந்திய மலையின் செருக்கையடக்கி, தன்னுடைய நிலையை உணரசெய்து, அகத்தியப் பெருமான், தென் திசை நோக்கி செல்லும் வழியில் இங்கு சிவலிங்கம் நிறுவி வழிபட்டு அருள்பெற்றார். அகத்திய லிங்கத்தை வழிபடுவோர் அறிவுத்தெளிவு பெறுவர்.
வெள்ளக்கம்பர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் கருவறையின் தெற்குப் பக்க வாயிலுக்கு அருகில் உள்ளாது.
சிறப்பு: பிரமன் வழிபட்டு அருள்பெற்ற சிவலிங்கம்.
புராண வரலாறு: பிரமன் சிவலிங்கத்தை வழிபட்டு அருள் பெற்றார். மேலும், இச்சிவலிங்கத்தை வெள்ளை உள்ளத்தோடு வழிபட்டதால் வெள்ளைக் கம்பர் என்றும் பெயர் பெற்றது.
நாகலிங்கம், விநாயகர், முருகர் வள்ளி தெய்வானை – 108 லிங்கம்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் மேற்கிலிருந்து வாயுமூலை வரை இச்சந்நிதிகள் வரிசையாக உள்ளன.
சிறப்பு: அன்னை உமை காஞ்சிவரும் முன்னமே வழிபாட்டில் இருந்ததாகக் கூறப்படுகின்ற திருமேனிகள்.
சில விவரங்கள்: ஏகாம்பரநாதர் கோயிலே காஞ்சியில் மிகத் தொன்மையானதாகக் கூறப்படுகிறது, சிறிய கோயிலாகவும், கோயிலுக்கு அருகிலேயே தொண்டை மண்டலாதீனம், ஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் மடம் இருந்ததாகவும், அம்மடம் இருந்த இடத்தை கோயிலுக்குக் கொடுத்து. அதன் பின்னரே, திருவேகம்பம் இன்று சுமார் 24 ஏக்கர் நிலபரப்பில் திகழ்வதாகவும் சொல்லப்பெறுகிறது.
மார்க்கண்டேசுவரர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் வடமேற்கில், ஒரே லிங்கத்தில் 108 லிங்கங்கள் கொண்ட சிவலிங்கத்திற்குப் பக்கத்தில் உள்ளது.
சிறப்பு: மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கம்.
புராண வரலாறு: ஊழிக்காலத்தில் எங்கும் நீராய், உலகமே கடலில் மூழ்கும் நிலையில், நீந்தி நீந்திக் களைத்த மார்க்கண்டேயர், நீரின்மேல் வளர்ந்திருந்த மாமரத்தைக் கண்டார். அதைபற்றி மாவடியுறையும் ஏகாம்பரநாதரையும், காமாட்சியையும் அடைந்து வழிபட்டு ஆனந்தப்பட்டார். பின்னர், தன் பெயரால் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு அருள் பெற்றார். மார்க்கண்டேயர் வழிபட்ட இவரை வழிபட நீண்ட ஆயுள் வாய்க்கும்.
மத்தள் மாதேசுவரர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் வடமேற்கு மூலையையடுத்து மார்க்கண்டேசத்திற்கு கிழக்கில் உள்ளது.
சிறப்பு: திருமால் வழிபடு நடராசப் பெருமானின் நடனத்திற்கு மத்தளம் கொட்டும் பதவி பெற்றார்.
புராண வரலாறு: விஷ்ணுவேச்சுரத்தில் சிவபெருமானாரை வழிபட்டுத் தானும் இலட்சுமிதேவியாரும். தன்பரிவாரங்களுடன், சிதம்பரத்தில் நடன தரிசனத்தைக் கண்டதும், தானும் நந்திதேவர் போல் மத்தளம் கொட்ட ஆசை கொண்டார். மீளவும் காஞ்சியை அடைந்து இந்த இலிங்கத்தை நிறுவி வழிபட்டு, தில்லையில் ஐவனாரின் ஆனந்தக் கூத்திற்கு மத்தளம் கொட்டும் வாய்ப்பு பெற்று பேரானந்தத்தில் திளைத்தார்.
கள்ளக்கம்பர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் மத்தள மாதேசுவரர்க்கு, கிழக்கில் உள்ளது.
சிறப்பு: திருமால் வழிபட்ட லிங்கம்
புராண வரலாறு: காக்கும் கடவுளான திருமால் உலகை மயக்க விரும்பி வழிபட்ட உலக மாயையில் சிக்காதிருக்க நாம் வழிபட வேண்டிய சந்நிதி.
நல்லக்கம்பர்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் நிலாத்துண்டப் பெருமாளுக்குப் பக்கத்தில் சற்று உள்ளடக்கி உள்ளது.
சிறப்பு: உருத்திரர் வழிபட்ட இலிங்கம்.
புராண வரலாறு: எஞ்ஞான்றும் ஒருதன்மையராய் சிறப்புடன் வாழ் உருத்திர வழிபாட்டு பேறு பெற்ற சந்நிதி
நிலாத்துண்டப் பெருமான் (நிலாத்திங்கள் துண்டப்பெருமான்)
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் ஈசான்ய மூலையிலுள்ள நல்லக்கம்பருக்குப் பக்கத்தில் உள்ளது.
சிறப்பு: மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
புராண வரலாறு: திருப்பாற்கடல் கடைந்தபோது, வாசுகி உமிழ்ந்த ஆலகால விடத்தால், திருமால் வெப்பு நோயும், தீய்ந்தநிறமும் பெற்றார். காஞ்சியில் கண்ணேசத்தில் சிவபெருமானை வழிபட்டுத் சிவனின் முடியிலிருக்கும் சந்திர ஒளியில் நிற்க, நோய் நீங்கி பழைய உருவைப் பெறலாம் என்று அறிவுறை பெற்றார். அவ்வண்ணம் ஏகாம்பரநாதர் கோயிலில், பெருமானுக்கு முன்பாகச் சந்திர ஒளிபடுமாறு நின்று பழைய நிலைமையைப் பெற்றார்.
சூரியன்
அமைவிடம்: அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் முதல் பிராகாரத்தில் நல்லகம்பருக்குப் பக்கத்தில் உள்ளார்.
சிறப்பு: எல்லாச் சிவன் கோயில்களிலும் சூரியமூர்த்தி இருக்கின்றார். அச்சூரிய பகவானும் தன் கிரணங்கள் இறைவனின் திருமேனியிற் படுமாறு செய்து வழிபடும் நாள் இரதசப்தமி என்று போற்றப்படுகிறது. இக்கோயிலிலும் அந்நாளில் சூரியகிரண ஒளி ஏகாம்பரநாதர் திருமேனியில் படுதலைக் கண்டு தரிசிக்கலாம்.
சிவலிங்க அமைப்பு:
சிவலிங்கம் மூண்று கூறுகளைக் கொண்டது.
அடிப்பாகம்: படைப்புக் கடவுளான பிரம்ம பாகத்தைக் குறிக்கும்.
மத்தியபாகம்: காத்தல் கடவுளான திருமாலின் அம்சத்தைக் குறிக்கும், இது ஆவுடை எனப்படும்.
பாணம் ருத்ரபாகம்: மேலுள்ள பாகம், சிவபாகம் மேலோங்கி ஜோதிபோல் ஒளியுடனிருக்கும்.
கரிகாற் பெருவளத்தான்
முதலாம் பராந்தகன் காலத்து வேலஞ்சேரி செப்பேட்டில் கரிகால் காஞ்சியில் அரண்மனை கட்டியதாகக் கூறப்படுகிறாது.. கரிகால் பெருவளத்தான் இமயத்தில் புலி பொறிக்கப் படையெடுத்துச் சென்றபோது, காஞ்சி மாநகரைச் சுற்றி மதிலை அமைத்து மக்களை குடியேற்றியதாகக் கூறுகின்றார். சேக்கிழார்.
“என்றும் உள்ள இந்நகர்கலி யுகத்தில்
இலங்கு வேற்கரி கார்பெரு வளத்தோன்.
வந்தி றற்புலி இமயமால் வரைமேல்
வைக்க எகுவோன் தனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்“
– திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் (பெரியபுராணம்)
Leave a Reply