பூமிநாதர் திருக்கோயில், செவலூர்

அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை மாவட்டம்.

+91 4322 221084, 97869 65659

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூமிநாதர்
அம்மன் ஆரணவல்லி
தீர்த்தம் பிருத்வி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் செவலூர்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருதயுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்துத் தரவேண்டும் என்பது அவளது வேண்டுகோள். அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதாயுகம், துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது.

உனது பக்தர்கள் உன்னை பூஜிப்பதன் மூலமே இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை என சொல்லி மறைந்தார். இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என தேடியலைந்த பூமாதேவி, அவள் பல தலங்களுக்கும் சென்றாள்.

சென்ற இடமெல்லாம் ஆங்காங்கு இருந்த சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். அவள் பிரார்த்தித்த மூர்த்திகளுக்கு பூமிநாதர், பூலோகநாதர் என்ற பெயர்கள் ஏற்பட்டது. அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும்.

வாஸ்து நாட்களில் விசேட பூசை நடக்கும் கோயில்களில் ஒன்று. இத்தலத்திற்கு அருகில் உள்ள கோயில்கள்: விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், சிகாநாதர் திருக்கோயில்.

செவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம் இது. இத்தலத்து இலிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த இலிங்கத்தை பூசித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூசித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.

திருவிழா:

சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை

கோரிக்கைகள்:

பூகம்பம், நிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும்.

தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோடம், நாகப்புற்றுகளை அழித்த கொடுமை, கோயில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம்.

இதுதவிர முதுகுவலி, மூலம், பிருஷ்ட நோய்களால் உட்கார முடியாதவர்கள் நிவாரணம் பெறவும் இங்கு விசேட பூசை நடக்கிறது.

பூகம்பத்தால் இறந்த ஜீவன்கள் நற்கதியை பெறவும், கோர்ட் வழக்குகள் முடியவும், உறவினர் பகை தீரவும், தடைப்பட்டுள்ள காரியங்கள் முடியவும் இங்கு வேண்டிக்கொள்மின்றனர். வாஸ்து நாளில் இங்கு வந்து விசேஷ பூசை செய்பவர்களுக்கு பலன் கிட்டும். வாஸ்து நாளை தவற விட்டால் செவ்வாய்கிழமைகளில் இப்பூஜையை நடத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *