அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்
அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம் – 695001, கேரளா மாநிலம்.
+91-471-245 0233 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – அனந்த பத்மநாபன்
தாயார் – ஸ்ரீஹரிலஷ்மி
தீர்த்தம் – மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் – திருவனந்தபுரம்
மாவட்டம் – திருவனந்தபுரம்
மாநிலம் – கேரளா
வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், “உண்ணீ. (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு” எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, “பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத்தான் வரவேண்டும்” எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார்.
பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், “இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன்” என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டைப் பற்றிக் கேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் “உண்ணிக் கண்ணனாக” இருக்கவில்லை. ஒரு இலுப்பை மரத்தின் அடியில் பூமாதேவி மற்றும் இலட்சுமியுடன், அனந்தன் என்ற பாம்பு மீது பரந்தாமன் பள்ளி கொண்டிருப்பதைக் கண்ட சாமியார், மகிழ்ச்சியுடன் அவர்களை வணங்கினார். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூசாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. “பத்மநாப சுவாமி” என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட மூல விக்ரகம் 1686-ல் தீப்பிடித்தது. அதன் பின்னர் கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 12 ஆயிரம் சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்துப் புதிய சிலை உருவாக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ சிலையாகும். அதையே இப்போது தரிசனம் செய்கிறோம். அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாபன் விக்ரகம் 18 அடி நீளம் உடையது. உடல் முழுவதும் தங்கத்தகட்டால் பொதியப் பட்டிருக்கிறது. அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரசிம்மனும், சந்நிதிக்கு முன்னால் அனுமானும் சந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். அனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. இலக்ஷ்மி வராகர் கோயிலும், ஸ்ரீநிவாசர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.
பாடியவர்கள்:
நம்மாழ்வார் மங்களாசாசனம்
கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே
-நம்மாழ்வார்
திருவிழா:
பங்குனி, ஐப்பசியில் பிரம்மோத்சவம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 41 நாட்கள் நடக்கும் முறை ஜபத்தின் போது லட்சதீபம் நடக்கும்.
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
இருப்பிடம் :
திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
தங்கும் வசதி :
திருவனந்தபுரத்தில் உள்ள விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
Leave a Reply