விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர்

அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர், சேலம் மாவட்டம்.

+91438 292 043, +9194429 24707

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விருத்தாச்சலேஸ்வரர்
அம்மன் விருத்தாம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் குடமுருட்டி நதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் வெங்கனூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த குறுநில மன்னர்கள் இருவர் சிவன் மீது அதீத பக்தியுடையவர்களாக இருந்தனர். இவர்கள் பிரதோஷ வேளையில், விருத்தாச்சலத்திலுள்ள விருத்தாசலேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் பிரதோஷ பூஜைக்கு சென்றபோது கனத்த மழை பெய்தது. வழியில் இருந்த ஸ்வேத(குடமுருட்டி) நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவர்களால் நதியை கடக்க முடியவில்லை. “பிரதோஷ நேரம் கழிவதற்குள் உன்னை தரிசிக்க வேண்டுமே இறைவாஎன அவர்கள் சிவனிடம் முறையிட்டு வருந்தினர். அப்போது நதி இரண்டாக பிரிந்து வழிவிட்டது. பின்பு, விருத்தாச்சலம் சென்ற அவர்கள் சுவாமியை தரிசித்துவிட்டு திரும்பி விட்டனர். அடுத்த பிரதோஷ பூஜைக்கு கோயிலுக்கு சென்றபோதும், இதேபோல நிகழ்ந்தது. அன்றும் அவர்கள் சிவனைப் பிரார்த்தித்தனர். ஆனால், நதியில் வெள்ளம் வற்றவில்லை. அவர்கள் வருந்தி நின்ற வேளையில் அசரீரி ஒலித்தது. “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் பிரதோஷ தரிசனம் எவ்வகையிலும் தடைபடாது. இந்த ஆற்றின் கரையிலுள்ள வன்னிமரத்தின் அடியில் நான் சுயம்புவாக இருக்கிறேன். என்னை அங்கேயே வந்து வழிபடலாம்என்றது. அவர்கள் மகிழ்ச்சியுடன் வன்னிமரத்தடியில் பார்த்தபோது, சுயம்புலிங்கத்தை கண்டனர். அங்கேயே கோயில் எழுப்பினர். சுவாமிக்கு விருத்தாச்சலேஸ்வரர்என்றே பெயர் வைத்து விட்டனர்.

விருந்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை

அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 94428 44884

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விருந்தீஸ்வரர்
தல விருட்சம் முருங்கை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் வடமதுரை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் அவினாசி இலிங்கேஸ்வரையும் அன்னை கருணாம்பிகையையும் தரிசித்து விட்டு, விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது மிகுந்த பசி ஏற்பட்டது. தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர் அவரை உபசரித்தனர். கணவன், விசிறி விட, மனைவி வன முருங்கைக்கீரையுடன் அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது. இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக வந்த இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை அறிந்தார் சுந்தரர் நெகிழ்ந்து போனார். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் விருந்தீஸ்வரர்ஆனார். அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார்.