பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், ஆனந்த தாண்டவபுரம்
அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், ஆனந்த தாண்டவபுரம், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பஞ்சவடீஸ்வரர் | |
அம்மன் | – | பிரஹன்நாயகி, கல்யாணசுந்தரி | |
தல விருட்சம் | – | பவளமல்லி | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஆனந்ததாண்டவபுரம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மானக்கஞ்சாறர் என்னும் வேளாளர் படைக்குத் தலைமை வகித்து நடத்தியவர்; அன்பிலும் சிவபக்தியிலும் கட்டுண்டு கிடந்தார். தன் மனைவியுடன் சிவனடியார்களுக்குச் சேவை செய்வதே கடமை என்று வாழ்ந்த மானக்கஞ்சாறருக்கு, தனக்கொரு வாரிசு இல்லையே என்று ஒரே ஒரு குறை. நாள்தோறும் தவறாமல் சிவவழிபாடு செய்யும் கல்யாணசுந்தரியும் கஞ்சாறரரும், வாரிசு வரம் கேட்டுப் பிரார்த்தித்து வந்தனர். இவர்களது வேண்டுதல் நிறைவேறும் காலமும் வந்தது. கஞ்சாறரின் மனைவி கருவுற்றாள்; உரிய காலத்தில் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். “நாங்கள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ; எங்களுக்குக் குழந்தைச் செல்வத்தைத் தந்துவிட்டாய்! இறைவா!” என மகிழ்ந்தவர்கள், மகளுக்கு புண்ணியவர்த்தினி எனும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். காலங்கள் ஓடின. கருகருவென நீண்ட கூந்தலுடன், அழகு ததும்பக் காட்சி அளித்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நாளும் வந்தது. சிவபக்தியில் திளைக்கும் கலிக்காமன் என்னும் இளைஞனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்தார் கஞ்சாறர். இதையறிந்த ஊர்மக்கள், “மாமனாரும் சிவபக்தர்; மருமகப் பிள்ளையும் சிவபக்தர்” எனக் கொண்டாடினர். வெகுவிமரிசையாக திருமண ஏற்பாடுகள் நடக்க, முகூர்த்த நாளும் நெருங்கியது. அடியவர் வீட்டுத் திருமண வைபவத்துக்கு, ஆண்டவன் வராமல் இருப்பானா? திருமணத்துக்கு முதல் நாள். காவி உடையும், கழுத்தில் உருத்திராட்ச மாலைகளும் அணிந்து, மேனி முழுவதும் திருநீறு தரித்தபடி சிவனடியார் ஒருவர் வந்தார். அவர் மாவிரதியர். அதாவது சிரசின் முடியை ஐந்து பிரிகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளவர்.
வடக்கில் உள்ள சிவனடியார்கள் சிலர் இப்படித்தான் பூணூல் தரிப்பர் என்பதை அறிந்தார் கஞ்சாறர்; வந்த சிவனடியாரை அன்புடன் வரவேற்றார். மனைவி, மகள் சகிதம் விழுந்து வணங்கினார். அப்போது, அந்த மணமகளின் நெடுங்கூந்தலைக் கண்ட சிவனடியார், இவளின் முடி, நமக்குப் பஞ்சவடி (பூணூல்) என்று சொல்லிப் புன்னகைத்தார். உடனே கஞ்சாறர், என் மகளின் தலைமுடி, தங்களுக்குப் பூணூலாகப் பயன்படப் போகிறதே. என்ன என் பாக்கியம்” எனச் சொல்லி, சற்றும் தயங்காமல் அக்கணமே தன் மகளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து அறுத்து, சிவனடியாரிடம் பணிவுடன் கொடுத்து வணங்கினார்.
திருமணத்துக்கு வந்தவர்கள்,”என்ன இது. விடிந்தால் அவளுக்குத் திருமணம். அவளின் தலைமுடியை அறுத்துக் கொடுப்பது நியாயமா?” என்று நினைத்து வருந்தினர். உடனே, கஞ்சாறருக்கும் அவர்தம் மனைவி மகளுக்கும் காட்சி தந்தார் சிவன். மணமகளின் கூந்தல் அவளது தலையில் பழையபடியே அழகுறக் காணப்பட்டது. சிவனே, சிவனே என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, கண்ணீரும் மகிழ்ச்சியும் ததும்ப வணங்கினார், கஞ்சாறர்.
விஷயம் தெரிந்து ஓடோடி வந்த கலிக்காமன், கதறினான்; கண்ணீர் விட்டான். மனைவியாக வரப் போகிறவளின் தலைமுடி பறிபோய்விட்டதே என்று அவன் கலங்கவில்லை. நான் என்ன பாவம் செய்தேன். இறை தரிசனம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே. திருமணம் முடிந்த பிறகு இறைவன் வந்து கேட்டிருந்தால், மனைவியின் தலைமுடியை நானே அறுத்துக் கொடுத்திருப்பேனே. எனக்கு அந்தப் பெருமை கிடைக்காமல் போய்விட்டதே, என வருந்தினான். பின்னாளில் அவர், கலிக்காம நாயனார் எனப் போற்றப்பட்டார்; அறுபத்து மூவரில் ஒருவரானார்.
இந்தத் தலத்தில் இரண்டு அம்பிகையர். ஒருவர் பிரஹன்நாயகி. இன்னொருவர் கல்யாணசுந்தரி அம்பாள். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று, மணக்கோலத்தில் காட்சி தந்ததால், அம்பிகைக்கு இந்தத் திருநாமம். சிவனடியாராக வந்த சிவனார் நீராடிய திருக்குளம் இங்கு உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவன், இறைவி, மானக்கஞ்சாற நாயனாரையும் வணங்கி வழிபட்டால், பிறவிப் பிணிகள் நீங்கும்; மனதுள் நிம்மதி நிலைக்கும்.
இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன், அரிந்தெடுத்த கூந்தலை இடதுகையில் பிடித்தபடி காட்சி தரும் சிவனைக் காண்பது கோயிலின் தனி சிறப்பு. இறைவன் ஆனந்தமயமாக தாண்டவம் புரிந்த இடம் தான் இது. தற்போது ஊர் பெயர் சுருங்கி ஆனதாண்டபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் ஆனந்த முனிவர் என்பவர் இந்த தலத்தில் வாழ்ந்தார். எந்நேரமும் சிவ வழிப்பாட்டில் திளைத்திருப்பார். யோக சக்தியால் சாதனைகள் புரிந்தவர். நினைத்த நேரத்தில் நினைத்த தலத்துக்கு சென்று சிவ தரிசனம் செய்யும் பேறு பெற்றிருந்தார். தினமும் காலையில் ஆகாய மார்க்கமாகப் புறப்பட்டு போய் இராமேஸ்வரம் கடல் தீர்த்தத்தில் நீராடுவார். பிறகு ஆகாயம் வழியாகவே பயணித்து, சிதம்பரம் சென்று நடராஜரைத் தரிசித்து விட்டு மகேந்திர மலைக்கு சென்று சிவதியானத்தில் மூழ்குவார். இரவு, தன் ஊருக்குத் (ஆனந்ததாண்டவபுரம்) திரும்பி விடுவார். இது தான் இவரது அன்றாட நடைமுறை. பக்தர்களைச் சோதிப்பது தானே அந்த சிவனின் வழக்கம். ஆனந்த முனிவரையும், சோதிக்க விரும்பினார். அதுவும், தனக்கு உகந்த மார்கழி மாத திருவாதிரை திருநாளில் தன் சோதனையைத் துவங்கினார் ஈசன். பூலோகத்தில் உள்ள சிவாலயங்கள் அனைத்துமே அன்று கோலாகலமாக இருந்தன. ஆனந்த முனிவரது மனம் இன்பத்தில் திளைத்திருந்தது. இராமேஸ்வரம் தீர்த்தத்தில் காலையில் நீராடி, ராமநாதரைத் தரிசித்து விட்டு, சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க வேண்டும். இருந்த இடத்திலிருந்து செல்ல எண்ணி, தன் யோக சக்தியை பயன்படுத்த முற்பட்டார். ஆனால், ஈசனின் திருவிளையாடலுக்கு ஏற்ப, கொட்டியது மழை. தன் ஊரான ஆனந்த தாண்டவபுரத்தில் இருந்து ஆனந்த முனிவரால் எங்கும் நகர இயலவில்லை. இறைவனின் திருவிளையாடலால் யோக சக்தியை செயல்படுத்த முடியவில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அர்த்தஜாம (இரவு வேளை பூஜை) நேரம் நெருங்கியும் மழை விட வில்லை. இயற்கையின் சதியை கண்டு, ஏங்கித் தவித்தார். ஈசனைத் தரிசிக்கும் பாக்கியம் இல்லாத நான், இனி எதற்கு உயிர் வாழ வேண்டும் என்று தீர்மானித்து தன் உயிரைத் துறக்க முடிவெடுத்தார். அதற்கான முயற்சியில் இறங்கும் போது, சிவன் அவருக்குக் காட்சி கொடுத்தான். அன்னை சிவகாமி அருகே இருக்க, ஆனந்த விமானத்தில் எழுந்தருளி, ஆனந்தத் தாண்டவம் எனும் திருநடனத்தை அவருக்கு ஆடிக் காண்பித்து தரிசனம் தந்தார்.
இதை கண்டு பெரிதும் மகிழ்ந்தார் ஆனந்த முனிவர்.
அவர் நடனம் ஆடிக் காண்பித்த அந்த திருத்தலம் தான் ஆனந்த தாண்டவபுரம் என வழங்கப்படலாயிற்று. இது தான் ஊரின் பெயருக்கு காரணம்.
திருமுக மண்டலத்துக்கு நேராக தன் இடது திருவடியை சாய்வு இல்லாமல் திருமேனியில் சரி பாதியாக மையத்தில் தூக்கி நிறுத்தி, ஆடி அருளிய ஆனந்த தாண்டவ மூர்த்தியின் விக்கிரகம் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூக்கு நுனியின் நடுப்பகுதியில் இருந்து நூல் பிடித்து பார்த்தால் வலது மற்றும் இடது திருவடிகளும் அபய கரமும் வரத கரமும் ஒரே நேர்க் கோட்டில் அடங்குவதாக இந்த விக்கிரகம் அமைந்துள்ளது. இங்கே ஆனந்த தாண்டவ மூர்த்தியாக, தரிசனம் தரும் நடராஜப் பெருமானின் அழகே தனி.
ஆலயத்துக்கு முன் அழகான திருக்குளம். சிவகங்கை தீர்த்தம் என்றும் பிந்து (அமிர்த துளி) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பைப் பற்றி தல மான்மியம் சொல்கிறது. சிறையில்
அடிமைப்பட்டிருந்த தன் தாயை விடுவிக்க கருட பகவான் அமிர்த கலசத்தை ஏந்திக்கொண்டு வான் வெளியில் பறந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த தலத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் அமிர்த கலசத் தில் இருந்து ஒரு துளி விழுந்ததாம். இந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பேறு வாய்க்குமாம். வாரிசு இல்லாத ஹேமகாந்தன் எனும் மன்னன், தைப்பூச உற்சவ காலத்தில் சிவகங்கைக் தீர்த்தத்தில் மூழ்கி, ஸ்ரீபஞ்சவடீஸ்வரரை வழிப்பட்டு வழிப்பட்டு உள்ளே செல்கிறோம்.
மூன்று நிலை ராஜகோபுரம், கிழக்கு நோக்கியது. பலிபீடம், கொடி மரம், நந்திதேவர் தாண்டி உள்ளே செல்கிறோம். மிகப்பெரிய மண்டபம். நமக்கு நேராக மூலவர் பஞ்சவடீஸ்வரர் சந்நிதி. தவிர நடராஜர் மண்டபம், உற்சவர் மண்படம் ஆகியவை காணப்படுகின்றன. ஜடநாதர், மானக்கஞ்சாறர் அவரது மகள் புண்ணியவர்த்தனி, மாப்பிள்ளை ஏயர்கோன் கலிக்காமர் ஆகியோரது செப்பு திருமேனிகள் உள்ளன. தைப்பூச உற்சவத்தின் போது 6ம் நாள் புண்ணியவர்த்தனி திருக்கல்யாண உற்சவமும், 7ம் திருநாளன்று பஞ்சவடீஸ்வரர் திருக்கல்யாண உற்சமும் கோலாகலமாக நடைபெறும். புண்ணியவர்த்தனி, மானக்கஞ்சாறர், ஆனந்த முனிவர், பரத்வாஜர் ஆகியோரது சிலா விக்கிரகங்களும் தரிசனம் தருகின்றன.
பரத்வாஜருக்கு இங்கே ஒரு சிறப்பு உண்டு. இந்த தலத்தில் பாரிஜாத (பவளமல்லி) மரத்தில் கீழே அமர்ந்து தவம் புரிந்தார். பரத்வாய மகரிஷி (தல விருட்சமமும் இந்த மரம் தான்) இவரது வேண்டு கோளுக்கு இணங்க இறைவன் இரு தேவியாருட்ன காட்சி தந்தார். அதாவது கல்யாண சுந்தரி என்கிற திருநாமத்துடன் இளமையாகவும், திருமணமாகி வயது கூடிய நிலையில் பெரிய நாயகியாகவும் இவருக்கு, இறைவனாருடன் காட்சி தந்தார் அம்பாள். எனவே இந்த ஆலயத்தில் இரு தேவியார்களும் இருப்பது சிறப்பு. கிழக்கு நோக்கியவாறு கல்யாண சுந்தரியும், தெற்கு நோக்கியவாறு பெரிய நாயகியும் தனித் தனி சந்நிதிகளில் குடி கொண்டுள்ளனர்.
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி
கோரிக்கைகள்:
திருமணத்தடை நீங்க, பிறவிப் பிணிகள் நீங்க, இல்லறத்தில் ஏற்படும் சிக்கல்கள் விலக, மனதுள் நிம்மதி நிலைக்க இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வழிகாட்டி:
காவிரியில் வடகரையில் மயிலாடுதுறைக்கு வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனந்த தாண்டவபுரம். வைப்பு தலம். மயிலாடுதுறைக்கு வடக்கிலும், நீடூருக்கு கிழக்கிலும், திருப்புன்கூருக்கு தெற்கிலும், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு தெற்மேற்கிலும் அமைந்துள்ளது அனந்த தாண்டவபுரம். மயிலாடுதுறை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து ஆன்நத தாண்டவபுரத்துக்கு டவுன் பஸ் வசதிஉண்டு.
Leave a Reply