வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம்
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44-2727 2336
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வியாக்ரபுரீஸ்வரர் | |
அம்மன் | – | அமிர்தகுஜலாம்பாள் | |
பழமை | – | 1500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருப்புலிவனம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதர் என்பவரும் வசித்தனர். இவர்கள் சிவனுக்கு தினமும் மலர் மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். ஆனால், பல சமயங்களில் நல்ல மலர்கள் கிடைக்காது. அழுகல் மலர்கள் கலந்து விடும். மரத்தின் உச்சியிலுள்ள நல்ல மலர்களை பறிக்க வியாக்ரபாதருக்கு முடியாத சூழல் இருந்தது. அவர் மன வருத்தத்தில் இருந்தார். பக்தனின் வருத்தம் போக்க சிவன் அவர் முன் தோன்றினார்.
“பக்தனே. உன் வருத்தத்தின் காரணத்தைச் சொல்” என்றார் தெரியாதவர் போல. வியாக்ரபாதர் சிவனிடம், “தங்களுக்கு பூஜை செய்ய சிறந்த மலர்கள் கிடைப்பதில்லை. அதிகாலையில் நடை திறக்கும் முன் மாலை தொடுத்தாக வேண்டும். இருளில் நல்ல மலர்கள் தெரிவதில்லை. அதற்குரிய வசதியைச் செய்து தர வேண்டும்” என்றார். சிவன் அவருக்கு புலிக்கால்களைக் கொடுத்தார். அந்த நகங்களால் மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு ஏறி சிறந்த மலர்களைப் பறித்து வழிபட்டார் வியாக்ரபாதர். இவர் புலிவடிவில் தரிசித்த தலமே திருப்புலிவனம். சுவாமியும் தன் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு “வியாக்ரபுரீஸ்வரர்” ஆனார்.
இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிர்மாணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பல்லவர்கள் காலத்து கட்டுமானப் பணியே பிரதானமாக உள்ளது. இங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர் சுயம்புலிங்கமாவார். ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது உள்ளது. லிங்கத்தின்மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே ஜடாமுடி தரித்த சிவலிங்கத்தைக் காண இயலும். அதே வடிவம் இங்கும் அமைந்துள்ளது விசேஷம். உத்ராயணம், தட்சிணாயணம் இரண்டு புண்ணிய காலங்களிலும் இங்குள்ள சூரியன் சிலையின் நிழல், சாயாமல் நேராகவே சுவரில் விழுவது ஒரு அதிசயம். அம்பிகை அமிர்த குஜலாம்பாள், நோய்நொடி இன்றி ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வர்யத்தை அள்ளித்தருகிறாள்.
தெட்சிணாமூர்த்தி ஒரு காலை சிங்க வாகனத்தில் வைத்துள்ளார். மற்றொரு கால் வழக்கம் போல் முயலகன் மீது இருக்கிறது. இந்த அமைப்பை வேறு எங்கும் காண இயலாது. இவரை “ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தி” என்கின்றனர். இவரை “அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தி” என்றும் சொல்வர். காரணம், அம்பாளுக்கு உகந்த சிம்மத்தின் மீதும், மறுகால் நடராஜப் பெருமானின் காலடியில் உள்ள முயலகன் மீதும் உள்ளதாலும் ஆகும். ஒருபுறம் ஆண்மையின் மிடுக்கும், மறுபுறம் பெண்மையின் நளினமும் இச்சிலையில் தெரிகிறது. தம்பதியரிடையே மனவேற்றுமை வந்து விவாகரத்து வரை செல்லும் போது கூட, அர்த்தநாரீஸ்வர வடிவில் உள்ள ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தியை தரிசித்து, பூஜித்தால் ஒற்றுமை ஏற்பட்டு குடும்பத்தில் பல சுபிட்சம் பெருகும் என்கின்றனர். இத்தலம் சிதம்பரத்திற்கு ஒப்பானது என்பதற்கு அறிகுறியாக பதஞ்சலி, வியாக்கிரபாதர், சனகாதி முனிவர்கள் இந்த ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தியின் இரு பக்கங்களிலும் உள்ளனர்.
கருவறை தரை மட்டத்தில் இருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. சிவன் சன்னதியில் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. இது ஒருபுறம் காஞ்சிபுரம் வரையிலும், மறுபுறம் உத்திரமேரூர் வரையிலும் செல்கிறது என்றும், ஒரு பெரிய பாறை மூடிய முக்கிய அறை இதற்குள் உள்ளதாகவும் கூறுகிறார்கள். சிவன் சன்னதிக்கு பின்னால், உள்ள பெருமாள் சன்னதியில் திருமால் நின்ற கோலத்தில் உள்ளார். இதன் அருகில் ஒரு தூணில் “நரசிம்மர்” சிற்பம் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பில் முருகப்பெருமான் சிலையும், அழகிய விநாயகர் சிலையும் உள்ளது. விஷ்ணுதுர்க்கை, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. இந்த திருத்தலம் அனைத்து ராசியினருக்கும் பரிகாரத் தலமாகும்.
திருவிழா:
மாத சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.
கோரிக்கைகள்:
விவாகம் நடக்க, பதவிஉயர்வு பெற, குழந்தை பாக்கியம் பெற, நவக்கிரக தோஷம், நாகதோஷம் நீங்க, பணி, தொழில் விருத்தி பெற, அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், பதவியில் உள்ளவர்களுக்கு ராஜயோகம் பெற வரமளிக்கும் தலம் இது.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, வில்வத்தால் அருச்சனை செய்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply