அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர்
அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர், கோவை மாவட்டம்
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
இறைவன்: அர்ச்சுனேஸ்வரர்
அம்மன் : கோமதியம்மை
விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் காரத்தொழுவு என்ற கிராமத்தில் இருந்து கொங்கேலசங்கு என்ற கிராமத்திற்கு தினமும் 60 குடம் பால் சென்றுகொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குடம் பால் மட்டும் சிந்தியது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது ரத்தம் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து இரத்த ஆறாக மாறிவிட்டது. பயந்துபோன மக்கள் அவ்விடத்தை ஆராய்ந்துபார்த்தனர். பால் விழுந்த இடத்தைத் தோண்டியபோது உள்ளே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் தலையில் வெட்டுப்பட்டிருந்தது. இப்போதும் இந்த லிங்கத்தின் தலையில் வெட்டுக்காயம் இருக்கிறது. சுயம்பு இலிங்கமாக வெளிப்பட்ட சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார். பத்தாம் நூற்றாண்டில் இந்த கோயில் எழுப்பப்பட்டது.
பல்வேறு வடிவங்களில் லிங்கத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால், பாம்புப் புற்றுவடிவத்திலுள்ள இலிங்கத்தை கோவை மாவட்டம் கடத்தூரிலுள்ள அர்ச்சுனேஸ்வரர் கோயிலில் மட்டுமே காணமுடியும்.
கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம் கொண்ட கோயில் இது. மிகப்பெரிய ஆவுடையாருடன் மிகப்பெரிய சுயம்புலிங்கமாக சிவன் எழுந்தருளி உள்ளார். சூரியன் காலையில் உதித்ததும் அமராவதி ஆற்றுத் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிக்கும் காட்சி மிகவும் அழகாக இருக்கும். எந்தக்காலத்திலும் இது மாறுவதில்லை. கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் அமைந்துள்ளது. அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள 11 சிவாலயங்களில், இந்த கோயிலில் மட்டுமே சுயம்புலிங்கம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி கல்லால் செய்யப்பட்டவர் அல்ல. காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக் கல்லால் உருவானவர். வியாழக்கிழமைகளில் இவருக்கு சிறப்பு பூசை நடக்கிறது. அம்மன் கோயில் வாசல் தனியாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அம்மன் சன்னதியின் இடதுபுறம் ஒரு புற்றுலிங்கம் வளர்ந்துவருகிறது. அதை அரளிச்செடி ஒன்று பற்றியுள்ளது. மதுரை மீனாட்சி கோயிலைப் போன்று இந்த தலத்தில் சுவாமியின் வலதுபுறம் அம்மன் சன்னதி அமைந்திருக்கிறது. அம்பாள் ‘கோமதியம்மை‘ எனப்படுகிறாள். தல விநாயகராக வலம்புரி விநாயகர் உள்ளார்.
இது சூரிய ஒளிக்கோயில் என்பதால் அதிகாலையிலேயே திறந்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
வழிகாட்டி: கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையிலிருந்து கணியூருக்கு செல்லும் பஸ்களில் 18 கி.மீ. தூரம் சென்றால் கடத்தூர் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளலாம்.
Leave a Reply