அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், புள்ளமங்கை
அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், புள்ளமங்கை, தஞ்சை மாவட்டம்.
திருப்புள்ளமங்கை தற்போது பசுபதிகோவில் என்று வழங்குகிறது.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதி கோயில், தஞ்சை மாவட்டம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆலந்துறை நாதர், பசுபதி நாதர், பிரம்புரீசுவரர் |
அம்மன் | – | அல்லியங்கோதை, சௌந்தரநாயகி |
தீர்த்தம் | – | காவிரி, சிவதீர்த்தங்கள் |
புராணப் பெயர் | – | புள்ள மங்கை |
ஊர் | – | பசுபதி கோயில் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
குடமுருட்டி ஆற்றின் கரையில் இந்த ஆலயம் உள்ளது. ஊர்ப்பெயர் பண்டைநாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. ஆல மரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறைத் தலம் ஆதலின் ஆலந்துறை என்று பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. சம்பந்தர் தன் பதிகத்தின் எல்லா பாடலிலும் புள்ளமங்கை என்ற பெயரையும், ஆலந்துறையில் உறையும் இறைவன் என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டுக்களில் “ஆலந்துறை மகாதேவர் கோயில்” என்று இக்கோயில் குறிக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்கப்படுகிறது.
இத்தலத்திற்கு அருகிலுள்ள பாடல் பெற்ற தலமான திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட ஏழு தலங்களுள் இது 5வது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (இத்தலம்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியர்கள் மட்டுமன்றி, கேட்ட வரமருளும் தேவலோகப் பசுவான காமதேனு நாள் தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு. ஆகையால் இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது முதன் முதலில் வெளிவந்த ஆலகால நஞ்சினை எடுத்துச் சிவபெருமான் உண்டு தன் கழுத்தில் அடக்கிய ஊர் இத்தலம் என்பதால் இதலத்திற்கு ஆலந்துறை என்ற பெயரும், இறைவன் ஆலந்துறைநாதர் என்றும் கூட அழைக்கப்படுகிறார்.
சோழ மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. அவ்வகை மாடக்கோவிலகளில் திருப்புள்ளமங்கை ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் பெரிய முன்மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தின் வடபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, நேர்பின்புறத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.நால்வர் சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவையும் இவ்வாலயத்தில் உள்ளன
இத்தலத்தில் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க, இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சிதருகிறார். திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
சோழர் காலச் சிற்பச் சிறப்புக்களுடைய இக்கோவிலுள்ள சிற்பங்கள் யாவும் பார்த்து அனுபவிக்க வேண்டியவையாகும். அர்த்த மண்டபத் தூண்களில் அநேக சிற்பங்களைக் காணலாம்.
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் – தஞ்சாவூர் ரயில்பாதையில் உள்ள பசுபதி கோயில் ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 3 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. ஐயம்பேட்டைக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி, மாதாகோயிலிடத்தில் வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் பசுபதி கோயிலை அடையலாம். தஞ்சையிலிருந்து பசுபதி கோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு – கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.
எண்ணற்ற இன்னல் பட்டு படமெடுத்த நண்பர்களுக்கு நன்றி. வலைப்பூக்களில் சுட்டது நான்.
Leave a Reply