சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், தீர்த்தாண்டதானம்
அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், தீர்த்தாண்டதானம், இராமநாதபுரம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தீர்த்தமுடையவர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தீர்த்தம் | – | சகல தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தீர்த்தாண்டதானம் | |
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இராமபிரான், இலட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது, இங்கு சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தார். அந்த நீரைப் பருகிய இராமபிரான் மனம் மகிழ்ந்தார்.
இராமபிரான் வந்திருப்பதை அறிந்த அகத்திய முனிவர் இங்கு வந்தார். இராவணன் சீதையை சிறையெடுத்து சென்றதால், ராமனின் மனம் புண்பட்டுள்ளதை அறிந்த அகத்திய மாமமுனிவர் ராமனுக்கு ஒரு யோசனை சொன்னார். “இராமா! இராவணன் சிறந்த சிவ பக்தன். ஆகையால் சிவன் அருள்பெற்றால் தவிர அவனை வெல்லமுடியாது. நீ இங்கே குடிகொண்டிருக்கும், என்றும் பழம்பதிநாதராகிய, சகலதீர்த்தமுடையவரை ஐந்து முறை வணங்கிச்செல். வெற்றி கிடைக்கும்” எனக் கூறினார். அவ்வாறே இராமபிரான் வழிபட சிவபெருமான் தேவியுடன் காட்சியளித்தார்.
உடனிருந்த வருணன் இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்து ஆனந்தப்பட்டார். இறைவனை அதே இடத்தில் கோயில் கொண்டருளவும், இராமபிரான் தாகம் தீர்த்த வருணதீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்குபவர்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் எனவும் வேண்டினார். சிவபெருமானும் மேற்கு முகமாக எழுந்தருளினார்.
சகலதீர்த்தமுடையவர், சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயர்களுடன் சுவாமி பெயர் விளங்குகிறது. தேவியின் திருப்பெயர் பெரியநாயகி அம்மன். இராமபிரான் நீர் வேட்கையை தீர்த்ததால் தீர்த்தாண்டதானம் என அழைக்கப்படுகிறது.
வருணபகவான் உண்டாக்கிய தீர்த்தம் வருணதீர்த்தமாகும். கோயிலின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தீர்த்தம் பராமரிப்பு இல்லாததால் காட்டுக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இந்த தீர்த்தம் பெருமை மிக்கது.
இங்கே நீராடினால், உலகிலுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமல் போனது. பக்தர்கள் இங்கு குளிக்க முடியாமல் அருகிலுள்ள கடலில் நீராடுகின்றனர்.
இங்கு தினம் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. நந்தீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவி, மகாவிஷ்ணு, திருஞானசம்பந்தர், சூரியபகவான், தெட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதி இருக்கிறது.
திருவிழா:
ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களிலும், சிவராத்திரி, பிரதோஷ காலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பிரார்த்தனை:
கேட்டதையெல்லாம் கொடுக்கும் இறைவன்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம் :
மதுரையிலிருந்து 130 கி.மீ.,தொலைவிலுள்ள தொண்டி சென்று, அங்கிருந்து 14 கி.மீ., கடந்தால் தீர்த்தாண்டதானத்தை அடையலாம். இராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 62 கி.மீ., சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
Leave a Reply