சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம்

அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம், விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைத்தியநாதசுவாமி
அம்மன் சிவகாமி அம்பாள்
ஊர் மடவார்வளாகம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

முன் காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் தன் மனைவியுடன் நாள் தோறும் சிறப்பாக சிவ பூஜை செய்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் பத்து மாதம் முடிவடைந்ததும் தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய் இருக்குமிடத்திற்கு சென்றாள். சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள்,”ஈசனே. காப்பாற்றுஎன அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி, சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க, தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப்பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார். அத்துடன், “பெண்ணே உனது தவத்தினால்தான் யாமே உனக்க பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் காயக்குடி ஆறுஎன அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்என்று அருளினார்.

விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்தலம் இத்திருத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த வணிகர்கள் கேரளா சென்று மிளகு வாங்கி வந்து அதற்கென கடமை செலுத்தாமல் ஏமாற்றி, மிளகை உளுந்தென பொய்சொல்லி மதுரை சென்று பார்த்த போது மிளகு எல்லாம் உளுந்தாக இருந்தது. அவர்கள் மதுரை சொக்கநாதரிடம் சென்று முறையிட்டபோது, அவர் வைத்தியநாதரை வணங்கினால் அருள் புரிவோம் என்று கூறினார். அதன்படியே நடக்கவும் செய்தது. இந்த வைத்தியநாத சுவாமி இத்தலத்தில, சூரியன் பூசித்தது, துருவாசர் பூசித்தது, ஞான உபதேசம் பெற்றது, முனிவர் இருவர் பூசித்தது, திருநடனம் புரிந்தது, பிரம்ம தேவன் பூசித்தது, அக்கினி சன்மன் பூசித்தது, பாசதரன் முக்தி பெற்றது, வெண்குட்டம் தீர்ந்தது, அகத்தியர் பூசித்தது, அகத்தியர் மேன்மை பெற்றது, படிக்காசு வைத்தது, காசு வாசி வாங்கி கொடுத்தது, சந்திரன் சயநோய் தீர்த்தது, ஆ முகமானது, ஆ முகம் தீர்ந்தது, மிளகு பயறானது, பயறு மிளகானது, மட்குடம் பொற்குடமானது, வாணன் தலை வெடித்தது, தாதன் கண் பறித்தது, வணிகன் பொன் மடிப்பையை தந்தது, பாவையருக்கு திரவியம் கொடுத்தது, வலையனுக்கு கண் கொடுத்தது, பிரகசேனன் முக்தி பெற்றது போன்ற 24 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார்.

இத்தல இறைவனை பிரம்மன், இந்திரன், தேவர்கள், சூரியன், சந்திரன், துருவாசர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டதாலும், இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு சிவன் வீடு பேற்றை அருளுவதாலும் இத்தலம் கைலாயத்திற்கு சமமாக கருதப்படுகிறது. ஆடல் பாடல்களில் வல்லவரான இருவர் இத்தல நாயகன் முன் ஆடிப்பாடி இறைவனை மகிழ்வித்ததால், இறைவனும் மகிழ்ந்து அவர்களுக்கு பொன், பொருள் தந்து வீடு கட்டித்தர ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம் மடவார் வளாகம் என அழைக்கப்பட்டது. (மடவார்பெண்கள், வளாகம்இடம்).

ஒரு முறை மன்னர் திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. வயிற்று வலி நோய் தீர்ப்பதில் வல்லவர் வைத்தியநாதர் என்பதை கேள்விப்பட்ட திருமலை நாயக்கர் தந்தத்தினால் ஆன பல்லக்கில் இங்கு வந்து தங்கி 48 நாட்கள் விரதமிருந்து வயிற்று வலி நீங்க பெற்றார்.
இதனால்தான் வந்த தந்தப் பல்லக்கை வைத்திய நாதருக்கே தந்து விட்டு மதுரைக்கு நடந்தே சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருமண மண்டபம்போலவே தன் வயிற்று வலியை தீர்த்த மடவார் வளாகம் வைத்தியநாதருக்கும் பெரிய நாடக சாலை எனப்படும் மண்டபம் அமைத்தார்.


வைத்தியநாதரை விட்டு செல்ல திருமலை நாயக்கருக்கு விருப்பமில்லை. இங்கேயே தங்கினாலும் தன் அரசியல் பணி தடைபடும் என்று கருதிய மன்னர், தினம் தோறும் வைத்தியநாதருக்கு உச்சி கால பூஜை நடந்த பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டார்.
போக்குவரத்து, வாகன, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு(நகரா) முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்த பின்தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் உள்ளதை காணலாம்.

வைத்தியநாதசுவாமியை வழிபட்டால் தீராத வயிற்று வலிதீர்ந்து போகும், அத்துடன் சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதப்பிறப்பன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது பட்டு சூரியன் பூஜை செய்கிறார்.


திருவிழா:
சிவராத்திரி, பிரதோஷம், மற்றும் அம்மனுக்குரிய செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பாக நடக்கிறது.

கோரிக்கைகள்:

வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்பசம்பந்தமான நோய்களுக்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும் என்பதால் சிவனையும்,அம்மனையும் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

2 Responses to சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம்

  1. subburajpiramu says:

    நல்ல பதிவு , வளரட்டும் தங்கள் நற்ப்பானி இந்தக்கோவில் ராஜபாளையத்தில் இருப்பதாக உள்ளது.இந்தகோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது

  2. //இந்தக்கோவில் ராஜபாளையத்தில் இருப்பதாக உள்ளது.//

    இல்லையே. மடவார் வளாகத்தில் உள்ளதாகத்தானே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *