நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், பூவரசன் குப்பம்
அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், பூவரசன் குப்பம், விழுப்புரம் .
+91 -94420 – 10834, 94867 – 48013
காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகேஸ்வரர் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பூவரசன் குப்பம் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் பல இடங்களில் சைவ, வைணவக் கோயில்களை கட்டி வந்த போது காடுகளையும், மலைகளையும் சீர் செய்ய வேண்டி வந்தது. அப்படி செய்து கோயில்கள் கட்டும் போது அங்கிருந்த புற்றுக்களையும், நாகங்களையும் அழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இதனால் அவனுக்கும் அவனது வம்சத்தினருக்கும் நாகதோஷம் ஏற்பட்டு அவதியுற்றான். அப்போது தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரை சந்தித்து தனது நிலையைக் கூறினான். இதற்கு பரிகாரம் கேட்க,”இந்த ஆற்றங்கரையின் ஓரத்திலுள்ள ஒரு புற்றினுள், சுயம்புவாக ஒரு சிவலிங்கம் உள்ளது. அதனை ஒரு நாகம் பூஜித்து வருகிறது.
அந்த நாகத்தை வழிபட்டு, லிங்கத்தை வெளியே எடுத்து, ஒரு கோயில் கட்டினால், உனக்கு ஏற்பட்ட தோஷம் விலகும்” என்று கூறினார். முனிவர் கூறியதையடுத்து மன்னன் இத்தலம் வந்து நாகரை வழிபட்டு, திருப்பணி வேலைகளை ஆரம்பித்தான். முனிவர் கூறியது போல், அங்கிருந்த புற்றை அகற்றிய போது ஒரு சிவலிங்கம் இருப்பதை கண்டு ஒரு பெரிய கோயிலை கட்டினான். பின் இதனைச்சார்ந்து அவனால் கட்டப்பட்ட 108 பெருமாள் கோயில்களுக்கும், 108 சிவன் கோயில்களுக்கும் ஒரே நாளில் சிவஹரி முனிவரைக்கொண்டு கும்பாபிஷேகம் செய்வித்தான். இறைவனுக்கு நாகேஸ்வர சுவாமி என்ற திருநாமம் ஏற்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்த அன்றிரவே அந்த நாகம் சிவலிங்கத்தைச் சுற்றிக்கொண்டு காட்சியளித்தது. அத்துடன் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மட்டும் அந்த நாகம் சிவபூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் கூட ஒரு நாகம் இரவு நேரங்களில் சிவன் சன்னதிக்கு வந்து வழிபாடு செய்வதாகக் கூறுகிறார்கள். அதன் பின் அந்த பல்லவ மன்னன் தனக்கு ஏற்பட்ட இந்த நன்மையானது, நாகேஸ்வரரை தரிசிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வேண்ட அம்முனிவரும் அவ்வாறே வரம் வழங்கினார். இன்றும் கால சர்ப்பதோஷம், நாகதோஷம், இராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகேஸ்வரரை தரிசித்து நன்மையடைந்து வருகிறார்கள்.
இந்த கோயில் பூவரசன்குப்பத்தின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது சிறப்பாகும். ஈசான்ய மூலை கோயில்களில் தரிசனம் செய்வது உடல்நலத்தைத் தரும். சுற்றுப்பிரகாரத்தில் நாகராஜனுக்கு தனி சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.
திருவிழா:
சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி காலங்களில் விசேஷ பூஜை உண்டு.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply