ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம்
அருள்மிகு ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.
+91-4573-221 223, 221 241
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் | |
தீர்த்தம் | – | ஜடா மகுட தீர்த்தம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ராமேஸ்வரம் | |
மாவட்டம் | – | ராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வேத வியாசரின் மகனாகிய கிளி முகம் கொண்ட சுகர் பல்வேறு யாகங்களை செய்தார். ஆனால், தவயோக ஞானசித்திகளை அடைய முடியவில்லை. ராஜமுனி ஜனகரின் அறிவுறைப்படி சுகர் ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி, தியானலிங்க மூர்த்திகளாக விளங்கிவரும் ஞானேஸ்வரர், அஞ்ஞானேஸ்வரரை வழிபட்டு ஞானியாக திகழ்ந்தார்.
கொடுங்கோபியாகிய துர்வாச முனிவரும், சாந்தசீலராகிய பிருகு முனிவரும் வெவ்வேறு காலங்களில் புனித நீராடி அரிதான யோகசக்திகளை பெற்ற சிறப்புடையது இந்த ஜடாமகுட தீர்த்தம்.
ராமநாதசுவாமி, தியானலிங்க மூர்த்திகளான அஞ்ஞானேஸ்வரர், ஞானேஸ்வரராக விளங்குகிறார். இங்குள்ள தீர்த்தம் காமம், குரோதம், மோகம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களை விடுபடச் செய்கிறது. மக நட்சத்திரம் வரும் நாட்களில் இக்குளத்தில் நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகங்களில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடி லிங்க மூர்த்திகளை வழிபட்டுவர பிரம்மகத்தி தோசம் நீங்கி, கோடி புண்ணியம் சேரும். மனம் தூய்மையடையும். புத்திரபேறு கிடைக்கும்.
சித்தர்களும், தேவதைகளும் அரூபமாக உலாவரும் இத்தலத்தில் வனபோஜனம் (அன்னதானம்)நடத்தி, தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்களது குறைகளை செவிமடுத்து, தியானலிங்க மூர்த்திகளே நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து விரதம் இருந்து தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதுடன் செல்லலாம்.
இராவணனை வதம் செய்து சீதாபிராட்டியை மீட்டு வரும் வழியில் இராமேஸ்வரத்தில் தங்கினார் இராமன். தனது சடை முடியில் தோய்ந்திருந்த அரக்கர்களின் ரத்தத்துளிகளை இக்குளத்தில் சுத்தம் செய்து நீராடியதால் பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்றாராம்.
திருவிழா:
சிவராத்திரி, மாசி மகம் ஆகியவை முக்கியமானவை.
கோரிக்கைகள்:
குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து விரதம் இருந்து தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதுடன் செல்லலாம்.
Leave a Reply