அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம்.
+91 – 431 – 243 2246 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.15 மணி முதல் 1 மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ரங்கநாதர் |
உற்சவர் | – | நம்பெருமாள் |
தாயார் | – | ரங்கநாயகி |
தல விருட்சம் | – | புன்னை |
தீர்த்தம் | – | சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள் |
ஆகமம் | – | பாஞ்சராத்திரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருவரங்கம் |
ஊர் | – | ஸ்ரீரங்கம் |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாகப் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த அரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். இராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த அரங்கநாதரை அளித்தார் இராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும், “காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம்” என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை(இலங்கை) நோக்கிப் பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
அரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு அரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.
டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி(புரோட்டா) நைவேத்யம் படைக்கப்படுகிறது.
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவர் பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.
இத்தலத்தில் பலகாலம் தங்கி அரங்கநாதருக்கு சேவை செய்த இராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்தப் பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.
ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி அரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம்(தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தைக் காவிரியே செய்வதாக ஐதீகம்.
கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அறிஞர்கள், “இராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது” என்றனர். கம்பர், “அதை நரசிம்மரே சொல்லட்டும்” எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, “கம்பரின் கூற்று உண்மை” என ஆமோதித்துத் தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது. கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோத்சவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்குப் பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.
அரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விசுவரூபக் காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.
மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால்(மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருக்கலாம். இங்குள்ள அரங்கநாயகி, தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் ஒலிக்கப்படுகின்றன.
மங்களாசாஸனம்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார்
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
–தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி – ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும். வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோத்சவம் (3 முறை) நடைபெறும் தலம்.
ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் “ஆடிப் பெருக்கு” உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.
சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோத்சவம் நடக்கிறது. சத்தியலோகத்தில் அரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, “ஆதி பிரம்மோற்ஸவம்” என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, அரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அரங்கநாதருக்கு, அயோத்தியில் இராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி இராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, “பூபதி திருநாள்” என்றே அழைக்கப் படுகிறது. இதை இராமனே நடத்துவதாக ஐதீகம். தவிரமாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.
வேண்டுகோள்:
மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம் கிட்ட, குழந்தை பாக்கியம் பெற, கல்வி, ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல். சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
வழிகாட்டி: திருச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது.
Leave a Reply