உடையீஸ்வரர் திருக்கோயில், இளநகர்
அருள்மிகு உடையீஸ்வரர் திருக்கோயில், இளநகர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2474 2282, 98409 55363
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | உடையீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | உமையாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இளநகர் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர் வயலில் உழுது கொண்டிருந்தபோது, ஏர்க்கால் ஓரிடத்தில் ஆழமாக பதிந்து நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் ஏர்க்காலை எடுக்க முடியவில்லை. அவர் அவ்விடத்தில் தோண்டியபோது செம்மண்ணாலான இலிங்கம் இருந்ததைக் கண்டார். அங்கேயே சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டார். உடை (ஏர்க்கால்) தடுத்து கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவருக்கு, “உடையீஸ்வரர்” என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பிகை உடையாம்பிகைக்கும் (சுகப்பிரசவ நாயகி) சன்னதி கட்டப்பட்டது.
இக்கோயிலில் திருப்பணி செய்தபோது, நந்தி சிலை ஒன்று கிடைத்தது. அதை கோயில் முன்பாக வைத்து விட்டனர். ஒருசமயம் நிறை மாத கர்ப்பிணி ஒருத்தி அம்பிகையை வழிபட வந்தாள். அவளுக்கு களைப்பாக இருக்கவே, இந்த நந்தியின் மீது தலை சாய்த்தாள். சிறிது நேரத்தில் நந்தி சிலை கொஞ்சம், கொஞ்சமாக நகரவே, அந்த பெண் தடுமாறி தரையில் சாய்ந்தாள்.
அப்போது அவளுக்கு சுகப்பிரசவமாகி ஒரு ஆண் குழந்தைபிறந்தது. அப்போதிருந்து, இந்த நந்தி “சுகப்பிரசவ நந்தி” எனப்பட்டது. அம்பிகையும் “சுகப்பிரசவ நாயகி” என்று பெயர் பெற்றாள். சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்பிணிகள் இங்கு அம்பிகையை வழிபட்டு, பிரசவ நந்தி சிலையை சற்று தள்ளி வைத்து செல்கின்றனர். அவர்களுடன் துணைக்குச் செல்பவர்கள், நந்தியை மீண்டும் பழைய நிலையில் திரும்பவும் வைக்கின்றனர். இவ்வாறு செய்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை இருக்கின்றனர். இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர்.
தாமரை பீடத்தில் காட்சி தரும் சுவாமி செம்மண் இலிங்கமாக இருந்தாலும், அபிஷேகம் செய்யும்போது கரையாதிருப்பது கலியுக அதிசயம். இந்த இலிங்கத்தில் ஏர்க்கால் பட்ட தடம் இருக்கிறது. இலிங்கத்தின் மத்தியில் மற்றொரு லிங்கம் இருப்பதைப்போன்ற அமைப்பும் இருக்கிறது.
திருவிழா:
தைப்பூசம், சிவராத்திரி.
கோரிக்கைகள்:
புத்திர பாக்கியம் கிடைக்க, சுகப்பிரசவம் ஆக இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வேண்டிக்கொள்ள கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply