தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மலிங்க மலை

அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மலிங்க மலை, மதுக்கரை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 98422 22529

காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தர்மலிங்கேஸ்வரர்
அம்மன்
தல விருட்சம் வில்வமரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தர்மலிங்க மலை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கு தனி சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதைக் காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

நவகிரக சன்னதி அருகில் மும்மூர்த்தி மரம் என்ற மாமரம் இருக்கிறது. இந்த மரத்தில் மூன்று வகை சுவையுடைய மாங்கனிகள் காய்க்கிறது. தலவிருட்சம் வில்வமரம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒருமண்டபமும், அதை அடுத்து மிகப்பழமையான புற்று ஒன்றும் உள்ளது. இந்த புற்றில் வயது முதிர்ந்த சர்ப்பம் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனருகே கடுமையான வறட்சி காலத்திலும், வற்றாமல் நீர் சுரந்து கொண்டிருக்கும் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து தான் மலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலைப்படிக்கட்டு வழியே நடந்து சென்றால் அரை மணி நேரத்தில் மலையின் உச்சியை அடைந்து விடலாம். அங்கு அமைந்துள்ள கோயிலில் தான் தர்மலிங்கேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமியின் எதிர்புறத்தில் நந்தியும், வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறத்தில் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். இப்பகுதியில் வாழும் மலை ஜாதி மக்கள் இவரை குலதெய்வமாக வழிபடுகிறார்கள். கார்த்திகை மாதத்தில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முறை வைத்து 3 நாட்களுக்கு மலை மீது தீபம் ஏற்றுகின்றனர். 4 கி.மீ. தூரம் சுற்றுப்பாதை உள்ள இந்த மலையை பவுர்ணமி நாட்களில் திருவண்ணமாலைக்கு அடுத்தபடியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

கோவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பாலக்காடு மெயின் ரோட்டில் மதுக்கரை மரப்பாலம் அருகே மேற்கு பகுதியில் மலையின் மீது தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 மீட்டர் உயரத்தில் மலை அமைந்துள்ளது. மலையின் மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகள் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் விநாயகர் கோயிலும், நவகிரக சன்னதியும் உள்ளது.

திருவிழா:

மகாசிவராத்திரியில் விடிய, விடிய கோயிலில் பஜனை நடத்தப்படுகிறாது. அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி தைப்பூசத்தன்றும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. தர்மர் வழிபட்டதால் நியாயம், தர்மம், வழக்குகளில் வெற்றி, மற்றும் நீதி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடுசெய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *