மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தக(ட்)டூர்
அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தக(ட்)டூர், தர்மபுரி மாவட்டம்.
+91-4342- 268640
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மல்லிகார்ஜூனேசுவரர் | |
அம்மன் | – | காமாட்சி | |
தல விருட்சம் | – | வேலாமரம் | |
தீர்த்தம் | – | சனத்குமாரநதி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தகடூர் | |
ஊர் | – | தகட்டூர் | |
மாவட்டம் | – | தர்மபுரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாசுபத வரத்தைப் பெறும் பொருட்டு அர்ச்சுனன் தவம் இருக்கிறான். அவன் தவத்தை சோதிக்க ஈசன், வேடன் ரூபம் கொண்டு வருகிறான். அப்போது அர்ச்சுனனுக்கும் வேடனுக்கும் சர்ச்சை நிகழ்ந்து சண்டை வருகிறது. “நீ என்ன பெரிய வேடனா?” என்று வில்லாலேயே சுவாமியை அர்ச்சுனன் அடிக்கிறான். பின்னர் வந்திருப்பது ஈசன்தான் என்பதை தெரிந்துகொண்டான் அர்ச்சுனன். பரத்வாஜ் ரிஷிகள் மூலம் தான் பெரிய பாவம் செய்துவிட்டதாக உணர்ந்து இங்கு வந்து தவம் செய்கிறான். இங்கு மல்லிகைப் பூ கொண்டு சிவபூஜை செய்ததால் சுவாமிக்கு மல்லிகார்ஜூனேசுவரர் என பெயர் வந்தது.
சுந்தரரின் நண்பர் சேரமான் பெருமான் வடக்கிருந்து போகும்போது பூரி சித்தர் மூலம் இத்தலத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, இங்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.
அதியமான் மூலம் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
அருள் தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள். எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு கத்தி, கேடயம் ஏந்தி, மகிஷன் கீழே வீழ்ந்துள்ள காட்சியும், அம்பிகை சூலினி இடது கரத்தால் மகிஷன் கொம்பை பற்றியும், இடது பாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்காரத்தில் அருள்புரியும் காட்சி கருவறையில் கிழக்கு நோக்கி உள்ளது. இதுபோலத் தமிழகத்தில் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும்.
ராகுவைப் போல கொடுப்பாரில்லை எனும் முதுமொழிப்படி ராகுகிரக அதிதேவதை துர்க்கையை தர்மர் முதலானோர் வழிபட்டு, இழந்த நாடு முதல் அனைத்தையும் பெற்றுள்ளார். ரத்னத்ரயம் எனும் வகையில் மூவகை சூலங்களுடன் காரண, காரணி, அதற்கான பலன் எனும் மூவகை பயன்களை அருளும் சூலினியை முழுவதும் சந்தனக் காப்பு தோற்றத்தில் வருடத்தில் ஆடி 3 ம் செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும். வார நாட்களில் பிரதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 5.30 வரையும் 5.30 முதல் 6 .00 மணி வரையிலும் கால பைரவர், சூலினி வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது.
பைரவர் இத்திருத்தலத்தில் யந்திர வடிவில் சூரிய சந்திரன் அக்னி ஜூவாலையுடன் அருள்பாலிக்கிறார். சங்ககால மன்னரான அதியமான் நெடுமானஞ்சி முதல் பல பேரரசர்களால் இம் மகாபைரவர் வழிபாடு செய்யப்பட்டதாம்.
“பைரவர்” என்ற பதத்திற்கு “பயத்தை போக்குபவர்” என்றும் “பயத்தை அளிப்பவர்” என்றும் பொருள். பிரபஞ்சத்தில் உள்ள சகல ஜீவராசிகளும் வான மண்டலத்தில் உள்ள சூரியன் முதலான கிரகங்களும் நட்சத்திரங்களும் காலச் சக்கரத்தின் ஆளுகைக்குட்பட்டதே. காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் காலபைரவர் ஆவர். காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி பக்தர்களுக்கு நன்மை செய்பவரும் இவரே. தஞ்சம் என்று வரும் பக்தர்களை எந்த அபாயத்திலிருந்தும் காத்து ரட்சிப்பவர். நிரபராதிகளுக்கு அபயம் அளித்து எதிரிகளை அழிப்பவர். திருமணத் தடைகளை நீக்குபவர். சந்தான பாக்கியத்தை அருள்வார். பொருள் தந்து வறுமையை போக்குவார். இழந்த வழக்குகளில் வெற்றிபெறச் செய்வார். இவரது கருணையால் வியாபாரம் விருத்தியாகிப் பல மடங்கு லாபம் கிடைக்கும். பங்குதாரர்களுக்குள் ஒற்றுமை நிலவும். ஏழரையாண்டு சனி, அட்டமத்து சனி, இதர கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை அடியோடு அகற்றுவார்.
பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிறப்பு வழிபாடும் வளர்பிறை அஷ்டமி திதி, பிரதி சனி, ஞாயிறு நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 வரை வழிபாடும் நடைபெறும்.
வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி சங்க காலத்தில் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்கிய வரலாற்றுப் புகழ் பெற்ற தகடூர் தலம் இது. திருமாலின் நான்கு அவதாரங்களான யோக நரசிம்மர், இராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோரால் வழிபட்ட, சுயம்பு லிங்கத் தலம். ஆதியில் பாணாசுரனால் ஸ்தாபிக்கப்பட்ட தலம் இது. சுந்தரர், சம்பந்தர், அவ்வை, அரிசில் கிழார், பொன்முடியார், பரணர், கபிலர், நாகையார், அதியன், விண்ணத்தனார் முதலிய புலவர்களால் பாடிப் பணியப்பட்ட திருத்தலம்.
9 ம் நூற்றாண்டிலே திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில். ராமன் தவமிருந்த இடம் இத்திருத்தலம். ஆறுமுகர் எட்டு திக்கை பார்க்கும் வகையில் ஆறுமுகங்களுடனும் ஐயப்பனைப் போல குந்தலம் இட்டு காட்சி தருகிறார். பாதத்தை ஒரு நாகம் தாங்குகிறது. மயில் அலகில் ஒரு நாகத்தைக் கொண்டுள்ளது. சுவாமி சந்நிதியில் அஷ்டதிக்கு பாலகர்களை அற்புதமாக சிற்ப வடிவமாக்கி உள்ளனர். இத்தலவிநாயகர் செல்வகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்டரை டன் எடையுள்ள தொங்கும் தூண்கள் இரண்டு இங்குள்ளது. தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சந்நிதி சுவாமியின் சந்நிதியை விட உயரமாக இருக்கிறது.
திருவிழா:
ஆடி மாதம் – ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம். வெள்ளி சிறப்பு சந்தன காப்பு, பூப்பந்தல் சேவை. தை மாதம் – சண்டி ஹோமம் – 2 நாட்கள் விழா. மார்கழி மாதம் – சிறப்பு பூஜை விழாக்கள்.
வைகாசி – தேரோட்டம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உற்சவம்.
இத்தலத்தில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆங்கில, தமிழ் புத்தாண்டு தினங்களன்று கோயிலில் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுகிறார்கள்
கோரிக்கைகள்:
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் தொல்லை தீரவும் இத்தலத்தில் வேண்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக படிபூஜை செய்கின்றனர். இங்குள்ள அம்பாளான காமாட்சி சந்நிதியில் உள்ள 18 படிகளும் மிகவும் விசேஷமானவை. இந்த 18 படிகளுக்கும் மலர்களால் அலங்காரம் செய்து 16 விதமான பொருட்களால் அபிஷேகம் செய்து 18 படிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து, ஜவ்வாது சந்தனம் கலந்து பூசி, முக்கனிகள் படைத்து, புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.
தவிர சுவாமிக்கு தேன்,நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். தவிர உலர்ந்த தூய ஆடை சாத்தலாம். அம்பாளுக்குப் புடவை சாத்துகிறார்கள். பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.
Leave a Reply