அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், அரசூர்
அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், அரசூர், தஞ்சாவூர் மாவட்டம்.
தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திற்கு முற்பட்ட காலத்துக் கோயிலாகக் கருதப்படுகிறது அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில். “சோழ வம்சாவழியில் கடைசியாக அரசாண்ட மன்னர்கள் புதுப்பித்த கோயில் இது” என்றும் சிலர் கூறுகிறார்கள். சோழ, பல்லவ, நாயக்க, மராட்டிய காலக் கட்டமைப்புடன் இவ்வாலயம் காட்சியளிக்கின்றது என்பது, இங்கே குறிப்பிடத் தக்க தகவல்.
சுவாமி, அம்மன் சந்நிதிகளின் விமானங்கள் திராவிடக் கட்டிடக் கலையின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. அர்த்த மண்டப விதானங்கள், காரை – சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டு மராட்டிய மரபுடன் காட்சியளிக்கின்றன. முன் மண்டபம் மிகப் பெரிய அகலமான தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் பிரம்மாண்டமாக விளங்குகிறது. இது நாயக்கர் கால சாயலில் உள்ளது. கோயிலில் ஆங்காங்கே காணப்படும் சிறிய சிறிய வேலைப்பாடுகள் பல்லவ கட்டிடக் கலையை சார்ந்திருக்கின்றன.
தஞ்சாவூர் மராட்டிய மன்னனான இரண்டாம் சிவாஜி காலத்தில் அவரது நிர்வாகத்திற்கு உட்பட்டு 64 திருக்கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அவற்றுள் அரசூரில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயிலும் ஒன்று என ஆவணச் சான்று எடுத்துரைக்கின்றது. மராட்டிய மன்னர்கள், திருக்கோயிலில் அன்றாட பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் செவ்வனே நடைபெற நில மானியங்களை அளித்துக் கோயிலைப் பரிபாலித்து வந்தனர். தற்போதும் மராட்டிய போன்ஸ்லே வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளே இக்கோயிலின் அறங்காவலர்களாக விளங்க, தமிழக அறநிலையத்தின் கீழ் வருகிறது அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணியில் மராட்டிய மன்னர் துக்கோஜியின் கல்வெட்டு கிடைத்துள்ளது என தஞ்சை கல்வெட்டு ஆய்வாளர் தில்லைகோவிந்தராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி: சோழர் காலத்தில் இவ்வூரில் பல அதிகாரிகள் இருந்துள்ளனர். முதலாம் ராஜராஜனின் காலத்தை சேர்ந்த கோன்கொற்றன் என்பவர் மலைநாட்டு படையெடுப்பில் கலந்து கொண்டும், நாஞ்சில் நாட்டை நிர்வாகிக்கும் அரசியல் அதிகாரியாக இருந்தார், என சோழர் காலத்து நாகர்கோவில் கொம்மண்டையம்மன் கல்வெட்டால் அறிய முடிகிறது.இச்சோழ அரசனின் 14வது ஆட்சி ஆண்டில் திருப்பெருந்துறை கோவிலுக்கு பெரியதேவர், அஸ்திரதேவர் என்ற இரு இறை திருமேனிகளை இவ்வூரினை சேர்ந்த பெண் ஒருவர் செய்து அளித்தார் என்பதும் திருப்பெருந்துறை கல்வெட்டின் மூலம் அறியலாம்.இவ்வூர் அகஸ்தீஸ்வரர் கோவில் சோழர் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பின், தஞ்சை ஆண்ட அரச மரபுகள் பலர் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டிருந்தனர், என்பதையும் தற்போது கிடைத்துள்ள மராட்டிய மன்னரான துக்கோஜி காலத்து கல்வெட்டு, “(கி.பி.1706) விய விருடம் தை 20ம் தேதி அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமிக்கு துக்கோஜி ராஜா குடுத்த சன்னதி நிலம் இருவேலி” என்ற வரிகளுடன் இரண்டு அடி உயரத்திலும், அரை அடி அகலத்திலும் தமிழ் எழுத்தில் காணப்படுவதை கொண்டு அறியலாம்.இக்கோவில் சோழர் காலம் துவங்கி மராட்டியர் காலம் வரை சிறப்பாக திகழ்ந்துள்ளது எனவும், தற்போது திருப்பணி நடக்கும் நிலையில் இக்கல்வெட்டு கிடைத்துள்ளதை அறியலாம், என அவர் தெரிவித்துள்ளார்.
சூரிய வழிபாடு
அகஸ்தீஸ்வர லிங்க மூர்த்தி, மேற்கு நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அகஸ்தீஸ்வரருடன் சேர்ந்து அருட்பார்வை செலுத்தும் அம்மையின் திருநாமம் ஆனந்தவல்லி. அருள் பொழியும் அழகிய தோற்றத்தோடு காட்சி தருகிறாள் இந்த அன்னை. பெரிய திருச்சுற்று மதில்கள் காணப்படும் இக்கோயிலில் விநாயகர், சண்டேசர், மாரியம்மன் என பரிவார தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர்.
ஒவ்வொரு மாசி மாதமும் குறிப்பிட்ட நாட்களில், மாலைச் சூரியன், நேரடியாக அகஸ்தீஸ்வரர் திருமேனியின் மீது கதிர்களை இதமாகப் பரவவிடுவது அற்புதமான திருக்காட்சி. இந்நேரங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது தரிசனம் செய்வது அளப்பரிய நற்பயன்களைத் தரும் என்பது பக்தர்களின் கருத்து. “அகஸ்தீசா அகஸ்தீசா எனத் துதிப்போர்க்கு அல்லல் போம்” என்று பாடிப் பரவுகின்றனர் பக்தர்கள்.
“நவகிரகங்களின் அனைத்து ஆற்றல்களையும் கிரகித்து, தானே அடியார்களுக்கு நல்லவற்றை மட்டும் வழங்கும் பெரும் கொடையாளன் அகஸ்தீசன்” என்கிறார்கள் ஊரிலுள்ள பெரியோர்கள். அனைத்து தோஷங்களையும் முற்றாகப் போக்கும் கருணை மிக்கவராக அகஸ்தீஸ்வரர் உள்ளார்.
பல்லவர் குல சிற்றரசர் “சீரக்கன்” என்பவர், முக்கிய ஆலோசனைகளை அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமி முன்பு நின்று உத்தரவாகக் கேட்டுச் செயல்படுத்தியதாக செவிவழிச் செய்தி சொல்கிறது. “பொன் போலும் பொறி பறக்கும் கானகத்தே” என்று தொடங்கும் பாடலை பொய்யாமொழிப் புலவர் இவ்வூரிலிருந்து பாடியதாகச் சொல்வர். அவர் பெயரில் “பொய்யாமணி” என்ற இடமும் இவ்வூரில் உண்டு.
இந்தத் திருக்கோயிலுக்கு விளக்கேற்றுவதற்காக “ஷேக் தாவூத்கான்” என்ற இஸ்லாமியர், ஒரு இலுப்பைத் தோப்பை தானமாக வழங்கியுள்ளார். தஞ்சையிலிருந்த கிறிஸ்துவப் பாதிரிமார்களும் மதப் பாகுபாடின்றி இக்கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.
கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் புதிதாக விநாயகர், சுப்ரமணியர், நவகிரகங்கள், துர்கை என பரிவார தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் எழுப்பப்பட்டு அழகுடன் காட்சியளிக்கின்றன. கோயில் பிரகாரம் செப்பனிடப்பட்டு வலம் வர வசதியாக உறுதியான திருச்சுற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
அரசூர், தஞ்சாவூர் – திருவையாறு பிரதான சாலையில் உள்ளது. அரசூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சில நிமிட நடையில் திருக்கோயிலை அடையலாம்.
இது ஒரு வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது. அவருக்கு நன்றி.
Leave a Reply