வேதநாயகி உடனுறை அருள்மிகு வேதநாத சுவாமி திருக்கோயில், வீரப்பராசாம்பேட்டை
அருள்மிகு வேதநாயகி உடனுறை அருள்மிகு வேதநாத சுவாமி திருக்கோயில், வீரப்பராசாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்
எண்ணற்ற கோயில்களை உடைய, ஆன்மிகக் களஞ்சியம் எனப் போற்றப்படும் பெருமைபெற்ற நகரம் காஞ்சிபுரம்.
நமது முன்னோர்கள் நமக்கு அளித்த சொத்துகள் மிக பழமைவாய்ந்த திருக்கோயில்கள் ஆகும். பாழடைந்த நிலையிலும், பொலிவும், கம்பீரமும் குன்றாது நிற்கும் மிகப் பெரிய திருக்கோயில்கள் பல; அன்னியர்களின் படையெடுப்பின்போது சூறையாடப்பட்டதாலும், இடிக்கப்பட்டதாலும் அழிந்து மண்ணோடு மறைந்து போயின பல தெய்வீகக் கலைக் கருவூலங்கள். இத்திருக்கோயில்கள் பல கவனிப்பாரற்று, விளக்கு ஏற்றக்கூட வழியில்லாமல் கிடக்கின்றன.
சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீருடன் விளங்கிய திருக்கோயில்களில் ஒன்றுதான் வீரப்பராசாம்பேட்டையிலுள்ள அருள்மிகு வேதநாயகி உடனுறை அருள்மிகு வேதநாத சுவாமி திருக்கோயில். இங்குள்ள செட்டித் தெருவிலும், அண்மையிலுள்ள நாவரசுப் பேட்டையிலும் வாணிபத்தில் சிறந்த செட்டியார் குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இக்கோயில்களின் அன்றாட பூஜைகளுக்கும், பராமரிப்பிற்கும் தளராது உதவி வந்தனர். வீரப்பராசாம்பேட்டையிலுள்ள ஸ்ரீவேதநாத ஈசுவரர் திருக்கோயிலின் கருவறை மேல்தளத்தில் உள்ள இரண்டு கல்வெட்டுகளின் குறிப்பில் ‘‘முன்னைச் செட்டியார்களின் குடும்பங்கள் செய்த வாணிப வருவாயை கொண்டு இக்கோயில் கட்டப்பட்டு, பூசிக்கப்பட்டு வருகிறது’’ என்று குறிக்கப்பட்டு உள்ளது. பெருமையுடன் திகழ்ந்த இத்திருக்கோயிலின் இன்றைய நிலை காண்பவர் நெஞ்சம் கலங்கும்படி உள்ளது. ராஜகோபுரம், கருவறை, பிராகாரம், மதிற்சுவர் ஆகியவை முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டன. உலகையே காத்தருளும் அம்மையப்பன் எழுந்தருளியிருக்கும் கருவறை இன்று வெளவால்களும், பூச்சிகளும் நிறைந்திருக்கும் இடமாகி விட்டது. ஒரு காலத்தில் விநாயகர், முருகப்பெருமான் துர்க்கை, சண்டிகேசுவரர், நந்தியெம்பெருமான் முதலிய சந்நிதிகள் இருந்தன. இன்று இருப்பது ஒரே ஒரு சிவலிங்கம் மட்டுமே. இங்குள்ள சிவலிங்கத் திருமேனி அமைப்பு வித்தியாசமானது. ஆவுடையார் எனப்படும் அடிபாகலிங்க அமைப்புக்கும் கீழே, பாணம் எனப்படும் மேல்பாகம் நீண்டு காணப்படுகிறது. பூமிக்கு அடியில் புதைந்து இருந்த இச்சிவலிங்கத் திருமேனியில் காயம்பட்ட அடையாளமும் உள்ளதை, இன்றும் நாம் காணலாம். பகைவர்கள் சிவலிங்கத்தை உடைக்க முயன்றபோது ஏற்பட்டதாக இது இருக்கலாம். ஒரு சிறு குடிசை அமைக்கப்பட்டு சிவலிங்கத் திருமேனி அங்கு பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது. வீரப்பராசாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி, திருப்பணிக்குழு அமைத்து உள்ளனர். பணிகள் நடந்து கொண்டுள்ளன. இத்திருக்கோயில், காஞ்சிபுரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் வாலாஜாபாத் செல்லும் வழியில் உள்ளது.
Leave a Reply