காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி, சோழவந்தான், மதுரை.
காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.விசேஷ நாட்களில் அதிகாலையிலும் நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | காசி விஸ்வநாதர் |
அம்மன் | – | விசாலாட்சி |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | கிணற்று தீர்த்தம் |
ஆகமம் | – | சிவாகமம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | இரும்பாடி, சோழவந்தான் |
மாவட்டம் | – | மதுரை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த போது, தற்போது இரும்பாடி என்றழைக்கப்படும் இவ்வூரில் அவர்களின் படை பலத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியினைச் செய்து வந்தனர். அப்போது, கவனக் குறைவு காரணமாக சில வீரர்கள் தம் உடல் உறுப்புக்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வீரர்கள் போரில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆயுதங்கள் தயாரிப்பின் போது வீரர்களின் உடல் உறுப்பு இழப்புகளைத் தவிர்க்கவும், அவர்கள் போர் புரியும் போதும் வேட்டையாடும் போதும் வெற்றி மட்டுமே கிட்டவேண்டும் என்பதற்காகவும் சிவனிடம் முறையிடுவதற்காக, இத்தலத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.
தென் மாவட்ட கிராமங்களில் தண்டட்டி எனப்படும் பாம்படத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பர். மெழுகின் மேல் கனமான தங்கத்தகட்டால் மூடி இந்த ஆபரணம் செய்யப்படும். இதை அணியக் காதை வளர்த்து, அதில் பெரிய துவாரம் போடவேண்டும். அதில் பாம்படம் அணியப்படும். இந்த ஆபரணம் வெகு காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின் மனைவியான பார்வதி முதிய கோலத்தில், பாம்படம் அணிந்து இக்கோயிலில் அருட்காட்சி தருகிறாள்.
இக்கோயிலில் காசிலிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடிவிலான பஞ்சநாக சிலைகள் அமைந்திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது.
காசிவிஸ்வநாதர் உயரம் குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்பாக உள்ள நந்தி சிலையானது, உயிர்ப்புடன் காட்சி தருகிறது. இத் தலத்தின் தீர்த்தக்கிணறு நீர் இன்று வரையிலும் வற்றாமல் தனிச்சுவையுடன் உள்ளது. போரில் வெற்றி பெறு வதற்காக மராட்டி மாவீரன் சிவாஜி இத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வ நாதரை வணங்கிய சிறப்பு பெற்ற தலம். பங்குனி மாத திருவிழா நடை பெறும் நேரத்தில் காசிலிங்கத்தின் நெற்றியில் நேரே சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பிப் பூஜை செய்கிறான்.
திருவிழா:
பங்குனியில் மூன்று நாள் பிரம்மோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் விழா கொண்டாடப்படுகிறது. அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
பிரார்த்தனை:
வேண்டிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், விவசாய தானியங்களும் படைக்கப்படுகிறது. நாகதோஷம் நீங்கிட பஞ்சநாகத்திற்குப் பால் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து அர்ச்சனைகள் செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
திருமணத்தடை நீங்கியவர்கள் சுவாமிக்கு புத்தாடை சாத்துகின்றனர்.
வழிகாட்டி :
சோழவந்தானில் இருந்து 5 கி.மீ., மதுரையில் இருந்து 30 கி,மீ.,தூரத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து கருப்பட்டி என்ற கிராமத்துக்கு செல்லும் பஸ்கள் இவ்வழியாகச் செல்கின்றன. சோழவந்தானில் இருந்து மினி பஸ்களும் செல்கின்றன.
Leave a Reply