அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர்
அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர், நாமக்கல்மாவட்டம்.
+91- 4286 – 257 018, 94433 57139
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அசலதீபேஸ்வரர், குமரீஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | மதுகரவேணியம்பிகை, குமராயி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | காவிரி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மகனூர் | |
ஊர் | – | மோகனூர் | |
மாவட்டம் | – | நாமக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கைலாயத்தில் நாரதர் கொடுத்த கனியை சிவன், விநாயகரிடம் கொடுத்ததால் கோபம் கொண்ட முருகன், தென்திசை நோக்கி கிளம்பினார். சிவனும், அம்பிகையும் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. அம்பிகை அவரை பின்தொடர்ந்தாள். சிவனும் உடன் வந்தார். மயில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகனை அம்பிகை நிற்கும்படி கூறினாள். தாயின் சொற்கேட்ட மகன் நின்றார். அம்பிகை அவரை கைலாயத்திற்கு திரும்பும்படி அழைத்தாள். ஆனால் முருகன், தான் தனியே இருக்க விரும்புவதாக கூறி, பழநிக்குச் சென்றார். இவ்வாறு முருகனை அம்பிகை அழைக்க அவர் வழியில் நின்ற தலம் இது. இவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இவரே இத்தலத்தில் அசலதீபேஸ்வரராக காட்சி தருகிறார்.
இத்தலம் தேவார வைப்புத்தலமாக கூறப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் விசேடம். அதேபோல் கார்த்திகைக்கு முதல் நாளில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இங்கு ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேடம். அப்போது சுவாமிக்கு விசேட அபிசேகம், பூசை செய்யப்படுகிறது.
சிவபக்தரான பீஜாவாபா மகாமுனி இத்தல இறைவன் மீது பக்தி கொண்டு இங்கேயே சிவனுக்கு சேவை செய்து வந்தார். இவர் ஒவ்வொரு கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்றும் இங்கு சுவாமி சன்னதி எதிரேயுள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். இதன் அடிப்படையில் தற்போதும் இங்கு பரணி தீப வழிபாடு விசேடமாக இருக்கிறது.
இந்த முனிவரின் சிற்பம் கோயில் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் புடைப்புச்சிற்பமாக இருக்கிறது.
சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தீப வழிபாட்டுடன் தொடர்புடைய தலம் என்பதால், இவரது சன்னதியில் எப்போதும் அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீபம் அசையாமல் எரிவதால் சுவாமி, “அசலதீபேஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். “அசலம்” என்றால் “அசையாதது” என்று பொருள். சுவாமி, இத்தலத்தில் தியானக் கோலத்தில் இருப்பதால், தீபம் அசைவதில்லை என்கிறார்கள்.
தாயார் மதுகரவேணி கிழக்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறாள். இவளது சிலை திருவாட்சியுடன் சேர்த்து ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது விசேடம். முருகனைக் கைலாலயத்திற்கு அழைப்பதற்காக அவரைப் பின்தொடர்ந்தபோது, முருகனை நேரில் பார்த்தவுடனேயே பாசத்தில் இந்த அம்பிகை பால் சொரிந்தாளாம். எனவே இவள் “மதுகரவேணி” என்று அழைக்கப்படுகிறாள். மது என்றால் பால் என்ற பொருள் உண்டாம். பவுர்ணமிதோறும் இவளுக்கு விசேட பூசை நடக்கிறது. அந்நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால், புத்திரப்பேறு உண்டாவதாக நம்பிக்கை.
ஆரம்பத்தில் இத்தலத்தில் சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இத்தல சிவனின் பக்தையான குமராயி என்ற பெண், தயிர் விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். குழந்தை பாக்கியம் இல்லாத அவள், இங்கு சிவனுக்கு சேவை செய்து வந்தாள். தினமும் தயிர் விற்றது போக, பாத்திரத்தில் மீதமிருப்பதை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுவாள். ஒருசமயம் இவள் கருத்தரித்து, அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். ஊரார் அவளைத் தவறாக பேசினர். தான் பத்தினி என்பதற்கு சிவன் ஒருவரே சாட்சி என்ற அவள், இங்குள்ள காவிரி நதியில் இறங்கி நதிக்குள் ஐக்கியமானாள். அவ்விடத்தில் இருந்து அம்பிகை எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தாள். தானே தயிர் விற்கும் பெண்ணாக வந்ததை உணர்த்தினாள். அதன்பின், இத்தலத்தில் அம்பாளுக்குத் தனி சன்னதி எழுப்பப்பட்டது.
அம்பிகை குமராயி என்னும் பெயரில் இங்கு வாழ்ந்ததால் இத்தலத்து அம்பிகைக்கு குமராயி என்றும், சிவனுக்கு குமரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு.
இத்தலத்தில் சிவன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் அம்பிகை இருவரும் ஒருவருக்கொருவர் வலப்புறமாக காட்சி தரும்படி இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பு கோடியில் ஒன்று. மூலவருக்கு அருகில் சிறிய பாணலிங்கம் ஒன்று இருக்கிறது. இந்த இலிங்கம், தயிர் விற்கும் பெண்ணாக வந்த அம்பிகையால் வழிபடப்பட்டது என்கிறார்கள். மூலவருக்கும், பாணலிங்கத்திற்கும் ஒரே நேரத்திலேயே பூசை நடக்கிறது. இத்தலத்திற்கு அருகில் காவிரி நதி, காசி போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. காவிரியைப் பார்த்தபடி சுவாமி காட்சி தருகிறார். ஆடிப்பெருக்கின்போது சுவாமி, அம்பாளுக்கு விசேட பூசை நடக்கிறது. சிவன், அம்பாள் சன்னதிக்கு நடுவே முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
பிரகாரத்தில் விநாயகர், நாகத்தின் மத்தியில் காட்சி தருகிறார். அருகில் முருகன் இருக்கிறார். நாகதோசம் உள்ளவர்கள் இந்த விநாயகருக்கு பாலபிசேகம் செய்து வழிபடுகிறார்கள். கோயிலுக்கு வெளியே வேம்பு மரத்தின் அடியில் மற்றொரு விநாயகர் இருக்கிறார். திருமணத்தடை உள்ள பெண்கள், இவருக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.
காலபைரவருக்கு தனிச்சன்னதி உள்ளது. வாராகி, வைணவி, சாமுண்டி ஆகிய முத்தேவியரும் பிரகாரச் சுவரில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் மற்றும் முத்தேவியருக்கு விசேட பூசை நடக்கிறது. கோயிலுக்கு வெளியே சரபேசுவரர் சன்னதி உள்ளது.
அம்பாள் சன்னதி முன்மண்டபத்திலுள்ள ஒரு கல்லில், சிவதுர்க்கை புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். மகிடாசுரனை வதம் செய்த துர்க்கையம்மன், காலுக்கு கீழே மகிடாசுரனுடன் மட்டும்தான் காட்சி தருவாள். ஆனால் இவள் எட்டு கரங்களுடன், பின்புறத்தில் ஆடு வாகனத்துடன் காட்சி தருகிறாள். துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அபூர்வம்.
அம்பிகை மகனை அழைக்க அவர் நின்ற ஊர் என்பதால், “மகனூர்” என்றழைக்கப்பட்ட இத்தலம், “மோகனூர்” என்று மருவியது. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில், முருகன் நின்றதாக கருதப்படும் இடத்தில் குன்றின் மீது முருகன் தனிக்கோயிலில் அருளுகிறார்.
சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
திருவிழா:
கார்த்திகை பரணியில் தீபத்திருவிழா, சிவராத்திரி, ஆருத்ராதரிசனம்.
கோரிக்கைகள்:
காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அதிகளவில் ஆயுள் ஹோமம் மற்றும் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply