பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்

அருள்மிகு பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம்.

+91-4142- 236 728

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான்)
அம்மன் பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரகந்நாயகி)
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்),சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம்
ஊர் திருப்பாதிரிபுலியூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு, இறைவன் திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களைப் பிராட்டி தன் திருக்கரங்களால் பொத்தினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன், இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ, அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற தலம். இறைவன் சித்தர் வடிவம் பூண்டு, மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.

பள்ளியறை: இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு. அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால், அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள். ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.

திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை, மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவேஎனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி, கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயமுற்றனர். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி, இறைவனை, “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் கரையேறவிட்ட குப்பம்என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

சிவன் சித்தராக இருந்து விளையாடிக் கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துப்படி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விசேசம்.
மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மேலேறத்தகுதியாக இருக்கத் தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம் இதுவே. இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.

திருநாவுக்கரசை முதன்முதலில் அப்பர்என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான். அருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார்.

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்

மேற்கு மதிலில் உள்ள வலம்புரி விநாயகரது திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும். அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம். அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார். சப்தமாதாக்கள் சந்நிதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும்.

சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே, இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பதிகம்:

முன்னநின்ற முடக்கான் முயற்கு அருள் செய்துநீள் புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான் தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள் மின்னைநின்ற பணி யாக்கைப் பெறுவார்களே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம் -10 நாட்கள்.

வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு – 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்).

மகா சிவராத்திரி, ஆடிப் பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம்.

தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும்.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இத்தலத்தில் வேண்டிக்கொள்ளும் எல்லாவிதமான, நியாயமன பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. விரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய ஆடை சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கள் கிழமைகளிலும் சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். அம்மாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *