Category Archives: சிவ ஆலயங்கள்

சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை (பேருந்து நிலையம் பின்புறம்), சிவகங்கை மாவட்டம்.

+91-98439 39761

காலை 6 – 10.30 மணி, மாலை 5 – இரவு 8.30 மணி. இராகு காலத்தை ஒட்டி இக்கோயில் செவ்வாய்க்கிழமை மாலை 3- இரவு 8.30 வரையிலும், வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.30 – மதியம் 12.30 வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் சசிவர்ணேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சிவகங்கை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சசி என்றால் சந்திரன். சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்ததால் சிவனுக்கு சந்திரசேகரர், சோமசேகரர் (சோமன் சந்திரன்), சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர்கள் ஏற்பட்டன. இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பி, சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர் சூட்டினார்.

இங்குள்ள பெரியநாயகி அம்பிகை பிரசித்தி பெற்றவள் ஆவாள். பவுர்ணமியன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். சித்திரைப் பிறப்பன்று இவளுக்கு விளக்கு பூஜையும் உண்டு. அன்று, சுவாமி புறப்பாடாவார். இப்பகுதியிலுள்ள பெண்கள் சுகப்பிரசவம் ஆக இவளிடம் வேண்டிக்கொள்கின்றனர். இதற்காக மருந்து குடிப்புஎன்னும் சடங்கை இப்பகுதியில் அதிகம் செய்கின்றனர். சுகப்பிரசவமாக அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்து, அதை பிரசாதமாகப் பெற்று பருகுகிறார்கள். ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் இங்கு வந்து இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். கோயிலுக்கு வரமுடியாத பெண்கள் சார்பில் அவர்களது குடும்பத்தார் வந்து, இந்த வழிபாட்டைச் செய்வதுண்டு.

சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், லால்குடி

அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், லால்குடி, திருச்சி மாவட்டம்.

+91 431 2541 329

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சப்தரிஷிஸ்வரர்
அம்மன் சிவகாம சுந்தரி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவத்துறை
ஊர் லால்குடி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் சிவனிடம் முறையிட்டார்கள் தேவர்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார். அதன்பொருட்டுதான் சூரனை அழிக்க முருகன் பிறந்தான்.

அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம்பாலகனான முருகனைக் கொண்டுவந்து அந்த ஏழு குடில் பகுதியில் போட்டார். ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அக்குழந்தையைப் பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத்துவங்கினான். ஏழு பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். குழந்தைக்குப் பசி ஏற்பட அழுகை அதிகரித்தது. ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள், தூக்கி பரிவோடு தாலாட்டி பாலூட்டினார்கள். வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே. அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழைக் கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர். முருகப்பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.