விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி (குன்னுவாரன்கோட்டை)

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி (குன்னுவாரன்கோட்டை), திண்டுக்கல் மாவட்டம்.

+91 4543 227 572, 97865 61935

காலை 6.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் உத்தரவாகினி
ஆகமம் காரணாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குன்று அரண் கோட்டை
ஊர் கண்ணாபட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த சிவபக்தர் ஒருவர், தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பரிமாறி, அதன்பின், தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் சிவனடியார் எவரும் அவர் கண்ணில் படவில்லை. தன் பணியாளரை அனுப்பி, ஊருக்குள் யாரேனும் சிவனடியார் இருந்தால் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். வைகை நதியில் சிவனடியார் ஒருவர் நீராடிக் கொண்டிருந்ததைக் கண்ட பணியாளர், சிவபக்தரிடம் வந்து தகவல் சொன்னார். அவர் சென்று அழைத்தார். “நானும் சிவ தரிசனம் செய்தபின்தான் சாப்பிடுவது வழக்கம்என்றவர், தன்னை ஒரு சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டினார். அப்போதுதான்,”அங்கு சிவாலயம் எதுவுமில்லைஎன்ற உண்மை சிவபக்தருக்கு உரைத்தது. இதைக்கேட்டு கோபம் கொண்ட அடியவர், சிவனுக்கு கோயில் இல்லா ஊரில் உபசரிப்பைக்கூட ஏற்றுக் கொள்ளமாட்டேன் எனச் சொல்லி சென்று விட்டார். இதனால், வருந்திய பக்தர் உடனே காசி சென்று ஒரு இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். இவருக்கு விஸ்வநாதர்என்ற பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் விசாலாட்சி அம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது.

விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

+91 4562- 299 800, 94865 11699

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் உருத்ராட்ச மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சாத்தூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன், இவ்விடத்தில் ஒரு விநாயகர் கோயில் இருந்தது. பிற்காலத்தில், பக்தர்கள் இங்கு விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் பத்திரகாளியம்மனுக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினர். ராஜகோபுரத்திற்கு இருபுறமும் சூரியன், சந்திரன் இருவரும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தரும்படி உருவாக்கப்பட்டனர். காலையில் சூரியனுக்கும், மாலையில் சந்திரனுக்கும் பூஜை நடத்தும் வழக்கம் உருவானது.

உலகை சமப்படுத்த தென்திசைக்கு வந்ததன் அடிப்படையில், இங்கு தெற்கு நோக்கிய அகத்தியர் சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. தை கடைசி வெள்ளியன்று இராகு காலத்தில், இங்குள்ள துர்க்கைக்கு சுமங்கலி பூஜை நடக்கும். அன்று பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை பிரசாதமாகத் தருவர். ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி உள்ளது. சிவன் சன்னதிக்கு இடப்புறம் பத்திரகாளியம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது.