பெரியாண்டவர் ஆலயம், திருநிலை
அருள்மிகு பெரியாண்டவர் ஆலயம், திருநிலை, ஓரகடம் போஸ்ட், திருக்கழுகுன்றம் வழி, செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91-9842740957
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவத்தலம் திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருப்போரூரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், மலைகளால் சூழப்பட்ட, பசும்சோலைகள் நிறைந்து, இயற்கை எழில் மிக்க, திருநிலை கிராமத்தில் குளம் மற்றும் ஏரியின் மத்தியில் சுயம்பு இலிங்கமாக தோன்றி, சிவபெருமான், பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். எம்பெருமானைச் சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சியை இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாது.
முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி, பல அரிய வரங்கள் பெற்றான். அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியைக் கைப்பற்றி, பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லையைத் தாங்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்ணத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார். “அசுரர்களின் அட்டகாசம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து, தேவர்களைக் காக்க வேண்டும்; உடனே புறப்படு” என்று கூறி நின்றார். சிவன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி, தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்டார் சிவன். தியானத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி, சிவனை நோக்கி, “தியானத்தில் இருப்பது தெரிந்தும் சினமுற்றதால், நீங்கள் ஒரு நாழிகை மனிதனாகப் பிறக்க வேண்டும்” எனச் சாபமிட்டார். ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் எடுத்து, கால்போனபோக்கில் அலைந்து திரிந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி, பரமனைக் காத்து அருளுமாறு வேண்டினர். உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள். அது பூமியில் ஓர் இடத்தில் குத்தி, நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி விழுந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி, சுற்றி ஐயனின் வருகைக்காகக் காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் அந்த இடத்தில் பாதம் பதித்து, ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய, மனிதனாய் வந்தவர் சிவமாய் உருமாறினார். மேலும், “பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்ததால், இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர்” என உமையவள் கூறினாள். “உமையவள் என்னைத் நிலைகொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி என அழைக்கப்படுவாள்” என்று சிவன் கூற, தேவர் முதலானோர் அவர்கள் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். 21 சிவகணங்களும் வணங்கி நிண்றன. சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்.
மேலும் பார்வதிதேவி, “தாயின் கருவின்றி பெரியாண்டவராகத் தோன்றி, உலகை வலம் வந்ததால், இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு, யார் இவ்விடத்தில் உங்களை வணங்குகின்றனரோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார்.” இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார். இன்றும் இவ்வாலயத்தின் சித்தாமிர்த குளத்தில் நீராடி, இறைவனை நினைத்து மனம் உருகி நெய் தீபம் ஏற்றினால், எந்த ஒரு தம்பதிக்கும் குழந்தைபேறு உண்டாகும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு இலிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி, சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவுகூரும் வண்ணமாக இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகளை சிவகணங்களாக செய்து வைத்து, சுயம்பு இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டுகின்றனர். நந்தியும் மனிதவடிவில் தோன்றி, சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம்.
நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டித் துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி, “நான் பெரியாண்டவர் அவதாரக் கோலத்தில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால், உங்களுக்கு மழலைச் செல்வம் கிட்டும்” என்றும், “மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி உங்களை அழைத்துச் செல்லும்” என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படிச் செல்வது என்று தெரியாமல் விழித்தபோது, திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் நிலையாய் நின்று, பின் திடீரென மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது, அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருகச் சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக, கோயில் தல வரலாறு கூறுகின்றது.
மணமாகதப் பெண்களுக்கு திருமணம் கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து, உழவர்களின் பயிர் வாழ மழைவளம் அளித்து, குழந்தைகளைக் காத்து, அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி, மேன்மையான வாழ்வு தருபவர் பெரியாண்டவர்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
வழிகாட்டி:
செங்கல்பட்டில் இருந்து தினமும் திருநிலை பெரியாண்டவர் கோவிலுக்கு திருகழுக்குன்றம் வழியாக T11 என்ற பேருந்து சென்றுவருகிறது.
Leave a Reply