மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழைய கவுண்டன்புதூர்

அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழைய கவுண்டன்புதூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4296- 270 558, +91- 98652 95559

காலை காலை 10- 12 மணி வரை திறந்திருக்கும், மற்ற நேரங்களில் திறக்க வேண்டுமானால், முன் கூட்டியே அர்ச்சகரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

மூலவர் மொக்கணீஸ்வரர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குட்டகம்
ஊர் கூழைய கவுண்டன்புதூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இரண்டு வணிகர்கள் இத்தலம் வழியாக வியாபாரத்திற்காக வெளியூர் சென்றனர். அதில் ஒருவர் சிவபக்தர். தினமும் சிவவழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் துவங்கமாட்டார். அவர்கள் இங்கு ஒருநாள் இரவில் தங்கினர். மறுநாள் காலையில் சிவபக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், அவ்விடத்தில் இலிங்கம் எதுவும் இல்லை. அவருடன் வந்த நண்பர், சிவபக்த நண்பரின் பக்தியை கேலி செய்யும் விதத்தில், அவருக்கு தெரியாமல் குதிரைக்காக கொள்ளு வைத்திருந்த பையில் மணலை நிரப்பி, சிவலிங்கம் போல் தோற்றம் உருவாக்கி, மாலையிட்டு ஓரிடத்தில் வைத்தார். “நண்பா! இதோ சிவலிங்கம், இதை பூஜித்துக் கொள்என்றார். அப்பாவி பக்தரும், அதை நம்பி கோணிப்பை இலிங்கத்துக்கு பூஜை செய்தார். பூஜை முடிந்ததும்,”ஏமாந்தாயா! இது இலிங்கம் இல்லை, கோணிப்பைஎன்ற நண்பர், அதை எடுத்துக் காட்ட முயன்றார். ஆனால், அதை அசைக்கக்கூட முடியவில்லை. அது நிஜ இலிங்கமாக மாறியிருந்தது. இந்த அதிசயம் கண்டு நண்பரும் மனம் திருந்தினார். அவரும் சிவபக்தரானார்.

கொள்ளு வைக்கும் பைக்கு மொக்கணிஎன்று பெயர் உண்டு. எனவே சிவன், “மொக்கணீஸ்வரர்என்று பெயர் பெற்றார். சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. இந்தக் கோயில் முழுமையாக அழிந்து போயிருந்தது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கீர்த்தி திருத்தாண்டகத்தில்இத்தலம் பற்றி,”மொக்கணி அருளிய முழுத்தழல்மேனி சொக்கதாகக் காட்டிய தொன்மையும்எனக் குறிப்பிட்டு பாடியுள்ளார். இப்பாடலை அடிப்படையாக வைத்து மீண்டும் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

அளவில் சிறிய கோயில். அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள்.

முன் மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். இவருக்கான குருபூஜை சிறப்பாக நடக்கிறது. அருகில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபத்தில், மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில், கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். இத்தல விநாயகர், “மூத்த விநாயகர்என அழைக்கப்படுகிறார்.

அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளது.

திருவிழா:

திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி.

கோரிக்கைகள்:

பிறரை நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானவர்கள் இங்கு வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *